துர்கையையும், லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் கொண்டாடும் 9 நாட்களைதான் நவராத்திரி என்று அழைக்கிறோம். நம் முயற்சிகளில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் அதனால் தெய்வத்தின் துணை என்பதும் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த தெய்வத்திடம் நாம் விரதங்கள் வழியாகவும், பூஜைகள் வழியாகவும், ஸ்லோகங்கள் சொல்வது வழியாகவும்தான் துணை கிடைக்கப் பெறச் செய்கிறோம்.
திருமாலோ சிவபெருமானோ நேரிடையாக நாம் கேட்கும் வரத்தைக் கொடுத்து விடுவார்களா என்றால், அது நிச்சயம் இல்லை. தாயார், அதாவது சக்தி ஸ்வரூபமான அம்பாள் பரிந்துரை செய்தால் மட்டுமே திருமாலும் ருத்ரனும் நமக்கு நாம் கேட்கும் வரத்தை தாயாரின் பரிந்துரையின் பேரில் நமக்குத் தருவார்கள். ‘சக்தி இல்லையேல் சிவன் இல்லை.’ எனவே, அந்த சக்தியை நாம் நவராத்திரி நாட்களில் வழிபடும் போது, திருமகளின் திருவருளையும், திருமாலின் திருவருளையும் ஒருசேரப் பெற்றிட முடியும்.
நவராத்திரியின் 9 நாட்களுமே நம் வீட்டிற்கு வரக்கூடிய ஒவ்வொரு பெண்களையும் சக்தி ஸ்வரூபமாகவே பார்த்து, பாவித்து, அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பூ, பழங்கள் என கொடுத்து அவர்களை மகிழ்விக்கும்போது சக்தி வடிவமான அம்பாளும் மகிழ்கிறாள் என்பதில் சந்தேகமே கிடையாது. நவராத்திரியின் 9 நாட்களில், முதல் 3 நாட்கள் அம்பாள் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்படும் நாட்கள். இந்த நாட்களில், மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி என்ற பெயர்களில் துர்கைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரியின் அடுத்த மூன்று நாட்கள் திருமகளுக்கு உரிய நாட்கள். மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என்று தாயாரை வழிபடும் நாட்கள் இவை. கடைசி மூன்று நாட்கள், கலைமகளான சரஸ்வதிக்கு உரிய நாட்கள். சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என்று சரஸ்வதியை வழிபடும் நாட்கள் இவை.
10ம் நாளான விஜயதசமி திருநாளே வெற்றிகளைத் தரும் திருநாள். 9 நாட்கள் செய்த பூஜையின் பலனாக வெற்றிகளைக் கொடுக்கும் நாள், வெற்றிகளின் துவக்கத்திற்கான நாளாக விஜய தசமி பார்க்கப்படுகிறது.
‘தேவி பாகவத’ புராணத்தின்படி நாரத மஹரிஷி சீதையை பிரிந்து ஸ்ரீராமர் மனம் வருந்திக் கொண்டிருந்த சமயத்தில், அவரைச் சந்தித்து நவராத்திரி பூஜை செய்யும்படி சொன்னதாகவும், ராமர் அவ்வாறே நவராத்திரி பூஜையை செய்து ராவணனை வென்று சீதையை மீட்டு வந்த கதையை நமக்குச் சொல்கிறது. தீமையை அழித்து, நன்மையை வெற்றிகரமாக நிலைநாட்டுவதையே நவராத்திரி நமக்குக் காட்டுகிறது. அம்பாள் அதைத்தான் நவராத்திரியின் கடைசி மூன்று தினங்களில் நமக்குக் காட்டியும் தந்திருக்கிறாள் மஹிஷாசுரமர்த்தினியாக.
அம்பாள் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மஹிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்பாளை வழிபட்டது நவமி அன்று. தசமி அன்று அம்பாள் தன்னுடைய மூலஸ்தானத்திற்கு சென்றாள் என்றே புராணங்கள் குறிப்பிடுகின்றன. நம் கண்களுக்குத் தெரியாத தடைகளை தகர்த்தெறிய நவராத்திரி சமயத்தில் தேவியை வழிபட வேண்டும் என்றே குறிப்பிடுகிறது ஸ்கந்த புராணம்.
சுரதன் என்ற அரசன், தான் இழந்த ராஜ்ஜியத்தை நவராத்திரியில் சக்தியை வழிபட்டு மீண்டும் ராஜ்ஜியத்தை வெற்றிகரமாகப் பெற்றான் என்று கூறும் புராண குறிப்புகளும் உள்ளன. புராதனமான ஒரு விழா, புராணங்கள் பலவும் புகழ்ந்து சொல்லும் திருநாளான நவராத்திரி திருநாளை நாமும் மலைமகளையும், திருமகளையும், கலைமகளையும் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறுத்தி வழிபடுவோமே.