
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது வித சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் உங்களது எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் அம்பிகையின் அருளால் கைகூடும். அந்த மந்திரங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஓம் தேவி ஷைலபுத்ரீயே நமஹ: தேவி ஷைலபுத்ரி மலைகளின் மகளாக இருக்கிறாள். நிலையான பலமுடையவள். இந்த மந்திரத்தை கூறுவதால் நம் மனம் முதிர்ச்சியுற்று, உறுதியும் பலமும் பெறும். வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரும் சவால்களை சந்தித்து வெற்றியடைய முடியும்.
2. ஓம் தேவி ப்ரம்மசாரிணியே நமஹ: பிரஹ்மசாரியத்தை கடைபிடித்து பக்தியோடும் ஒழுக்கத்துடனும் கடுந்தவம் புரிந்த தேவியை இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவதால் பக்தர்களுக்கு பொறுமையும், சுய கட்டுப்பாடும், அர்ப்பணிப்புடன் இலக்கை அடையத் தேவையான மன உறுதியும் கிடைக்கும்.
3. ஓம் தேவி சந்திரகாந்தாயே நமஹ: துர்கா தேவி அதிகளவு பலமும் தைரியமும் கொண்டு போர்க் கோலம் பூண்டிருந்த நிலையில் 'சந்திரகாந்தா' என்ற பெயரில் அழைக்கப்பட்டாள். இந்த மந்திரத்தை பக்தர்கள் உச்சரிப்பதால், அவர்களின் பயம் நீங்கி, உள் மனதில் பலமும், அமைதியும் உண்டாகி வாழ்வில் வளம் பெருகும்.
4. ஓம் தேவி கூஷ்மாண்டாயே நமஹ: பிரபஞ்சத்தின் படைப்பாளியான தேவி கூஷ்மாண்டா உயிர்த் துடிப்பும் பலமும் நிறைந்தவளாகக் கருதப்படுகிறாள். இம்மந்திரத்தை கூறி அவளை வழிபடும்போது பக்தர்களின் ஆரோக்கியம், படைப்பாற்றல் உள்ளிருந்து ஊற்றெடுக்கும் ஒளிர்வு ஆகியவற்றின் அளவு அதிகரித்து வாழ்வில் வளம் சேரும்.
5. ஓம் தேவி ஸ்கந்த மாதாயே நமஹ: ஸ்வாமி கார்த்திகேயனின் தாயான அம்பிகையை, இந்த மந்திரத்தை கூறி வழிபடும்போது, பக்தர்களுக்கு தாயன்பு குறைவின்றி கிடைக்கப் பெற்று, குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
6. ஓம் தேவி காத்யாயனியே நமஹ: தீமைகளை அகற்ற துர்கா தேவி ஏற்றுக்கொண்ட உக்கிரமான தோற்றமே காத்யாயனி. இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. திருமண பந்தத்திற்குள் நுழையக் காத்திருக்கும் கன்னிப் பெண்கள் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்போது, அவர்களுக்குள் இருக்கும் எதிர்மறை சக்திகளெல்லாம் வெளியேறி, நல்ல துணை கிடைக்க வழி வகுக்கும்.
7. ஓம் தேவி காலராத்ரியே நமஹ: இருளையும் அறியாமையையும் அழித்து பக்தர்களின் வாழ்வைப் பாதுகாக்க துர்கா தேவி ஏற்றுக்கொண்ட அவதாரம் காலராத்ரியாகும். இம்மந்திரம் பக்தர்களின் எதிரிகளை அழித்து, பயத்தைப் போக்கி தீய சக்திகளிலிருந்து அவர்களைக் காக்க வல்ல சக்தி வாய்ந்த மந்திரம்.
8. ஓம் தேவி மஹா கௌரியே நமஹ: தெய்வீக சக்தியும் புனிதத் தன்மையையும் கொண்டவள் தேவி மஹா கௌரி. இந்த மந்திரத்தைக் கூறுவதால் பக்தர்கள் முற்பிறவியில் செய்த தீய வினைகளால் உண்டாகும் தடைகள் அனைத்தும் நீங்கும். மனம் தெளிவும் அமைதியும் பெறும்.
9. ஓம் தேவி ஸித்திதாத்ரி நமஹ: ஸித்திதாத்ரி தேவி ஆன்மிக மற்றும் யதார்த்த வாழ்வில் வளம் சேர்க்க உதவுபவள். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பக்தர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஞானம் பெருகும். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்த மந்திரங்களை உச்சரிக்கும் முறை: அதிகாலையில் எழுந்து, குளித்து, சுத்தமான, அமைதியான ஓரிடத்தில் அமரவும். அங்கு அம்பாளின் திருவுருவப் படத்தை வைத்து அதன் முன்பு ஒரு விளக்கை ஏற்றி வைத்து, பூக்களால் அலங்கரித்து ஊதுபத்தி ஏற்றவும். கையில் ஒரு உத்ராட்ச அல்லது கிரிஸ்டல் மாலையை வைத்துக்கொண்டு 108 முறை அந்தந்த நாளுக்குரிய மந்திரத்தை உச்சரிக்கவும். சுத்தமான ஹ்ருதயத்துடன் பக்தியோடு இம்மந்திரங்களை உச்சரிப்பது மிகவும் முக்கியம்.