பிரம்மா இல்லாமல் முப்பெருங்கடவுள் ஆலயம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘ஆயிரம் தூண் ஆலயம்’ என்றழைக்கப்படும் ஆலயத்தில் யார் அந்த மூன்றாவது பெருங்கடவுள்?
தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ஹனுமக் கொண்டா என்ற இடத்தில் வரலாற்றுச் சிறப்புடைய ருத்திரேஷ்வர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை ஆயிரம் தூண் ஆலயம் (Thousand Pillar Temple) என்றே அழைக்கின்றனர். காகத்திய வம்ச மன்னர் ருத்ரதேவன் என்பவரால் கி.பி. 1175 முதல் கி.பி. 1324 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் காகத்திய வம்சத்தின் கட்டடக் கலைகளில் தலைசிறந்ததாய்க் கருதப்படுகிறது.
நட்சத்திர அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 'ஆயிரம் தூண் ஆலயம்', கல்லிலேச் செதுக்கப்பட்ட யானை வரிசையும், துளைத்துச் செதுக்கப்பட்ட ஜன்னல் அமைப்புகளும் காக்கத்திய வம்சத்தின் கட்டடக் கலையின் நுணுக்கத்திற்குச் சான்றாக உள்ளது.
கோயிலில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன. மேலும் சிக்கலான செதுக்கப்பட்ட வடிவியல் வடிவமைப்புகளில் முக்கால்வாசி புடைப்புகள் உள்ளன. வெளிப்புறச் சுவர்களில் உள்ள சிற்பங்கள் மிகச்சிறப்பானவை. கோயிலுக்குள் நுழையும் போது, நுழைவாயிலின் இருபுறமும் யானைகளின் அழகிய சிற்பங்கள் பார்வையாளர்களை வரவேற்கின்றன.
இக்கோயிலின் உட்புறம் சிவன், திருமால், சூரியன் என்று மூவருக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, மற்ற இரண்டு சன்னதிகள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ளன. காகதீய ஆட்சியாளர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தனர். மேலும் அவர்கள், அதிகாலையில் சூரியனின் கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது பட வேண்டும் என்று விரும்பினர். திருமால் மற்றும் சூரியனின் சன்னதிகள் ஒரு சதுர வடிவ மண்டபத்தின் வழியாக சிவனுடன் இணைகின்றன. இக்கோயிலினுள் பல்வேறு தெய்வங்களுக்கான சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு. பிரம்மா, சிவன், திருமால் என்றழைக்கப்படும் முப்பெருங்கடவுள்களில் இங்கு பிரம்மாவிற்குப் பதில், சூரியன் மூன்றாவது பெருங்கடவுளாக இடம் பெற்றிருப்பதால், இந்தக் கோயில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இக்கோயில் ஆயிரம் தூண்களால் அமைக்கப்பட்டு இருந்தாலும், கோயிலின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும், நடுவிலுள்ள பெரிய சிவலிங்கத்தை எந்தத் தூண்களும் மறைக்காமல் இருக்கும் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் முன்புறம் ஒற்றைக் கல்லினால் ஆன பெரிய கருங்கல் நந்தி ஒன்று இருக்கிறது. தற்போதும் இந்த நந்தி பளபளப்பாய்க் காணப்படுகிறது. கோயிலின் முன்புறம் பசுமையான புல்வெளி உள்ளது.
தக்கணப் பிரதேசத்தைப் படையெடுத்த துக்ளக் மன்னரால் இந்தக் கோவில் சிதைக்கப்பட்டது. அதன் பிறகு, இக்கோயிலின் பாதிக்கப்பட்ட தூண்கள் அனைத்தும் 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் தூண் ஆலயம் இக்கோயிலை நிரந்தர உலகப் பாரம்பரிய களமாக 25 சூலை 2021 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.