ஸ்ரீ கிருஷ்ணர் புகழ் பாடும் நவ துவாரகைகள்!
நிறைய பேர் பஞ்ச துவாரகைகள்தான் உண்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நவ (ஒன்பது) துவாரகைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது.
துவாரகை என்பது குஜராத் மாநிலத்தில் அரபு கடற்கரையில் அமைந்துள்ள நகரமாகும். யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகரான துவாரகையை ஸ்ரீகிருஷ்ணர் புதியதாக அமைத்ததாகக் கூறப்படுகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகையும் ஒன்று. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்குள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான துவாரகையில் குஜராத்தி மொழியும், இந்தியும் பரவலாகப் பேசப்படுகிறது. துவாரகை என்றால் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்களை கொண்ட நகரம் என்று பொருள்.
பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் இருந்த சமயம் அர்ஜுனன் சில காலம் இங்கு தங்கி சுபத்திரையை மணந்ததாகக் கூறப்படுகிறது. கடைசியில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்த பின்னர் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரஸ்வதி ஆற்றை நோக்கி பயணம் மேற்கொண்டதாக மகாபாரதத்தில் கூறப்படுகிறது.
1963ல் இந்திய தொல்லியல் துறை துவாரகையிலும் கடலிலும் அகழ்வாய்வு நடத்தியதில் துவாரகை நகரமும் துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனர்த்த ராஜ்ஜியத்தை ஆண்ட சிம்மாதித்தியன் கி.பி.574ல் வெளியிட்ட செப்பு பட்டயத்தில் துவாரகை பற்றிய குறிப்பு உள்ளது.
துவாரகை, கோமதி துவாரகை, பேட் துவாரகை, ருக்மணி துவாரகை, சுதாமா துவாரகை, முக்தி துவாரகை, மூல துவாரகை, டாகோர் துவாரகை, ஸ்ரீ நாத்ஜி துவாரகை ஆகியவை நவ துவாரகைகள் ஆகும். இவற்றில் முதல் நான்கு தலங்கள் துவாரகாதீஷ் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆண்ட முக்கிய துவாரகைக்கு அருகில் அமைந்துள்ளன.
ஸ்ரீ கிருஷ்ணர் அரசாண்ட புண்ணிய பூமி துவாரகை எனப்படுகிறது. கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பகுதி கோமதி துவாரகை ஆகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அந்தப்புரம் ஒரு தீவில் அமைந்துள்ளது. இது பேட் துவாரகை எனப்படும். ‘பேட்’ என்றால் குஜராத்தி மொழியில் தீவு என்று பொருள். துர்வாசரின் சாபத்தினால் ருக்மணி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்த தலம் ருக்மணி துவாரகை ஆகும். இத்தலத்திற்கு அருகில் பன்னிரண்டு ஜோதிர் தலங்களின் ஒன்றான நாகேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவதார நோக்கம் முடிந்த பின் வைகுண்டம் சென்ற பால்கா தீர்த்தம் என்று அழைக்கப்படும் தலமே முக்தி துவாரகை ஆகும். இது சோம்நாத்தில் அமைந்துள்ளது. இங்கு மற்றொரு ஜோதிர்லிங்கம் சோம்நாத் கோயில் அமைந்துள்ளது. இவற்றையே, ‘பஞ்ச துவாரகைகள்’ என்று அழைப்பர்.
இவை தவிர, கிருஷ்ண பரமாத்மா துவாரகைக்கு வந்தபோது முதன்முதலில் தங்கியது kodinar என்ற ஊருக்கு அருகில் உள்ளது. இதுவே மூல துவாரகை ஆகும். காந்தியடிகளின் பிறந்த ஊரான போர்பந்தருக்கு அருகில் அமைந்துள்ளது சுதாமா துவாரகை. இங்கு கண்ணனின் பால்ய நண்பரான குசேலரின் ஆலயம் அமைந்துள்ளது. தென் குஜராத்தில் நதியாத் என்ற ஊரின் அருகில் அமைந்துள்ள இரண்டாவது துவாரகை என்று அழைக்கப்படும் டாக்கோர் துவாரகை. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீநாத் துவாரகை ஆகிய நான்கு தலங்களையும் சேர்த்து நவ துவாரகைகள் என்று அழைக்கப்படுகிறது.