
அன்னை பராசக்தி பிரபஞ்சத்தின் ஆற்றலாகவும், அனைத்து ஜீவராசிகளின் சக்தியாகவும் நிறைந்து இருக்கிறாள். எல்லா உருவிலும் எங்கும் காணப்படும் அந்த சக்தியானவள் அனைத்தையும் இயக்கி வருகிறாள். ஒவ்வோர் ஊரிலும், ஒவ்வொரு வடிவிலும் பல்வேறு பெயர்கள் தாங்கி அருள்பாலித்து வரும் அத்தகைய சக்தி வடிவங்களின் ஒரு வடிவே அரைக்காசு அம்மன்.
நம் மனதிற்குப் பிடித்த பொருட்களை, முக்கியமான ஆவணங்களை அல்லது நகைகளை தொலைத்து விட்டால் மனம் மிகவும் வேதனையடையும். எவ்வளவுதான், தேடினாலும் கூட சில நேரங்களில் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆனால், நம்பிக்கையுடன் அரைக்காசு அம்மனை வழிபட்டால், மறதியால் அல்லது தவறவிட்ட பொருட்களை அன்னை கண்டுபிடித்துத் தருவாள் மற்றும் குடும்பத்தில் காணாமல் போனவர்கள் கூட பத்திரமாக வீட்டுக்குத் திரும்பி வருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்து அன்னை பிரகதாம்பாளே அரைக்காசு அம்மனாக வணங்கப்படுகிறாள். புதுக்கோட்டையை ஆண்ட விஜயநகரப் பேரரசர் ஒரு முக்கிய ஆவணத்தை இழந்தார். அதை மீட்டெடுக்க பிரகதாம்பாள் அம்மனிடம் பிரார்த்தனை செய்தார். அம்மன் அவரது விருப்பத்தை நிறைவேற்றினாள். காணாமல்போன ஆவணம் கிடைத்தது. மன்னன் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக, அரைக்காசு நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாளின் படத்தை பொறித்து, பண்டிகை சமயங்களில் அந்த நாணயங்களை குடிமக்களுக்கு விநியோகம் செய்தார். அந்த நாட்களில் அரைக்காசு நாணயங்கள் அரை வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டன. அப்போதிருந்து அம்மன், ‘அரைக்காசு அம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.
சென்னை, வண்டலூர் பூங்காவிற்கு அருகில் உள்ள ரத்தினமங்கலத்தில் அரைக்காசு அம்மன் கோயில் பிரத்யேகமாக அமைந்துள்ளது. ரத்தினமங்கலத்தில் முன்னொரு சமயம் லட்சுமி குபேரர் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில்
ஸ்ரீ லக்ஷ்மியின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மதிப்புமிக்க ஆபரணம் ஒன்று தொலைந்துபோனது. எங்கு தேடியும் கிடைக்காததால் மனமுடைந்த கோயில் நிர்வாக அறங்காவலர், அரைக்காசு அம்மனிடம் பிரார்த்தனை செய்து, காணாமல் போன ஆபரணத்தைக் கண்டுபிடித்தால், அவளுக்கு பீடம் கட்டுவதாக வேண்டிக் கொண்டாராம். என்ன அதிசயம்… காணாமல் போன அந்த ஆபரணம் கிடைத்து விட்டதாம். அம்மனுக்கு நன்றி சொல்லும் விதமாக லட்சுமி குபேரர் கோயிலுக்கு மிக அருகில் அரைக்காசு அம்மனுக்கு ஒரு பீடமெழுப்பியதாகக் கூறப்படுகிறது.
எங்களது நெருங்கிய உறவினர் ஒருவர், சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மனை வழிபட்டதால், தவறவிட்ட தனது பொருளைத் திரும்பப் பெற்றது அற்புதமான ஒரு அனுபவம். அவர் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு தனது காலில் அணிந்திருந்த ஒரு கொலுசு இல்லாததைப் பார்த்திருக்கிறார். அந்தக் கொலுசு சமீபத்தில்தான் ஆசையாக வாங்கியது. வெளியே எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. வீட்டிலும் தேடிப் பார்த்து கிடைக்காமல் போகவே, ‘சரி போனது போனதுதான்’ என விட்டு விட்டார். ஆனாலும், மனம் சமாதானமாகவில்லை. அப்போதுதான் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருளை மீட்டுத் தருவாள் எனப் படித்தது அவர் நினைவுக்கு வந்திருக்கிறது. ‘அம்மா, தொலைந்த கொலுசு உனது அருளால் திரும்பக் கிடைக்க வேண்டும்’ என்று மனமுருகி வேண்டியிருக்கிறார்.
என்னே அதிசயம்... மறுநாள் காலையில் கண் விழித்தபோது தனது படுக்கையின் ஓரத்தில் தொலைந்த கொலுசு இருப்பதைப் பார்த்தபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. ‘நேற்று தேடியபோது இந்த இடத்தில் இது இல்லையே. இது அம்மனின் அருளைத் தவிர வேறில்லை. அம்மன் ஆலயத்திற்கு இதுவரை நான் சென்றதில்லை. இருந்த இடத்திலிருந்து வேண்டினாலே ஓடி வந்து உதவுபவள் இந்த அன்னை. அரைக்காசு அம்மனின் சக்தியை எனது வாழ்வில் உணர்ந்த தருணம் அது’ என்று பரவசமுடன் அவர் கூறினார்.
இவ்வுலகில் நம் புலன்களுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட இறைவனின் அற்புத நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஓம் அரைக்காசு அம்மனே போற்றி!