குடும்ப நலம் காக்கும் ‘நாக சதுர்த்தி’... சகோதரர் நலம் காக்கும் ‘கருட பஞ்சமி’!

இவ்விரு விரதங்களும் நாக தோஷங்கள் நீங்க, குடும்ப நலம் மற்றும் சகோதரர்களின் பாதுகாப்பிற்காக அனுசரிக்கப் படுகின்றன.
கருட பஞ்சமி
கருட பஞ்சமிAI Image
Updated on

நாக சதுர்த்தி மற்றும் கருடபஞ்சமி ஆகிய இரண்டும், ஆடி அல்லது ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதிகளில் கொண்டாடப்படும் முக்கியமான ஆன்மீக விரத நாள்களாகும். நாக சதுர்த்தியன்று நாக தெய்வங்களையும் (ஆதிசேஷன்), கருட பஞ்சமியன்று பெருமாளின் வாகனமான விஷத்தை நீக்கும் கருட பகவானையும் நாக தெய்வங்களையும் பெண்கள் தங்கள் குடும்ப நலம், புத்திர பேறு மற்றும் சகோதரர்களின் பாதுகாப்பிற்காக விரதமிருந்து வழிபடுகின்றனர். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும், அவற்றுள் சில முக்கிய வேற்றுமைகள் உள்ளன.

நாக சதுர்த்தி அன்று பாம்பின் உருவங்களை வரைந்தோ அல்லது புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டு கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளை (உப்பில்லா உணவு அல்லது பலகாரம்) கடைபிடிக்கின்றனர்.

கருட பஞ்சமி அன்று வைணவ முறைப்படி கருட பகவானையும் மகாவிஷ்ணுவையும் பூஜித்து விரதத்தை நிறைவு செய்வர். இரண்டும் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அடுத்தடுத்த வழிபாட்டு நாட்களாகும்.

நாக சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 16-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்றும், கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமி இரண்டும் இணைந்து ஆகஸ்ட் 17-ம்தேதி (திங்கட்கிழமை) அன்றும் அனுசரிக்கப்படுகிறது.

இவ்விரு விரதங்களும் நாக தோஷங்கள் நீங்க, குடும்ப நலம் மற்றும் சகோதரர்களின் பாதுகாப்பிற்காக அனுசரிக்கப்படுகின்றன.

நாக சதுர்த்தி:

சதுர்த்தி திதியன்று நாக தேவதைகளை வழிபட்டு விரதம் இருப்பது நல்லது. அன்று புற்றுள்ள கோயில்களுக்குச் சென்று பால் வார்த்து, துள்ளுமாவு படைத்து வழிபடுவர்.

நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் ‘நாக சதுர்த்தி’ ஆகும். நாக சதுர்த்தி என்பது சர்ப்ப தோஷங்கள், கால சர்ப்ப தோஷம் மற்றும் வம்ச வழியிலான நாக தோஷங்களை நீக்கக் கடைப்பிடிக்கப்படும் மிக முக்கியமான விரத நாளாகும். இந்நாளில் பெண்கள் விரதமிருந்து நாகப் சிலைக்கும், புற்றுகளுக்கும் பால் வார்த்து பூஜை செய்வர்.

இந்நாளில் நாக தெய்வங்களை உளமாற வழிபடுவதால் குடும்பத்தில் தடைபட்ட காரியங்கள் கைகூடும்.

ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரும் சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதாவது கருட பஞ்சமிக்கு முந்தைய நாள் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி 'நாக சதுர்த்தி' என்று அழைக்கப்படுகிறது.

பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

இந்த சிறப்புமிக்க நாக சதுர்த்தி இந்த ஆண்டு வரும் ஆகஸ்டு 16-ம்தேதி (ஞாயிற்று கிழமை) வருகிறது. குடும்பத்தில் பிரச்சனை, வழக்குகள், கண் திருஷ்டி, தீய சக்திகள், விபத்துக்களில் சிக்குவது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை இல்லாதது, திருமணத்தில் தடை, குழந்தை பிறப்பில் தடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாக சதுர்த்தி அன்று விரதம் இருக்கலாம்.

நாக சதுர்த்தி
நாக சதுர்த்திAI Image

சர்ப்ப தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் விரதம் இருப்பது மிகச் சிறந்த பலனைத்தரும்.

நாக சதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்.

கருட பஞ்சமி:

அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான விரதப் பண்டிகையாகும். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படும் இத்தினம், திருமாலின் வாகனமான கருட பகவான் அவதரித்த புனித நாளாக கருதப்படுகிறது. சில பகுதிகளில் நாக பஞ்சமியும் இத்துடன் இணைந்தே வருகிறது.

இந்நாளில் கருடனையும், நாக தெய்வங்களையும் வழிபடுவது கால சர்ப்ப தோஷம், குஜ தோஷம், நாக தோஷங்களை நீக்கி, குடும்பத்திற்கு வலிமையும் பாதுகாப்பும் தரும் என்பது ஐதீகம். மேலும் தங்களின் சகோதரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காகச் பெண்கள் நாக தேவதையையும், கருடனையும் வேண்டி வழிபடும் மரபு உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜூலை 29, கருட பஞ்சமி: வீட்டில் கருடன் வட்டமிட்டால்... உங்கள் தலைவிதி மாறும் நேரம் இது!
கருட பஞ்சமி

சிறப்பு வாய்ந்த கருட பஞ்சமி இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 17-ம்தேதி (திங்கள் கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

- நாக சதுர்த்தியன்று அன்று பெண்கள் நோன்பிருந்து, புற்றுக்கு பால் வார்த்து பின் வீட்டில் 7 முடி போட்ட நோன்புக் கயிறு அணிந்து பூஜை செய்து கணவருக்காக வேண்டிக்கொள்வர்.

மறுநாளும் புற்றுக்குச் சென்று பால்வார்த்த பின் புற்று மண் எடுத்து வந்து சகோதரரின் வலது காதில் வைப்பார்கள். இதனால் சகோதர ஒற்றுமை உண்டாகும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
ஜாதகத்தில் நாக தோஷம் ஏற்படுவது ஏன்? அதன் பாதிப்புகளும் தீர்வு முறைகளும்...
கருட பஞ்சமி

கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் நாக சதுர்த்தி அன்றும், சகோதரர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் தீர்க்காயுளுக்காகவும் கருடபஞ்சமி அன்றும் விரதம் இருந்து வழிபடுவோம்.

logo
Kalki Online
kalkionline.com