அப்பர்சுவாமி கோவில் 19 ஆம் நூற்றாண்டைைச் சேர்ந்த அப்பர் சுவாமியின் நினைவாக கட்டப்பட்ட கோவில். திருநாவுக்கரசர் வேறு இந்த சிவனடியாரான அப்பர் சுவாமிகள் வேறு. அப்பர்சுவாமி ஒரு சிறந்த சிவ பக்தர். முழு நேரமும் தியானத்திலும் முக்தியை தேடுவதிலுமே இருந்தவர். 18 சித்தர்கள் வரிசையில் அப்பர் சுவாமிகள் இல்லையென்றாலும் இன்றும் சித்து விளையாட்டுகளை நிகழ்த்திக் கொண்டுதான் உள்ளார்.
இந்த அப்பர்சுவாமி கோவில் மயிலாப்பூரில் ராயப்பேட்டை ஹை ரோடில் சமஸ்கிருத கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ளது. லஸ் ஆஞ்சநேயர் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. கோவில் அவருடைய கல்லறையை சுற்றி கட்டப்பட்டுள்ளது. அவரது பிரதான பக்தர் சிதம்பர சாமியார் கல்லறை மீது சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து 1853 ஆம் ஆண்டு இக்கோவிலை கட்டினார். ஜீவசமாதிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் விஸ்வநாதர் என்ற திருப்பெயரிலும், அம்பாள் விசாலாட்சி தனி சன்னிதியிலும் வீற்றிருக்கிறாள்.
விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகிய கோஷ்ட சிலைகள் கருவறை சுவர்களில் அமைந்துள்ளன. உள் பிரகாரத்தில் வீரபத்திரர், சண்டிகேஸ்வரர், அப்பர் சுவாமிகள் அமர்ந்த நிலையில் உற்சவமூர்த்தியையும் காணலாம். மண்டபத்தின் முன்புறம் நீதி விநாயகர், வள்ளி தேவசேனாவுடன் முருகப்பெருமான், கால பைரவர் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன.
கண் திருஷ்டியின் விளைவுகளை நீக்கும் அற்புதமான ஆலயம் இது. மக்கள் வெகு தொலைவில் இருந்து எல்லாம் வந்து இறைவனின் அருளை பெற்று செல்கின்றனர்.
அப்பர் சுவாமிகள் 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பிரம்ம சமாதி அடைந்தார். அவருடைய சீடர் சிதம்பர சுவாமிகள் அவரது சமாதிக்கு மேல் சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளச் செய்து 16 கால் மண்டபம் கட்டினார். இக்கோவிலில் குருபூஜை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் நடைபெறும் அப்பர் சுவாமிகள் குருபூஜை மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
இங்கு தியான மண்டபம் என்று தனியாக அமைந்துள்ளது. இங்கு நிறைய பேர் மனம் ஒன்றிய தியானம் செய்ய வருகின்றனர்.
இக்கோவிலில் எல்லாவிதமான தடைகளையும் நீக்கும் அரச மரத்தடியில் வீற்றிருக்கும் 'வலம்புரி விநாயகர்', திருமண வரமளிக்கும் 'ஜெய விநாயகர்', நியாயமான வழக்கில் வெற்றி தரும் 'நீதி விநாயகர்', தோஷங்களை சரி செய்யும் நவக்கிரகங்கள் என அமைந்துள்ளன. வலம்புரி விநாயகர், ஜெய விநாயகர் மற்றும் நீதி விநாயகர் என ஒரு சன்னிதியில் மூன்று விநாயகர்கள் அமைந்திருப்பது சிறப்பாகும்.
ஒரு மனிதனுக்கு எப்படி முதுகெலும்பு முக்கியமோ அது போல் தான் ஒரு ஆலயத்திற்கு கொடிமரமும். இந்த ஆலயத்தில் அமைந்துள்ள கொடி மரத்தில் செதுக்கப்பட்டு புடைப்புச் சிற்பமாக இருக்கும் சிவபெருமானுக்கு, அவரவரது ஜென்ம நட்சத்திர தினத்தில் பரிகார பூஜை செய்து, வஸ்திரம் சார்த்தி வணங்கி வழிபட, எலும்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
குழந்தை வேண்டி நிற்கும் தம்பதியினர் ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தில் வந்து தாயுமானவர் சன்னதியில் வாழைப்பழம் வைத்து நிவேதனம் செய்து அவற்றை அர்ச்சகரிடமிருந்து பெற்று கோவிலை வலம் வந்து கொடிமரம் அருகே வணங்கி வாழைப்பழ பிரசாதத்தை இருவரும் சேர்ந்து சாப்பிட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தை பிறந்த மூன்று மாதங்கள் கழித்து வாழைத்தார் வைத்து பிரார்த்தனையை முடிப்பது வழக்கம்.