

சென்னை உள்ள மிகவும் பழமையான, மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோவில். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோவில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் திருவல்லிக்கேணியில் உள்ளது. புராணங்களில் ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் என்றும் தமிழில் திரு-அல்லி-கேணி என்றும் பெயர் பெற்ற இந்த திருத்தலம் தற்பொழுது திருவல்லிக்கேணி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் உள்ள பார்த்தசாரதி ஸ்வாமி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது அர்ஜுனனுக்கு தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் திருமுகத்தில் பாரதப் போரில் பீஷ்மரால் எய்யப்பட்ட அம்புகளின் தழும்புகளை இன்றும் காண முடிவது மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும்.
அதேபோல் மற்ற வைணவ தலங்களில் இல்லாத சிறப்பாக, நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வேங்கடகிருஷ்ணனாகவும், இருந்த கோலத்தில் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், கிடந்த கோலத்தில் போகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் எல்லா நிலையிலும் இத்தலத்தில் பெருமாள் சேவை தருவது சிறப்பு.
இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழ் பெற்றுள்ளது. மூலவர் வேங்கடகிருஷ்ணன் சாமி நின்ற கோலத்தில் காட்சி தர, ஒரு புறம் ருக்மணி தாயார், மறுபுறம் சாத்யகியும் (இளைய தனயன்), தாயாரின் பக்கம் பலராமரும், சாத்யகியின் பக்கம் மகன் பிருத்யும்னனும், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.
இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை பிரசாதமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) பகவானுக்குத் திருப்பதி வேங்கடாசலபதி அலங்காரம் செய்யப்படும் அன்றைய தினம் மட்டும் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த கோவிலில் வருடத்திற்கு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. ஒன்று பார்த்தசாரதிசுவாமிக்கும் மற்றொன்று அருள்மிகு யோக நரசிம்மருக்கும் நடைபெறுகிறது. அதேபோல் இந்த கோவிலில் சனிக்கிழமைகளிலும், புரட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய வருவார்கள்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா இன்று (டிசம்பர் 20-ந்தேதி)சனிக்கிழமை பகல் 2 மணிக்கு பகல்பத்து திருநாளுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
டிச.29-ம் தேதி பகல்பத்து முடிவடைந்து, 30-ம் தேதி (செவ்வாய்க்கிழமை)வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் நடைபெறும்.
அன்றைய தினம் அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறுகிறது . அதனை தொடர்ந்து காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 5.30 மணியிலிருந்து அன்றிரவு 10.30 மணி வரை மூலவரை பொது தரிசனம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதனை தொடர்ந்து 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக சொர்க்கவாசல் தரிசனம் நடைபெறுகிறது.
சொர்க்கவாசல் திறப்புக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.