நாகர்கோவிலில் நகருக்கு நடுவில் அமைந்துள்ளது நாகராஜா கோயில். இது நாக வழிபாட்டிற்கு என்றே தனியாக இருக்கும் கோயில். இதன் கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டிருப்பது சிறப்பம்சம். இங்கு நாகராஜர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணே முக்கிய பிரசாதம். இது 6 மாத காலம் கருப்பு நிறமாகவும், 6 மாத காலம் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷம். தமிழகத்தில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் பாம்பே மூலவர்.
அதே போல் விழுப்புரம் மாவட்டம், தும்பூர் தாங்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள நாகம்மன் திருக்கோவிலிலும் பாம்பே மூலவர். தொன்மையான வரலாறும், பெருமையும் கொண்டதாக இது விளங்குகிறது. அன்னையின் தலைப்பகுதி மட்டும் 5½ அடி அகலமும், 3½ அடி நீளமும் கொண்டதாகும் உள்ளது. இங்கு பாம்பின் தலையை மட்டும் காணலாம். நடு உடலை ஒரிடத்திலும், வாலை 10 கிமீ தள்ளி ஒரு அம்மன் கோவிலிலும் காணலாம். தும்பூரில் தாங்கல் நாகம்மனின் தலைப்பகுதி ஆலயமாக விளங்குவது போல, நடுப்பகுதி ஆலயத்தின் பின்புறம் சுமார் 300 அடி தூரத்தில் தெற்கே பூமிக்கு வெளியே காணப்படுகிறது. இது மண்வெட்டியால் வெட்டப்பட்டு, காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
தும்பூர் தாங்கல் நாகம்மன் ஆலயத்திற்குத் தென்மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் இவ்வாலயத்தோடு தொடர்புடைய பழம்பெரும் தேவாரத் தலமான, திருவாமாத்தூர் அருள் மிகு முத்தாம்பிகை உடனாய அருள்மிகு அபிராமேஸ்வரர் ஆலயம் உள்ளது. தனிக்கோயிலாக விளங்கும் முத்தாம்பிகை அம்மனே நாகமாக வந்து தர்மத்தையும், சத்தியத்தையும் நிலை நாட்டியதாகக் கூறப்படுகின்றது. தும்பூர் தாங்கலில் வெளியே காட்சி தரும் நாகத்தின் நிறைவுப் பகுதியான வால், முத்தாம்பிகையின் திருமேனியில் இன்றும் காணப்படுகிறது. இதனை அபிஷேக காலங்களில் மட்டுமே காண முடியும்.
நாகர்களே கோயில் கட்டி சுவாமியை பூஜித்ததாக ஐதீகம் உள்ள தலம் சங்கரன்கோவில் சங்கரநாராயணன் சுவாமி திருக்கோயில். இதனால் தான் இங்கு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் பற்று போட்டால் கை கால் ஊனம், பலவீனத்தை போக்கும். இங்கு ஆடித்தபசு திருவிழாவின் போது மக்கள் தங்களின் வயல்களில் விளைந்த காய்கறிகளை சுவாமி மற்றும் அம்பாள் மீது வீசி வழிபடுவது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது நாகநாதர் கோயில். இங்குள்ள சிவ லிங்கத்தை சுற்றி நாகங்கள் உள்ளது. இந்தக் கோவில் நாகதோஷம் நீக்கும் பரிகார தலமாக இருப்பதால், நிறைய பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து 19 கிமீ தொலைவில் உள்ளது நயினார்கோவில் பலவிதமான துன்பங்களுக்கு பரிகாரஸ்தலமாக உள்ளது தமிழகத்தின் மிகவும் பழமை வாய்ந்த கோவில். நாக தோஷம் நீங்க வழிபட வேண்டிய முக்கிய ஸ்தலம். இங்குள்ள புற்றின் முன் சிவன் நாக வடிவில் காட்சி தந்தார் என்பதால் இவர் நாகநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயில் கொடி மரம் அருகில் ஐந்து தலை நாக சிலை உள்ளது. பக்தர்கள் நாகதோஷம் போக்க இவர் மீது உப்பை கொட்டி பிரார்த்தனை செய்கின்றனர். அமாவாசை அன்று பக்தர்கள் விரதமிருந்து நாகதோஷம் போக்க வருகிறார்கள். முகத்தில் கரும் புள்ளிகள் உள்ளவர்கள் அங்குள்ள நாகநாத சுவாமிக்கு அடுப்புக்கரியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். இதன் மூலம் நிரந்தரமாக கரும்புள்ளிகள் வராது என்பது நம்பிக்கை.
திருநெல்வேலி குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் என்பது திருநெல்வேலி நகர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். எந்த கோவிலிலும் இல்லாத ஒரு அதிசயம் இக்கோவிலில் உள்ளது. அது என்னவென்றால் மூலவர் கயிலாசநாதர் நெஞ்சில் சர்ப்பம் ஒன்று உள்ளது. இதை எப்போதும் காண முடியாது. அபிஷேக நேரத்தில் மட்டுமே இதைப் பார்க்க முடியும். கோவிலுக்கு வெளியில் உள்ள நந்திய பெருமான் எழுந்து நிற்க முயல்வது போல் அபூர்வமாக காட்சியளிக்கிறார். மேலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய பன்னிரண்டு கரங்களுடன் ஆறுமுக நயினார் சன்னிதி உள்ளது. இங்குள்ள பைரவர் சிலையின் இடுப்பிலும், மார்பிலும் பாம்பு உண்டு. இது மாதிரி வேறு எங்கும் இல்லை. இத்தலமானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும்.