'நாலம்பலம்' - ராம சகோதரர்களுக்கான நான்கு கோயில்கள் எங்கு உள்ளன?

Nalambalam
Nalambalam
Published on

கேரளாவில் இந்துக்களின் மலையாள நாட்காட்டியில் கடைசி மாதமான 'கர்க்கிடகம்' (ஆடி) எனும் மாதம், ராமாயண மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் வீடுகளிலும், கோயில்களிலும் ’ராமாயணப் பாராயணம்’ செய்யப்படுகிறது. 

கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, ‘துஞ்சத்து எழுத்தச்சன்’ என்பவர், வால்மீகி ராமாயணத்தை மலையாள மொழியில் மொழிபெயர்த்து, ’ஆத்யாத்ம ராமாயணம்’ எனப் பெயரிட்டார். இந்த ராமாயணம் கேரள மக்கள் அனைவரையும் கவர்வதாக அமைந்தது. கேரளா முழுவதும் கர்க்கிடகம் மாதத்தில் நாள்தோறும் துஞ்சத்து எழுத்தச்சன் எழுதிய ராமாயணத்தை வாசித்தல், ராமாயணம் தொடர்பான ஆன்மிக உரை கேட்டல், சத்சங்கங்கள் என்று முழுக்க முழுக்க ராமாயணத்தில் மூழ்கிப் போய்விடுகின்றனர்.

கேரளாவில் கர்க்கிடகம் மாதம் இறை வழிபாட்டுக்காகவே அர்ப்பணிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இறைவழிபாடு தவிர, வேறு சுபச்செயல்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. இம்மாதத்தில் ஆன்மிகம் தவிர்த்து, உடல் நலம் குறித்தும் கவனம் கொள்கின்றனர். சைவ உணவுகள் மட்டுமே உட்கொள்கின்றனர். வயதான பெரியவர்கள் சில உண்ணாவிரத முறைகளையும் கடைப்பிடிக்கின்றனர். 

இம்மாதத்தில் மழை பெய்து சுற்றுச்சூழல் குளிர்ச்சியாக அமைவதால், ஆயுர்வேத சிகிச்சைக்கு இக்காலம் ஏற்றதாகக் கருதித் தேவையான மருத்துவச் சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். நோயில்லாவிடினும், இம்மாதத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு உதவும் என்கிற நோக்கத்தில் ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் நடைபெறும் திருக்கோயில் எது தெரியுமா?
Nalambalam

இவை தவிர, இம்மாதத்தில் தசபுஷ்பம், தழுதாமை, கைதோநி, முயல் செவியன், முக்கூட்டு, விஷ்ணுகாந்தி, கீழாநெல்லி எனும் முப்பதுக்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய், சுக்கு, கிராம்பு, சீரகம் சேர்த்து மருந்துக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, அனைவரும் இக்கஞ்சியை அருந்துகின்றனர். இம்மருந்துக் கஞ்சி உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மைப்படுத்துவதுடன், உடல் நலத்திற்குப் பெரிதும் உதவுவதாகச் சொல்கின்றனர். இந்தக் கஞ்சியை, ‘கர்க்கிடகக் கஞ்சி’ என்றேச் சொல்கின்றனர். 

கேரள மாநிலத்தில் ராம சகோதரர்களுக்காக, திருப்பிரையார் எனுமிடத்தில் ராமர் கோயிலும், இரிஞ்சாலக்குடா எனுமிடத்தில் பரதன் கோயிலும், மூழிக்குளம் எனுமிடத்தில் இலட்சுமணன் கோயிலும், பாயம்மல் எனுமிடத்தில் சத்துருக்கனன் கோயிலும் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு ராம சகோதரர்களுக்கான கோயில்களை மலையாள மொழியில் நான்கு கோயில்கள் என்று பொருள் தரும்  ‘நாலம்பலம்’ என்ற பெயரில் அழைக்கின்றனர். கர்க்கிடகம் மாதத்தில் நாலம்பலங்களுக்கு சென்று வருவதால், குடும்பத்தில் ஒற்றுமையும், செல்வப் பெருக்கும் ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com