
ஆடி மாதமே விசேஷமான மாதம்தான். அதில் ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜை, அலங்காரங்கள், கூழ் ஊற்றுதல், தீ மிதி உத்ஸவம் என கோலாகலமாக நடைபெறும். அதைத் தவிர, ஆடிப்பூரத்தன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். இது சைவ, வைஷ்ணவ கோயில்கள் அனைத்திலும் நடைபெறும்.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான, 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி'யான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம் ஆடிப்பூரம். மகாலட்சுமியின் மறு அவதாரமான ஆண்டாளின் அவதார தினத்தையே ஆடிப்பூரம், ஆண்டாள் ஜயந்தி என்று பலவாறாகக் கொண்டாடுகிறோம்.
பொதுவாக, ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டாள் நாச்சியார் மட்டுமின்றி, அன்னை பார்வதியும் மண்ணில் அவதாரம் எடுத்தது ஆடிப்பூரத்தன்றே என்று சொல்லப்படுகிறது. உலகத்திற்கே தாயாக விளங்கும் அன்னை பராசக்திக்கு ஆடி மாதத்தில் வளைகாப்பு விசேஷம் நடத்தப்படுகிறது. ஒரு வருடத்தில் ஆடிப்பூரத்தன்று மட்டுமே அம்மன் கோயில்களில் வளைகாப்பு விசேஷம் நடத்தப்படுகிறது. அப்போது பக்தர்கள் அம்மனுக்கு வளையல்கள், மஞ்சள், குங்குமம், தாம்பூலம், பழங்கள், புஷ்பம் போன்றவற்றை காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம்.
வளைகாப்பு முடிந்ததும், அம்மனுக்கு அணிவித்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். கோயிலில் பிரசாதமாகக் கிடைக்கும் வளையலை பெண்கள் அணிந்து கொண்டால் குழந்தை பாக்கியமும், திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக, தங்கள் வீட்டுப் பெண்ணிற்கோ அல்லது மருமகளுக்கோ வளைகாப்பு வைபவம் நடைபெற வேண்டுமென்று வேண்டிக் கொண்டு அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று வளையல்கள் காணிக்கையாக அளிப்பார்கள்.
ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் வழக்கம் ஏன் வந்தது என்பதற்கு ஒரு வரலாற்றுக் கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் ஒரு ஆடி மாதத்தில் அம்மனுக்கும் சிவனுக்கும் திருவிழா நடைபெற்றது. விழா முடிந்து கூட்டம் அனைத்தும் சென்ற பிறகு அந்த இடத்திற்கு ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் வந்தாள். சற்று ஓய்வு எடுக்க எண்ணி அமர்ந்த அந்தப் பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கோயிலில் யாருமே இல்லாததால், அந்தப் பெண்ணிற்கு பயம் ஏற்பட்டாலும், அன்னை பராசக்தி தன்னைக் கைவிட மாட்டாள் என்ற தீவிர நம்பிக்கையும் ஏற்பட்டது.
அவளது நம்பிக்கையின்படியே அம்பிகை ஒரு மருத்துவச்சி உருவத்தில் வந்து அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்தாள். தனக்குப் பிரசவம் பார்க்க வந்திருப்பது அன்னை பராசக்திதான் என்று உணர்ந்த அந்தப் பெண், அம்பிகை ஒரு பக்தைக்காக இறங்கி வந்த இந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அம்பிகையிடம் வரமாகக் கேட்கிறாள். அன்றைய தினம் ஆடிப்பூரம். அம்பிகையும் அந்த நாளை வளைகாப்பு திருவிழாவாகக் கொண்டாட அப்பெண்ணுக்கு வரம் தந்தருளினாள்.
அப்பெண்ணிற்கு வரம் அளித்தபடி சகல அம்மன் ஆலயங்களிலும் ஆடிப்பூரத்தன்று அன்னை பராசக்திக்கு வளைகாப்பு வைபவம் நடத்தப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வீட்டுக்கருகிலுள்ள கோயிலிலுள்ள அம்மனுக்கு வளையல்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அந்த உத்ஸவத்தில் கலந்து கொள்கிறார்கள்.
கொட்டிவாக்கம் ஈ.சி.ஆர். நெடுஞ்சாலையில் ஆக்ஸிஸ் வங்கி அருகே அருள்மிகு ஸ்ரீ அணையாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கேயும் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு உத்ஸவம் வருடா வருடம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்தக் கோயிலில் நாம் காணிக்கையாகக் கொண்டு செல்லும் வளையல்களை நம்மை விட்டே ஸ்ரீ அணையாத்தமனுக்கு அணிவிக்கச் சொல்கிறார்கள்.
ஆடிப்பூரத்தன்று மாலை உத்ஸவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு வளையல் அலங்காரம், பூஜை எல்லாம் முடிந்து தீபாராதனை ஆனவுடன், திருமணமான பெண்கள் எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்து அவர்கள் கையில் இரண்டு வளையல்களைக் கொடுத்து உத்ஸவரின் இரண்டு கைகளிலும் கைக்கொன்றாக அணிவிக்கச் சொல்கிறார்கள். அதோடு, அவர்களுக்கும் இரண்டு பிரசாத வளையல்களை அளிக்கிறார்கள். வளைகாப்பிற்காக அம்மனுக்கு பக்தர்கள் வாங்கி வரும் புதுப் புடைவைகள், மங்கலப் பொருட்கள் எல்லாம் மேடை மேல் தட்டு தட்டாக வைக்கப்பட்டிருக்கும். அதேபோல சித்திரான்னங்கள், இனிப்பு வகைகள், பருப்பு தேங்காய் உட்பட பலவிதமான பிரசாதங்களை பக்தர்கள் ஆர்வத்தோடு கொண்டு வந்து அம்மனுக்கெதிரே வைப்பார்கள். கோலாகலமான வளைகாப்பு திருவிழா முடிந்தவுடன் அந்தப் பிரசாதங்களை பக்தர்கள் அனைவருக்கும் வினியோகம் செய்வார்கள்.
நாளை (28.07.2025) திங்கட்கிழமை ஆடிப்பூரம் தினமாகும். இன்று பக்தர்கள் தங்கள் வீட்டிற்கருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று இந்த வளைகாப்பு வைபவத்தில் பங்கு பெற்று அம்மன் அருளால் சகல சௌபாக்கியங்கள் பெற்று வாழலாம்