

பெருமாள் கோவில்களில் வீற்றிருக்கும் கருடாழ்வார்கள் பெருமாளுக்கு வாகனமாகவும், அதேசமயம் மூலவருக்கு இணையாக வழிபடப்படும் சக்தியாகவும் போற்றப் படுகின்றனர். வானில் கருடன் பறந்து வருவதைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. கருடன் என்பது செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு, உடலின் நடுப்பகுதி வெண்ணிறமாக காணப்படும் செம்பருந்து என்ற பறவையைக் குறிக்கும். இவை மங்களம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இவை வானத்தில் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது திருக்கோவில் குடமுழுக்கு, வேள்வி போன்ற சிறப்பு வழிபாடுகள் நிகழும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனமாக நம்பப்படுகிறது.
பொன்மார்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பொன்மார் கிராமத்தில் உள்ள தியாக வினோதப் பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் மற்ற கோவில்களில் இல்லாத வகையில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், வலது கீழ் கரத்தினை அபய ஹஸ்த நிலையிலும், இடது கீழ் திருக்கரத்தில் சர்ப்பத்தை ஏந்தியும் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும்.
சௌகார்பேட்டை:
சென்னை பாரிமுனை சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா தெருவில் உள்ள 500 வருடங்கள் பழமையான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருடாழ்வார் பெண் வடிவில் (கருடி) காட்சி தருகிறார். காதணி, மூக்கணி மற்றும் புடவை அணிந்த கோலத்தில் பெண் வடிவில் காட்சி தரும் இவர், வைகாசி மாதம் நடைபெறும் கருட சேவையில் தாயாருக்கு கருட வாகனமாக இருந்து சேவை சாதிக்கிறார். தீமைகள் மறைந்து, நல்லது பெருக இந்த கருடனுக்கு சிதறுதேங்காய் உடைத்து வழிபடுவது வழக்கம்.
திருவள்ளூர் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவில்:
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து ஓசிஎப் வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பதாகையில் உள்ள கருடன் அமர்ந்த நிலையில் தியானம் செய்வது போன்ற அபூர்வ கோலத்தில் காணப்படுகிறார். இங்கு கருடாழ்வார் 12 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவரை வழிபட கவலைகள் தீரும் என்பது நம்பிக்கை.
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில் கருடாழ்வார் கைகளை கட்டிக்கொண்டு பெருமாளுக்கு சேவகம் செய்யும் நிலையில் காட்சியளிப்பது மிகவும் அபூர்வமானது. பொதுவாக பெருமாள் கோவில்களில் அஞ்சலி முத்தரையுடன் காணப்படும் கருடாழ்வார், இங்கு இரு கைகளையும் கட்டிக்கொண்டு திரிபுர சம்ஹாரத்தின் போது பெருமாளிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்ற நிகழ்வை குறிக்கும் வகையில் காட்சி தருகிறார்.
திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள் கோவில்:
திருவாரூர் அருகிலுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை கோவிலில் உள்ள கருடாழ்வார் பெருமாளின் அருளை உடனே பெற்றுத்தரும் "அதிசய கருடாழ்வார்" என்று போற்றப்படுகிறார். இங்கு கருடாழ்வார் நின்ற கோலத்தில் கையில் சங்கு மற்றும் சக்கரம் தரித்து சேவை சாதிக்கிறார். இவரை வணங்க திருமண பாக்கியம், நாக தோஷம் நீங்குதல் மற்றும் பயம் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
நாச்சியார் கோவில் கல் கருடன்:
கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவில் கல் கருடன் உலகப் புகழ் பெற்றவர். வருடத்தில் இரண்டு முறை மார்கழி வைகுண்ட ஏகாதசிக்கு 4 நாட்கள் முன்பு, பங்குனி மாதம் பௌர்ணமிக்கு 5 நாட்கள் முன்பு என இரண்டு முறை திருவீதி உலா நடைபெறும். கருவறையில் இருந்து 4 பேர் கருடனை தூக்கி வர, சன்னதி கடக்கும்போது 7 பேராகி, வெளிவரும் பொழுது நேரம் ஆக ஆக எடை கூடிக்கொண்டே போவார். 8 பேர் தூக்கி வரும் கருட பகவான் திருவெண்நாழி மண்டபத்தில் 16 நபர்களை தூக்க வைத்துவிடுவார். ராமர் சன்னதியை அடையும் பொழுது 32 ஆகி, சப்பரத்தில் எழுந்தருளச் செய்யும்பொழுது 64 பேர் ஆகிவிடுவார்கள்.
திருவெள்ளியங்குடி ஸ்ரீ கோலவில்லி ராமர் கோவில்:
கும்பகோணம்-அணைக்கரை சாலையில் உள்ள ஸ்ரீ கோலவில்லி ராமர் கோவிலில் உள்ள கருடாழ்வார் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி 4 கரங்களுடன் காட்சி தருகிறார். அசுரர்களின் சிற்பி மயன் திருமாலிடம் ராம அவதாரத்தை தரிசிக்கவேண்டி தவம் செய்ததால் பெருமாள் ராமர் கோலத்தில் காட்சி தருகிறார். ராமர் கோலத்தில் பெருமாள் காட்சி தந்ததால், தனது சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் ஒப்படைத்ததாக தல வரலாறு கூறுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் செப்பு சிலையாக மிக உயரமான கருடாழ்வார் தனி சன்னதி உள்ளது. இதுபோன்ற ஒரு பெரிய வடிவிலான கருடாழ்வார் வைணக்கோயில்களில் வேறு எங்கும் கிடையாது.