சபரிமலை பக்தர்களுக்கு இனி கவலை இல்லை... இனி ரொம்ப நேரம் ஐயப்பனை தரிசிக்கலாம்!

Sabarimala Ayyappan Temple
Sabarimala Ayyappan Temple
Published on

சபரிமலை பக்தர்களின் கவலையை போக்கவும், ஐயப்பனை நீண்ட நேரம் தரிசிக்கவும் தேவசம்போர்டு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் படையெடுத்து வருவார்கள். எங்கிருந்தோ இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை வெறும் நொடி பொழுது மட்டுமே பார்க்க முடியும் என அனைவரும் நினைத்திருப்பார்கள். கூட்ட நெரிசலில் ஐயப்பனை சரியாக பார்க்க கூட முடியாமல் கடந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். இந்த சிரமத்தை போக்க தேவசம் போர்டு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.

மாசி மாத பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை கடந்த 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடைதிறந்த அன்று முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருக்கிறார்கள். வழக்கமாக மாத பூஜை நடைபெறும் நாட்களில் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு நிமிடத்திற்கு இத்தனை பக்தர்கள் என கணக்கு வைத்து 18 படிகளில் ஏற்றப்பட்டு வருகிறார்கள். அதற்கு பின்பும் மேம்பால கியூவில் காத்திருந்தால் தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் வரும் மார்ச் மாதம் முதல் மாற்றம் ஏற்பட போகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 14ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. தந்தரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இந்த நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில், திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18ஆம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேரடியாக கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என்றும் தெரிவித்தார். மேலும் பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்த அறிவிப்பால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மண்டலம் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு ஐயப்பனை காணும் பாக்கியம் அதிக நேரம் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
"மாசி மகம், நோன்பு விபரம் தெரிந்து கொள்ளலாமா...?"
Sabarimala Ayyappan Temple

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com