
கேரள மாநிலம் இயற்கை அழகிற்கு மட்டும் பெயர் போனது கிடையாது. ஆன்மீக தேடலுக்கும் ஏற்ற இடமாக கருதப்படுகிறது. இங்குள்ள பல கோவில்கள் இந்தியா முழுவதும் ஆன்மீக தேடலை விரும்பும் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். அத்தகைய வரிசையில் இருக்கும் கோவில் தான் நீர்புத்தூர் சிவன் கோவில்.
மூவாயிரம் வருட சிவன் கோவில் வருடம் முழுவதும் தண்ணீரிலே தான் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? டைனோசர்கள் உருவாவதற்கு முன் உருவான சிவலிங்கம் இருக்கும் கோவில் தான் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் புத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் நீர்புத்தூர் சிவன் கோவிலாகும்.
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் இக்கோவில் 3000 வருடத்திற்கு மேலான பழமையான கோவில் என்று சொல்லியிருக்கிறார்கள். இக்கோவிலில் இருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கமாக தோன்றியது. வருடம் முழுவதும் இக்கோவில் நீரால் நிரம்பியிருக்கும். இந்த கருவறையை சுற்றியுள்ள சிறிய குளத்தை கங்காதேவி என்று மக்கள் நம்புகிறார்கள்.
கங்கை ஒரு புனிதமான நதி. இக்கோவிலுக்கு செல்லும் போது கங்கா தேவி நம் பாவங்களை போக்கி நம் ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறார். சிவபெருமான் நம் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
நீர்ப்புத்தூர் சிவன் கோவிலின் கருவறை வட்ட வடிவத்தில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மற்ற கோவில்களில் இருப்பதுப்போல இக்கோவிலை சுற்றிவரவோ அல்லது பிரதக்ஷனம் செய்யவோ முடியாது. ஏனெனில், கருவறையை சுற்றி தண்ணீர் நிரம்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பக்தர்கள் 'பட்டுப்புறா' என்ற இடத்தில் நின்று மட்டுமே சிவபெருமானை தரிசிக்க முடியும்.
இங்குள்ள சிவபெருமானை 'நீர்புத்தூரப்பன்' என்று பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள். வெயில் காலங்களில் நீர்நிலை குறையும் போது பக்தர்கள் தாராளமாக கோவிலை சுற்றிப்பார்க்க அனுமதிக்கிறார்கள். இக்கோவிலுக்கு சென்று வந்தால் இயற்கையை அனுபவித்த திருப்தியுடன் ஆன்மீக தேடலும் பூர்த்தியடைந்த உணர்வைத் தரும்.
அடர்ந்த காட்டுக்கு நடுவிலே அழகான, அமைதியான இயற்கை சூழலுக்கு நடுவிலே சிவபெருமானை தரிசிப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். நீங்களும் இக்கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசித்து அவனுடைய அருளைப் பெருங்கள்.