

ஆலயங்களில் மூலவர் சன்னிதியை தரிசித்துவிட்டு வலமிருந்து இடமாக வரும்போது ஒரு இடத்தில் அபிஷேக நீர் வழிந்து கொண்டிருக்கும். இதற்கு கோமுகி தீர்த்தம் என்று பெயர். லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்கிறார்கள். ஆனால், அந்தப் பாபங்களை ஏற்ற கங்கையோ ஆலயங்களில் உள்ள கோமுகி நீரை தனது தலையில் தெளித்து புனிதம் அடைவதாக ஐதீகம். இறைவன் திருமேனியை உரசியபடி வெளியேறும் இந்த நீர் ஒப்பற்ற சக்தி கொண்டது.
திருமஞ்சன நீர் வெளியேறும் வாய்க்கு ‘கோமுகம்’ என்று பெயர். ‘கோ’ என்கிற பசுவின் உடம்பும் கருவறை போல் இறை ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. எனவே, கருவறை நீர் பசுவிலிருந்து பெறப்படுவதாக பாவிக்கப்படுகிறது. அபிஷேகம் நடந்தவுடன் இறைவனின் திருமேனியைத் தழுவிக் கொண்டு வழிந்தோடும் புனித நீர் கோமுகி தீர்த்தம் வழியாக வெளியேறும். இந்த நீர் 90 நாட்கள் ஆனாலும் கெடாது என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த நீரை வலது கையால் பிடித்து நமது தலை மீது தெளித்துக் கொள்வோம். ஆயிரமாயிரம் தேவதைகள் உறைந்து அருள்பாலிக்கும் இடமே கோமுகமாகும். இதில் வரும் நீரை ‘நிர்மால்ய தீர்த்தம்’ என்பர். சிவாலயத்தில் கோபுரத்திற்கு மேலே வடக்கு நோக்கி துர்கை சன்னிதி இருக்கும். அந்த கோமுகத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டாலே நாம் நேரடியாக இறைவனை பூஜை செய்த பலன் கிடைக்கும். இது நம் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய பரிகாரம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பரணி மற்றும் மகம் நட்சத்திர தினத்தன்று சிவாலயங்களில் அபிஷேகம் செய்து வரும் நீரை பிடித்து தீர்த்தம் போல் அருந்த உங்களது அனைத்துக் கஷ்டங்களுக்கும் தீர்வு கிடைக்கும். மிருகசீரிஷ நட்சத்திர தினத்தன்று இந்தத் தீர்த்தத்தை அருந்தினால் பேய், பிசாசு பயம் அகலும். அச்வினி நட்சத்திரத்தன்று இந்த தீர்த்தத்தை அருந்தினால் கண் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதுமட்டுமல்லாமல், உறக்கத்தின்போது புலம்புபவர்கள், அழுபவர்கள் அச்வினி நட்சத்திரத்தன்று இந்த நீரை அருந்த நல்ல பலன் கிடைக்கும்.
பிரிந்த தம்பதியர் ஒன்றிணைய வேண்டுமென்றால் இருவரும் தனித்தனியாக கிருத்திகை நட்சத்திரத்தன்று கோமுகி தீர்த்தம் அருந்த அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். குழந்தையில்லாதவர்கள் ரோஹிணி நட்சத்திரத்தன்று இந்த நீரை அருந்த குழந்தை பாக்கியம் கிட்டும்.
சிலர் தங்கள் இறுதிக் காலத்தில் படுக்கையில் படுத்தபடி மனம் வருந்துவர். இவர்கள் திருவாதிரையன்று இந்த கோமுகி தீர்த்தம் அருந்த நற்கதி பெறுவர். சிலர் பசுக்களுக்குக் கொடுக்கும் கீரையால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்பு நீங்க பூச நட்சத்திரத்தில் கோமுகி தீர்த்தம் பிடித்து அதை பசுவிடம் கொடுத்து அருந்தச் செய்ய அவை ஆரோக்கியமாகும்.
வியாபாரிகள் ஆயில்ய நட்சத்திரத்தன்று கோமுகி தீர்த்தத்தைப் பிடித்து தங்கள் வியாபாரப் பொருட்கள் மீது தெளிக்க லாபம் பெருகும். சிலருக்கு பல்வேறு காரணங்களால் திருமணம் தடைபட்டுப் போகும். இவர்கள் அனுஷ நட்சத்திரத்தன்று இந்த கோமுக நீர் அருந்த தடைகள் நீங்கும். தேர்வு காலங்களில் மாணவர்களுக்கு பயம் ஏற்படாமலிருக்க கேட்டை நட்சத்திரத்தன்று இந்த தீர்த்தம் அருந்த பயம் நீங்கும்.
பெருமாள் ஆலயங்களில் திருவோண நட்சத்திரத்தன்று இந்த நீர் அருந்த உணவுப் பஞ்சம் ஏற்படாது. சதய நட்சத்திரத்தன்று இந்த நீரை அருந்த எதிரிகள் தொல்ல மறையும். விபத்து தொடர்பான பயம் இருப்பவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் கோமுகி தீர்த்தத்தை அருந்த பயம் விலகும். இனி கோயில் சென்றால் இந்த கோமுகத்தைத் தேடுங்கள். பயன் அடையுங்கள்.