
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் தும்பூர் தாங்கல் என்னும் திருத்தலத்தில் நாகம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தொன்மையான வரலாற்று சிறப்பைக் கொண்டுள்ளது. இக்கோவிலில் நாகம்மனிடம் முறையிட்டால் தீர்க்க முடியாத பிரச்னைகளையும் தீர்த்து வைப்பாள் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
முன்னொருக்காலத்தில் திருவாமாத்தூர் பகுதியில் செல்வந்தர்களான அண்ணன் தம்பி வாழ்ந்து வந்தனர். தம்பி வெளியூர் சென்றிருந்த சமயம் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். இதுதான் சமயம் என்று அண்ணண் அனைத்து சொத்துக்களையும் விற்று காசாக்கி மறைத்து வைத்துக் கொள்கிறான்.
ஊர் திரும்பிய தம்பி, அண்ணனிடம் தன் பங்கை கேட்கிறான். ஆனால், அண்ணன் சொத்து எதுவுமேயில்லை என்று பொய் சொல்கிறான். இதை ஊர் பெரியவர்களிடம் தம்பி எடுத்துச் செல்கிறான். அவர்களோ திருவாமாத்தூர் வட்டப்பாறையில் சத்தியம் செய்தால் உண்மை வெளிவந்து விடும் என்று கூறுகின்றனர்.
தீர்க்க முடியாத சிக்கலான வழக்கை திருவாமாத்தூர் வட்டப்பாறைக்கு எடுத்துச் செல்வார்கள். இங்கு பொய் சத்தியம் செய்தால் கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள் என்ப மக்களின் நம்பிக்கை. அண்ணனும் அதிக தைரியத்துடன் சத்தியம் செய்ய வருகிறான். 'இந்த தெய்வம் என்னை என்ன செய்துவிட போகிறது!' என்று நினைத்து பொய் சத்தியம் செய்கிறான். அவன் பொய் சத்தியம் செய்தும் எதுவும் நடக்காததை பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்.
திரும்ப அண்ணன் தும்பூர் தாங்கலை நோக்கி மகிழ்ச்சியாக நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, பூமியிலிருந்து எழுந்த கருநாகம் ஒன்று அவனைக் கொத்திக் கொன்றது. அவன் மறைத்து வைத்திருந்த பொன்னும், நவரத்தினமும் சிதறி கீழே விழுந்தன. அந்த இடத்தில் தான் சுயம்புவாக நாகம்மன் இருக்கிறார்.
தசையாக இருந்த நாகம் கல்லாக மாறியது மட்டுமின்றி தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. நாகம்மனை தோண்டி எடுத்து அவரை உயரமான பீடத்தில் வைத்து கோயிலை எழுப்பலாம் என்று பக்தர்கள் நினைத்து தோண்டினர். தோண்ட தோண்ட கல்நாகம் நீண்டுக் கொண்டே போனது. இதனால் அஞ்சிய பக்தர்கள் திரும்பவும் மண்ணால் மூடி ஆலயத்தை எழுப்பினர். திருமணம், குழந்தைப்பேறு, கல்வி, உடல்நல ஆரோக்கியம் வேண்டுபவர்கள் நாகம்மனை தரித்து வேண்டிய வரங்களை பெறுகின்றனர். இத்தகைய சக்தி வாய்ந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்து வருவது நல்ல பலனைத் தரும்.