
குடும்பத்தில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் சில வீட்டு உபயோகப் பொருட்களை பாதுகாக்கவும், அவை நீண்ட நாட்கள் உழைக்கவும் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய வீட்டு உபயோகக் குறிப்புகள் சிலவற்றைக் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
1. வீட்டுத் தேவைக்கான ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்ஸி போன்ற பொருட்களை வாங்கியவுடன் அதன் வெளிப்புற அட்டைப் பெட்டிகளை உடனே தூர எறிந்து விடாதீர்கள். வாரண்டி, கேரண்டி காலத்துக்குள் அந்தப் பொருட்களில் பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகளுக்குக் கொண்டு சென்று மாற்றிக்கொள்ள அவை தேவைப்படும்.
2. நீங்கள் தினமும் ஃப்ளாஸ்க்கை பயன்படுத்துகிறீர்களா? அதில் சிறிதளவு வெந்நீரும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் கலந்து 15 நிமிடங்கள் வைத்திருந்து குலுக்கிக் கழுவினால், ஃப்ளாஸ்க் சுத்தமாகி விடுவதுடன், எந்த வாடையும் வீசாது.
3. மிக்ஸியின் ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற முடியாதபோது, அது மூழ்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் கழித்து வெந்நீரை ஊற்றிவிட்டுக் கழற்றினால் எளிதில் கழற்றி விடலாம்.
4. பயன்படுத்திய எலுமிச்சைத் தோல் அதிகமாக இருந்தால் ஒரு தட்டில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஃப்ரிட்ஜில் உள்ள துர்நாற்றம் அறவே நீங்கி விடும்.
5. வாஷிங்மெஷினில் துணிகள் துவைக்கும்போது சோப்புத் தூளுடன் சிறிது ஷாம்பு கலந்துகொண்டால் துணிகள் வாசனையாக இருக்கும்.
6. இரும்பு சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியில் கொஞ்சம் கற்பூர வில்லைகளைப் போட்டு வைத்தால் பெட்டியில் உள்ள பொருட்கள் துரு பிடிக்காது.
7. உப்பு ஜாடியின் அடியில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து வையுங்கள். ஈரத்தை காகிதம் உறிஞ்சுவதால் ஜாடியில் உள்ள உப்பு ஈரம் கசியாமல் இருக்கும்.
8. புதிய பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கியதும் அதை உப்பு நீரில் கழுவி வெயிலில் உலர வைத்தால் பிளாஸ்டிக் வாசனை அறவே நீங்கி விடும்.
9. மிக்ஸியின் பிளேடு கூர் மழுங்கி விட்டால் உடனடி பயன்பாட்டுக்கு சிறிதளவு கல் உப்பு போட்டு அரையுங்கள். மிக்ஸி பிளேடு கூர்மை பெறும்.
10. காய்கறிகள் நறுக்கப் பயன்படுத்தும் பலகைகளை எலுமிச்சைத் தோலால் தேய்த்துக் கழுவினால் கறைகள் அகன்று விடும்.