Kavadi Prarthanai for Lord Murugan
Kavadi Prarthanai for Lord Murugan

முருகப்பெருமானுக்கு உகந்த ‘காவுதடி’ பிரார்த்தனை பற்றி அறிவோம்!

Published on

‘காவுதடி’ என்பது சுமை காவுபவர்கள் (சுமப்பவர்கள்) இலகுவாக சுமப்பதற்காக ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளை தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு சுமந்து செல்வது ஆகும். ‘காவுதடி’ என்பதே மருவி பிற்காலத்தில் காவடியானது.

தெய்வங்கள் பல இருந்தாலும் வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத காவடி எடுக்கும் வழக்கம் முருகப்பெருமானுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விசேஷ வழிபாட்டு முறைகள் உண்டு. அதுபோல் முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது மிகவும் விசேஷமானது.

காவடியின் தோற்றம் சிந்து சமவெளி காலத்தில் உருவாகி இருக்கலாம் என்று சான்றுகள் கூறுகின்றன. அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க சூரபத்மனின் நண்பனும் முருக பக்தனுமான இடும்பன் சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை காவு தடியில் சுமந்து கொண்டு பொதிகைமலை நோக்கி சென்றதாகவும், பழநியில் அந்த சுமையை இறக்கி வைத்து விட்டு இளைப்பாறி, மீண்டும் அதை தூக்க முயற்சித்தபோது முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

அப்போது சிறுவனாக முருகப்பெருமான் மலை மேல் இருந்து இடும்பனை கேலி செய்ய, சிறுவனை நோக்கி பாய்ந்த இடும்பன் தவறி மலையிலிருந்து உருண்டு இறந்தான். பிறகு அவனை உயிர்ப்பித்த முருகன் இடும்பனின் கோரிக்கையை ஏற்று இடும்பனை அங்கே காவல் தெய்வமாக இருக்கவும், கோயிலுக்கு காவடி எடுத்து வரும் பக்தர்களின் குறைகளை தீர்க்கவும் வரம் அளித்தார். இதிலிருந்து முருக வழிபாட்டில் காவடி எடுப்பது என்பது ஒரு முக்கியமான அம்சமாக ஆகியது என்றும், எடுத்து வரும் காவடியை இடும்பன் சன்னிதியில் வைத்த பின்னரே எடுப்பது என்னும் வழக்கம் உருவானது என்றும் கூறப்படுகின்றது.

அலகு குத்துதல்: காவடி எடுத்தலில் சிலர் தங்களை வருத்திக்கொண்டு ஏறத்தாழ ஆறு அங்குல நீளம் கொண்ட வெள்ளி வேலை கன்னத்தில் குத்திக் கொள்வதும், சிறிய வேல் ஒன்றை நாக்கில் குத்தியபடியும் காவடி எடுப்பார்கள். இதற்கு, ‘அலகு குத்துதல்’ என்று பெயர்.

செடில் குத்துதல்: தூண்டில் போல் வளைந்த வெள்ளி ஊசிகள் பலவற்றை முதுகில் வரிசையாக குத்தி அந்த ஊசிகளுடன் இணைக்கப்பட்ட கயிறுகளை இன்னொருவர் பிடித்து இழுத்தபடி இருக்க காவடி ஆடுவதற்கு ‘செடில் குத்துதல்’ எனப் பெயர்.

பறவை காவடி: உடலின் பல பகுதிகளில் வளைந்த வெள்ளி ஊசிகளை குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புகளில் இருந்து தொங்கவிட்டபடி ஊர்வலமாக வருவர். காவடி எடுப்பவர் முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கினால் அதற்கு ‘பறவைக் காவடி’ எனப் பெயர்.

இருக்கும் நிலையில் தொங்குவதற்கு ‘தூக்கு காவடி’ எனப் பெயர். பறவை காவடியிலும், தூக்கு காவடியிலும் காவடி எடுப்பவர் தோளில் சுமையை சுமப்பதில்லை. அவரே காவடியில் சுமை போல் சுமக்கப்படுவதைக் காணலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!
Kavadi Prarthanai for Lord Murugan

பால் காவடி, பன்னீர் காவடி, மச்சக்காவடி, சர்ப்ப காவடி, வேல் காவடி, கற்பூர காவடி, சந்தன காவடி, மயிர் தோகை அலங்கார காவடி, தயிர் காவடி என காவடிகளில் 20 வகைகள் உள்ளதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகை காவடிக்கும் ஒவ்வொரு வகை பலன் உள்ளது.

அன்னக்காவடி எடுப்பது வறுமை நீங்கவும், சர்ப்ப காவடி குழந்தை வரம் வேண்டியும்,  சேவல் காவடி எதிரிகள் தொல்லை நீங்கவும், மச்சக்காவடி வழக்கு விஷயங்களில் இருந்து விடுபடவும், நேர்மையான தீர்ப்புகள் கிடைக்கவும், மயில் காவடி குடும்பத்தில் இன்பம் நிறையவும், குடும்பப் பிரச்னைகள் தீரவும், வேல் காவடி எதிரிகள் நம்மைப் பார்த்து அஞ்சிடவும், தங்கக் காவடி நீடித்த புகழ் பெறவும், வெள்ளி காவடி ஆரோக்கியம் பெறவும், பால் காவடி செல்வ செழிப்பு உண்டாகவும், சந்தனக் காவடி வியாதிகள் நீங்கவும், பன்னீர் காவடி மனநல குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியமாக இருக்கவும், சர்க்கரை காவடி மழலை செல்வம் பெறவும், அக்னி காவடி திருஷ்டி தோஷம் நீங்கவும் என ஒவ்வொரு காவடிக்கும் அதற்கான பலன்கள் உண்டு. எனவே, முருகன் மீது முழு நம்பிக்கையுடன் விரதம் இருந்து காவடி எடுக்க அவனருளால் வேண்டியது அனைத்தும் கிட்டும்.

logo
Kalki Online
kalkionline.com