Sita devi - Anuman
Sita devi - Anuman

நினைத்தவர் முகம் காட்டும் அதிசயக் கணையாழி!

Published on

ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதா மாதா இலங்கையின் அசோக மரத்தடியில், ஸ்ரீராமனின் நினைவிலேயே அமர்ந்திருந்தாள். சீதையைத் தேடி அனுமன் அசோக வனம் வந்தபொழுது, சீதையிடம் ராமன் கொடுத்த கணையாழியைக் கொடுத்தார். அந்தக் கணையாழியைக் கண்டவுடன் சீதை பெருமகிழ்ச்சி கொண்டாள்.

“தாயே இதில் ஸ்ரீராமர் தெரிகிறாரா என்ன? இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்களே” என்று கேட்டார்.

“ஆம். இந்தக் கணையாழியின் சிறப்பினை என் தந்தை, நான், ஸ்ரீராமர் மூவர் மட்டுமே அறிவோம்” என்று சீதை பதில் கூறினாள். கணையாழியில் ராமர் தெரிந்தார் என்று சீதா மாதா கூறியது உண்மையே. இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.

ஜனக மகாராஜாவானவர், தனக்கு ஒரு பிரம்ம ஞானியே குருவாக வர வேண்டும் என்பதற்காக பெரிய யாகம் ஒன்றைச் செய்தார். அந்த யாகத்தில் பல ஞானிகள் கலந்து கொண்டார்கள். அவர்களில் நிச்சயம் ஒருவர் பிரம்ம ஞானியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் ஜனகருக்கு இருந்தது. அப்படி பிரம்ம ஞானியாக இருப்பவருக்கு ஆயிரம் பசுக்களை தானமாகக் கொடுப்பதாகவும் அறிவித்திருந்தார்.

யாகம் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது  யாக்ஞவல்கியர் என்னும் ஞானி எழுந்து வந்தார். “ஆயிரம் பசுக்களையும் நான் ஓட்டிச் செல்லப் போகிறேன்” என்றார். அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. ‘இவர் பிரம்ம ஞானியா? இவர் ஆயிரம் பசுக்களையும் ஒட்டிச் செல்வாரா? இதை எப்படி நம்புவது?’ என்று ஒரு குழப்பம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், ஜனகருக்கு அவர் பிரம்ம ஞானி என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அதை நிரூபிக்கவே இப்படி ஒரு யாகத்தைச் செய்து பலரும் அறியும்படி செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார்.

அப்பொழுது  ஜனகரின் அமைச்சரான வேத ஞானம் மிகுந்த மித்திரன் என்பவர்,   “ஞானியே நான் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கும் தகுந்த பதிலை அளித்து விட்டால் நீங்கள் தாராளமாக இந்தப் பசுக்களை ஓட்டிச் செல்லலாம். நீங்கள் பிரம்ம ஞானி என்று அறியப்படுவீர்கள்” என்று கூறினார்.

மித்திரன் கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கும் எல்லோரும் வியக்கும் வண்ணம் தகுந்த பதில்களைக் கூறி, தான் பிரம்மஞானி என்பதை யாக்ஞவல்கியர் நிரூபித்தார். அவரது அறிவின் முதிர்ச்சியில் தன் மனதைப் பறிகொடுத்த மித்திரனின் புத்திரியான மைத்ரேயி அவரை மணக்க விருப்பம் கொண்டு தந்தையிடம் தெரிவித்தபொழுது அவரும் தன் மகளை யாக்ஞவல்கியருக்கு மணம் முடித்து வைத்தார்.

ஜனகர் தான் கூறியபடி ஆயிரம் பசுக்களையும், அவற்றைப் பராமரிக்க பொற்காசுகளையும் கொடுத்து, யாக்ஞவல்கியரையும், மைத்ரேயியையும் வழி அனுப்பி வைத்தார்.

மகாவிஷ்ணுவின் அம்சமாகப் பிறந்த யாக்ஞவல்கியரை குருவாக ஏற்று, வேதங்களின் உட்பொருளை மிகத் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்டார், ஜனக மகாராஜா. சில காலத்திற்குப் பிறகு உலக நியதிப்படி தான் சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும் என்கிற  அவாவை ஜனகரிடம் அவர் தெரிவித்தார்.

ஜனகருக்கு தனது குருவைப் பிரிய மனமில்லாமல் இருந்தது. எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் குருவானவர் பிடிவாதமாக சந்நியாசத்தை மேற்கொள்வதாக தீர்மானம் செய்துகொண்டு, அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளலானார்.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேயர்களை அதிரவைத்த கம்பீரமான களரிப்பயட்டின் வரலாறு தெரியுமா?
Sita devi - Anuman

குருவானவர், ஜனகரின் வருத்தத்தைப் போக்க அவரிடம் ஒரு கணையாழியைக் கொடுத்து, “நீ என்னை நினைத்துக் கொண்டு, இந்தக் கணையாழியைப் பார்க்கும் பொழுதெல்லாம் என் முகம் இதில் தெரியும். நான் அருகில் இருப்பதாக உணர்ந்து கொள்வாய்” என்று கூறி ஒரு மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட ஜனகர், “குருவே, மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டு இந்த மோதிரத்தை யார் பார்த்தாலும், அவர்களது முகம் தெரிய வேண்டும் என்று ஆசி கூறுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். யாக்ஞவல்கியரும், “அப்படியே ஆகட்டும்” என்று கூறினார்.

யாக்ஞவல்கியர் கொடுத்த அந்த மோதிரத்தை ஜனகர், சீதைக்கு திருமண சமயத்தில், ஸ்ரீ ராமரிடம்  கொடுத்தார். “யாரை மனதில் நினைத்துக் கொண்டு அந்த மோதிரத்தின் முகப்பைப் பார்த்தாலும் நினைத்த முகமானது முகப்பில் தெரியும்” என்று கூறினார்.

அந்தக் கணையாழியைத்தான் ஸ்ரீராமர் சீதையிடம் காட்டுமாறு அனுமனிடம் கொடுத்து அனுப்பினார். சீதை சதாசர்வ காலமும் ராமரையே நினைத்த வண்ணம் இருந்ததால், மோதிரத்தின் முகப்பில் ராமர் சீதா மாதாவிற்குக் காட்சி கொடுத்தார். சீதைக்கு எதனால் ஸ்ரீராமரின் முகம் அந்தக் கணையாழியில் தெரிந்தது என்று இப்பொழுது புரிகிறதல்லவா?

logo
Kalki Online
kalkionline.com