பூஞ்சையானது ஈரப்பதம் மற்றும் சூடான வெப்ப நிலையில் வளரும் ஒரு தொற்றாகும். இவற்றால் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படாது. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
குளிர்சாதனப் பெட்டி முறையற்ற கவனிப்பு காரணமாக அதில் பூஞ்சை வளரும். கெட்டுப்போன உணவை ஃப்ரிட்ஜில் வைப்பது, ஃப்ரிட்ஜை அதிக நாட்கள் அணைத்து வைப்பது, உள்ளே ஈரப்பதம் அதிகம் காணப்படுவது, சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் ஃபிரிட்ஜில் பூஞ்சை வளர ஆரம்பிக்கும். பூஞ்சைகள் முக்கியமாக, குளிர்சாதன பெட்டியின் கேஸ்கெட் மற்றும் அதன் உள்பாகங்களில் காணப்படும். இவை நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. கெட்டுப்போன உணவை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அகற்றுவதன் மூலம் பூஞ்சையை தடுக்க முடியும்.
பூஞ்சை காற்று மூலம் பரவும். உதாரணத்திற்கு, வாங்கி ரொம்ப நாட்களான பழைய சீஸை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் பூஞ்சையின் வித்திகள் சீஸை ஒரு பூஞ்சையாக மாற்றும். இது காற்று சுழற்சியால் ஃபிரிட்ஜில் மற்ற இடத்திற்கும் பரவும். பிரிட்ஜ் நீண்ட நேரம் அணைக்கப்பட்டிருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் பூஞ்சை தோன்றும். நாம் இரண்டு, மூன்று நாட்கள் வெளியூருக்குச் செல்லும்பொழுது ஃப்ரிட்ஜை அணைத்துவிட்டு சென்று திரும்பி வந்ததும் திறந்தால் அதிலுள்ள ஈரப்பதத்தின் காரணமாக பூஞ்சை தொற்று ஏற்பட்டு வாடை வீசும். இதனைத் தவிர்க்க வெளியூருக்கு செல்லும் முன்பு ஃபிரிட்ஜிலிருக்கும் பொருட்களை அகற்றி சுவிட்ச்சை ஆஃப் செய்து ஒரு காட்டன் துணியால் குளிர்சாதனப் பெட்டியினுள் உள்ள ஈரத்தை நன்கு துடைத்து திறந்து வைக்கவும். நன்கு ஈரம் உலர்ந்ததும் மூடி விட்டு சென்றால் பூஞ்சை ஏற்படாது.
ஃப்ரிட்ஜின் உட்புறத்தை சரியாக சுத்தம் செய்யாவிட்டாலும் கூட பூஞ்சை ஏற்படும். குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் அலமாரிகள் மற்றும் அனைத்து பகுதிகளையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். விரைவில் கெட்டுப்போகும் மற்றும் கெட்டுப்போன பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து விடவும். குளிர்சாதனப் பெட்டியின் கதவில் உள்ள கேஸ்கெட் எனப்படும் ரப்பர் பகுதி அடிக்கடி பூஞ்சை சேரும் இடமாகும். அதனை வினிகர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவும்.
பேக்கிங் சோடா கரைசலுடன் கேஸ்கெட்டின் உள்பகுதிகளை துடைக்கவும். பழைய பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு இடுக்குகளை நன்கு சுத்தம் செய்யலாம். ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது சோப்பு நீர் கலந்து பூஞ்சை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அழுத்தி துடைத்து சுத்தம் செய்ய, பூஞ்சைகள் நீங்கும். பிறகு ஈரமான காட்டன் துணியால் துடைத்து உலர விடவும். வெதுவெதுப்பான நீருடன் சிறிது லிக்விட் சோப் கலந்து குளிர்சாதனப் பெட்டியின் கடினமான பரப்புகளில் தடவி சுத்தம் செய்யவும். பிறகு சாதாரண நீர் கொண்டு நன்கு துடைத்து விடவும்.
பூஞ்சைகளை சுத்தம் செய்யும்போது கையில் கையுறைகளை அணிந்து கொண்டு சுத்தம் செய்வது நல்லது. பூஞ்சை ஏற்பட்ட பகுதிகளை மட்டுமல்லாது, குளிர்சாதனப் பெட்டியின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து நன்கு உலர விடவும்.
ஃபிரிட்ஜில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளையும் ஈரம் போக சிறிது நேரம் வெயிலில் காயவைத்து எடுக்கலாம். நன்கு காய்ந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பிரிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் அதனதன் இடத்தில் மீண்டும் வைக்கவும்.