எலும்புகள் - கவனத்தில் கொள்ள வேண்டிய பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்!

Bones - Useful medical tips to keep in mind
Bones - Useful medical tips to keep in mindhttps://aquafitnessonline.com

டலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் துணை புரிவது எலும்புகள்தான். இவை இல்லாமல் மனிதர்களால் செயல்பட முடியாது. எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். முதுமையில் உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு எலும்புகள் பலவீனமடைவதும் ஒரு காரணம்.

கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துக்கள்தான் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. இவை குறையும்போது எலும்புகள் பலவீனமடையும். எலும்புகள் பலவீனமடைய புகைப்பழக்கம், மதுப்பழக்கம், அதிக உப்பு, தவறான மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவை காரணமாக இருக்கலாம்.

காயம் பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

சுளுக்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. நரம்புகளின் தசை நார்கள் லேசாக பாதிக்கப்பட்டால் அவை சாதாரண சுளுக்கு. தசை நார்கள் கிழிவது, நரம்புகள் பாதிக்கப்படுவது போன்றவை கடினமான சுளுக்கு ஆகும். காலில் ஏற்படும் சுளுக்கு குணமாக சுக்கு தூளுடன் சூடுபடுத்திய வேப்ப எண்ணெயை ஊற்றி 2 நிமிடம் நன்றாக கலந்துகொண்டு இருந்தால் சுக்கு தூளும், வேப்ப எண்ணெயும் ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அதை சுளுக்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் சுளுக்கு குணமாகும்.

பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே இது குணமாக்கிவிடும்.

எலும்பு உறுதிக்கு கால்சியத்தை விட, புரதச்சத்து மிகவும் முக்கியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரோட்டீன்ஸ் அதிகமாக உள்ளது. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். வைட்டமின் ‘கே' குறைபாடு குழந்தைகளிடம் எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும் என்கிறார்கள்.

எடை குறைவான இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெதுவாக வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழிசெய்ய வேண்டும். கால் தடுமாறி பிசகிவிட்டால், உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்து வலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள். நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா, நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் புத்திசாலியாக இருந்தால் இந்த 9 விஷயங்களை பொதுவெளியில் பேச மாட்டீர்கள்!
Bones - Useful medical tips to keep in mind

இளம் வயதில், அதாவது 25 வயதிற்கு முன்னரே திருமணம் செய்து கொள்வதால் ஆண்களின் எலும்புகள் வலுவை இழப்பதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். தலையில் ஏற்படும் காயம் தற்காலிக பாதிப்புகள் ஏற்படுத்தாமல் இருந்தாலும் 10லிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட அது ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் இங்கிலாந்து விஞ்ஞானிகள். எனவே, தலையில் ஏற்படும் காயத்தை முறையாக பரிசோதனைகள் செய்து சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

உங்கள் உணவில் எலும்பு ஆரோக்கியத்தை காக்கும் கால்சியம் நிறைந்த உணவுகள் (பால் பொருட்கள், கீரைகள்) மற்றும் வைட்டமின் டி மூலங்கள் (சூரிய ஒளி, கொழுப்பு நிறைந்த மீன்) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எலும்பு அடர்த்தி மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாகிங், நடனம் அல்லது பளு தூக்குதல் போன்ற எடை தாங்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மூட்டு பிரச்னைகளின் அபாயத்தை குறைக்கும். போதுமான தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com