கருடன் என்பவர் ஹிந்து புராணங்களில் விஷ்ணு பகவானின் வாகனமாக கருதப்படும் ஒரு பறவை. இவர் பறவைகளின் அரசனாகவும் வலிமை மற்றும் விழிப்புணர்வின் கடவுளாகவும் கருதப்படுகிறார். கருடன் பலப்புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் விஷ்ணுவின் வாகனமாக இருப்பதுடன் அமிர்த கலசத்தை எடுத்து வந்ததாகவும், புராணங்களில் கூறப்படுகிறது
தோற்றம்
கருடன் காசிபர் மற்றும் வினவை தம்பதியருக்கு பிறந்தவர். அருணன் இவரின் தம்பி. இவர் சூரியனின் தேரை ஓட்டுபவர். கத்ரு மற்றும் காசிபரின் மகன்களான நாகர்கள் கருடனின் எதிரிகளாக கருதப்படுகிறார்கள்.
கருடனின் வேறு பெயர்கள்
கருடனுக்கு பெரிய திருவடி, விஷ்ணுப்பிரியன் , விஹா கேஸ்வரன் வைந தேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன் போன்ற பெயர்களும் உண்டு.
கருடனின் அபூர்வ சக்திகள்
பிறரை வசியம் செய்வது.
பகைவர்களை அடக்குவது.
உணர்வை வற்ற வைப்பது
மயங்க வைத்தல்.
வானத்தில் உலாவுவது.
காற்று நீர் நெருப்புகளில் அச்சமின்றி போவது
இந்திரஜாலம் காட்டுவது.
படிப்பில் தேர்ச்சி.
நல்ல ஞாபக சக்தி. வாதத்திலும் போரிலும் வெற்றி பெறுதல் .
தசாபுத்தியில் அந்த திசைக்குரிய கிழமையில் ஸ்ரீகருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி அமுத கலசம் எனும் இனிப்பை படைத்து வழிபட்டால் , வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் நீங்கி விடும்.
அமிர்தக் குடத்தை எடுத்து வர தேவலோகம் சென்ற கருடன் அங்குள்ள தர்ப்பை புல்லையும் பூலோகத்திற்கு கொண்டு வந்ததால் அதனை 'அமிர்த வீரியம்' என்று அழைக்கிறார்கள்.
கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச் சட்டம் ஆகியவற்றை வாழை சாறில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக்கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.
பாற்கடலை கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையை தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.
கருட பகவானின் அங்க லட்சணங்கள்
இரண்டு கரங்கள். நான்கு கரங்களும் உண்டு.
அருள் ததும்பும் முகம், கவலைக்குறியே இல்லாதவர். தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர் .
சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். குண்டலங்களை காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள், உருண்டை கண்கள். நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். மூன்று கிளைகளாக பிரிந்து இருக்கும் ஸ்ரீ கருடனுடைய இறக்கைகள் மூன்று வேதங்களாக கருதப்படுகின்றன.
இவர் சூரிய மண்டலத்திலும் ஞானிகள் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களை காப்பதில் திருமாலை போன்றவர் .
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களை நாடுபவர்களுக்கு ஸ்ரீ கருடன் அவற்றை தந்து அருள் புரிகிறார்.
கருடனின் சிறப்புகள்
கருடன் வட்டம்விடுதல் பறவைகளுக்கு ராஜாவான பட்சி ராஜன் தான்.
எப்போதும் பறக்கும்போது இறக்கை அசைக்காமல் பறக்கும். ஆகாயத்தில் அழகாய் கருடன் வட்டமிடும் கண்கொள்ளா காட்சி காண்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும்.
நாம் ஒரு காரியம் உத்தேசித்து போகும்போது கருடன் வட்டம் விடும் தரிசனம் கிடைத்தால் வெற்றி கிட்டும். கருடன் வட்டமிடுவதை விட ஒரு உயர்ந்த சுப சகுனம் வேறு எதுவும் இல்லை, அரசயோகமே கிட்டுவதற்கு ஈடான பலனை தரும்.
கருடன் வட்டமிடுவதை சகுனம் கண்டால் அந்த வீடு நல்ல முறையில் எளிதாக கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்யப்படும்.
மேலும் அந்த வீட்டில் எப்போதும் சுபங்களே நடக்கும், நல்ல வெற்றி முன்னேற்றம் உண்டாகும்.
கருடன் நித்திய வாச ஸ்தலம் திருப்பாற்கடல் ஆகும்.
கருடா சௌக்கியமா பாடல்
மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் திருச்சிறு புலியூர் என்ற தலத்தில் பூமிக்கு கீழே கருடன் சன்னிதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சன்னதியும் உள்ளது.
'கருடா சௌக்கியமா?' என்று பாம்பு கேட்டதற்கு 'அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே' என்று கருடன் சொன்னதாக புராணங்களில் உள்ளது. இந்த நிகழ்வு நடந்தது இந்த தலத்தில் தான்.
இங்கு 'கருட பத்து' என்ற பத்து துதி பாடல்கள் உள்ளன.
இப்பாடல்களை பாராயணம் செய்வதால் அவரின் அருளும் கருட தரிசனமும் கிடைக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்.
கருட பஞ்சமி அன்று கருடனை சேவித்து அவரது அருளை பெறுவோமாக!