நாளை அதிகாலை ஆடல் வல்லானுக்கு ஆனி திருமஞ்சனம்!

சிதம்பரம் ஆனி திருமஞ்சன வைபவம்
சிதம்பரம் ஆனி திருமஞ்சன வைபவம்

ம் தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் திருக்கோயில் அமைந்துள்ளது.  இந்தத் தலத்தின் மிக முக்கியமான இரண்டு விசேஷங்கள் மார்கழியில் ஆருத்ரா தரிசனம், ஆனியில் திருமஞ்சனம்.  திருமஞ்சனம் என்றால் அபிஷேகம்.

ஆடல் வல்லான்  நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.  ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது.  உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதமே ஆனி மாதம். இது  தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக மலர்கிறது.

இந்த மாதத்தில் மிதுன ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார்.  இது தேவர்களின் மாலைப்பொழுது என்று கூறப்படுகிறது. மேலும், ஆனி மாதம் இளவேனிற் காலம்.  கடுங்கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசி நம்மை குளிர்விக்கும். இந்த மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகமே ஆனி திருமஞ்சனம் என்று சிறப்பித்து சொல்லப்படுகிறது.  இதைத்தவிர, சித்திரை மாத திருவோணம், மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் திருமஞ்சனம் நடைபெறும்.

ஆனி திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி.  இவர் ஆதிசேஷனின் அம்சம்.  இந்த விழா சிதம்பரத்தில் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த்திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவது கண்கொள்ளா காட்சி.  மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
குளவிகள் வீட்டில் கூடு கட்டுவது அதிர்ஷ்டமா?
சிதம்பரம் ஆனி திருமஞ்சன வைபவம்

இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன 10 நாள் விழா கொடியேற்றத்துடன் இம்மாதம் 3ம் தேதியன்று அன்று ஆரம்பித்து கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனி மாத திருமஞ்சனம் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெற்றாலும், மிக விசேஷமாக சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது.

இந்த வருடம் ஆனி திருமஞ்சன மஹா அபிஷேகம் நாளை ஜூலை மாதம் 12ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை)  உத்திர நட்சத்திரத்தில் அதிகாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஆனி திருமஞ்சனத்தின்போது சித்தர் பெருமக்களும், ரிஷிகளும் ஸ்ரீ நடராஜரை தரிசிக்க ஆவலாக இருப்பார்களாம்.  நாமும் ஆனி திருமஞ்சனம் அன்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசித்தால்  அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com