வித்தியாசமான அமைப்பில் நவக்கிரகங்கள் காட்சி தரும் திருத்தலங்கள்!

Navagrahas are the shrines in a different setting
Navagrahas are the shrines in a different settinghttps://sharechat.com

பொதுவாக, எல்லா கோயில்களிலும் நவக்கிரகங்களை சதுரமான அமைப்பில் அமைத்திருப்பார்கள். ஆதலால் அவற்றைப் பார்த்து பார்த்து நவக்கிரகங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால், சில கோயில்களுக்குச் செல்லும்பொழுது நவக்கிரகங்களின் அமைப்பு வித்தியாசமாக இருப்பதைப் பார்க்கலாம். ஆஹா, நவக்கிரகங்களில் கூட வித்தியாசம் இருக்கிறதா? என்று வியந்திருப்போம். அதுபோல் உள்ள வித்தியாசமான அமைப்பில் நவக்கிரகங்கள் அமைந்த கோயில்களை இந்தப் பதிவில் காண்போம்.

ஒன்பது விளக்கு நவக்கிரகம்: திருச்சி மாவட்டம், துறையூர் மார்க்கத்தில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, 'திருப்பைஞ்ஞீலி' திருத்தலம். இங்குள்ள ஸ்ரீஞலிவனேஸ்வரர் கோயிலில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதிலாக நந்தி தேவருக்கு முன்பாக அகல் விளக்கு அளவில் 9 குழிகள் மட்டுமே உள்ளன. அதில் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றி அதையே நவக்கிரகமாக வழிபடுகிறார்கள். திருமணத் தடை நிவர்த்தி தலமாக விளங்கும் இக்கோயிலின் தல விருட்சம் 'கல்வாழை' என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கோட்டில் நவக்கிரகங்கள்: எல்லா கோயில்களிலும் நவக்கிரகங்களை சதுரமான அமைப்பில் பார்த்திருப்போம். ஆனால், திருவாரூர் தியாகராஜ கோயில் நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நின்ற நிலையில் காட்சியளிப்பதைக் காணலாம். சிவபெருமானே தியாகராஜராக இங்கே வீற்றிருப்பதாக ஐதீகம். எனவே, நவக்கிரகங்களும் தனித்தனியே ஆதிக்கம் காட்டாமல் தனக்குக் கீழ் அடங்கி இருப்பதாக ஐதீகம்.

நவக்கிரக விநாயகர்: கும்பகோணம், மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீ பகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் உள்ளார். இவர் சூரியனை நெற்றிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனி பகவானை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களை சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேற்கூரையில் நவக்கிரகங்கள்: நாகர்கோவில் அருகில் உள்ள 'சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் காணப்படும் நவக்கிரகங்கள், மூலவருக்கு மேலே உள்ள மேற்கூரையில் இடம்பெற்றிருக்கின்றன. இங்குள்ள விநாயகர் பெண் உருவத்தில் காட்சி தருகிறார். இவரை இங்கு 'கணேசினி' என்று அழைத்து புடவை கட்டி வணங்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
எலும்புகள் - கவனத்தில் கொள்ள வேண்டிய பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்!
Navagrahas are the shrines in a different setting

தம்பதிகளுடன் காட்சி தரும் நவக்கிரகங்கள்: பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள வரம் தரும் விநாயகர் கோயிலில் மற்ற ஆலயங்களில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் போல் இல்லாமல், வானுலகில் நவக்கிரகங்கள் எப்படி உள்ளதோ அதேபோன்று, சூரியனை மையமாக வைத்து பிற கோள்கள் 45° கோணத்தில் வட்ட வடிவமாக அமைந்துள்ளது. மேலும், நவக்கிரகங்கள் இங்கே தம்பதிகளாக சேர்ந்து காட்சியளிக்கிறார்கள். தம்பதிகள் வரிசையை இங்கு பார்த்து ரசிக்கலாம். மிகவும் வித்தியாசமான ஒரு காட்சியில் நவக்கிரக அமைப்பு என்றால் அது இதுதான்.

அமர்ந்த கோலத்தில் நவக்கிரகங்கள்: தென் மாவட்டத்தில் செவ்வாய் தோஷ நிவர்த்தி கோயிலாகக் கூறப்படும் மதுரை, நத்தம் கயிலாசநாதர் கோயிலில் நவக்கிரகங்கள் அமர்ந்த கோலத்தில் அமைந்துள்ளது வித்தியாசமான சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com