நட்சத்திர நோக்கு தினங்கள் பற்றித் தெரியுமா?

Naalkaati Kurippu
Daily Panchangam
Published on

காலை எழுந்ததும் தினசரி காலண்டர் பார்க்கும் பழக்கம் பெரும்பாலும் அனைவருக்கும் உண்டு. தேதி பார்க்க மட்டுமின்றி, அந்த நாள் காட்டும் திதி, நட்சத்திரம், சந்திராஷ்டமம் போன்ற விஷயங்களை வைத்து அந்த நாளின் தன்மையை தீர்மானிப்பது இந்துக்களின்  வழக்கம். அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள்தான் எனினும் புதிய செயல்களைச் செய்ய நல்ல நாள் பார்ப்பது ஐதீகம். நல்ல நாள் மற்றும் நேரத்தில் செய்யும் எந்த செயலும் தடையின்றி வெற்றி பெறும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

தினசரி நாம் காலண்டரை பார்க்கும்போது ஓரிடத்தில், ஒருநாள் மேலே நோக்கிய நிலையில் ஒரு அம்புக் குறியும், இன்னொரு நாள் கீழே நோக்கிய நிலையில் ஒரு அம்புக்குறியும், இன்னும் சில நாட்களில் இரு பக்கமும் சமநிலையில் உள்ளது போன்ற நிலையில் ஒருஅம்புக்குறியும் இருப்பதைப் பார்த்திருப்போம். மேல் நோக்கி இருந்தால் அது மேல்நோக்கு நாள் எனவும், கீழே நோக்கி இருந்தால் அது கீழ்நோக்கு நாள் எனவும், இரு பக்கமும் சமநிலையில் இருந்தால் அது சமநோக்கு நாள் எனவும் ஜோதிடம் கூறுகிறது. மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் ஆகிய மூன்றும் அந்தந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.

இம்மூன்று நாட்களின் நட்சத்திரம் மற்றும் அவற்றின் தன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோஹிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை துவங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய  விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
கோடையில் இதையெல்லாம் சாப்பிட்டால் உடம்பு குளிர்ச்சி ஆகுமாம்! உங்களுக்கு தெரியுமா?
Naalkaati Kurippu

கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்டுவது,, வீட்டில் போர்வெல் போடுவது, சுரங்கம்  தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

சம நோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருக சீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய  வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.

மனதில் நல்ல எண்ணத்துடனும், தன்னம்பிக்கையுடனும், இறை பக்தியுடனும் எந்த செயலைச் செய்தாலும் அனைத்து நாளும் நல்ல நாள்தான் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com