பொதுவாக, சாதாரண மக்களுக்கு எதையும் சுருக்கமாகச் சொல்லத் தெரியாது. நீட்டி முழக்கி 'வளவள'வென்று பேசுவதே வழக்கம். ஒரு முக்கியமான காரியத்திற்காக காணாமல்போன ஒருவரைத் தேடிக்கொண்டு நமக்காக ஒருவர் சென்றிருக்கிறார் என்றால் அவர் திரும்பியதும் வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு கவலையோடும், ஆவலோடும் அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு காத்திருப்பார்கள்? வெற்றிகரமாக ஒரு செயலை செய்தால் மட்டும் போதாது. அதை திரும்பி வந்ததும் செவ்வனே அறிவிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்தான் ஸ்ரீ ஹனுமான்! இதனால்தான் இவர், 'சொல்லின் செல்வர்' என்று புகழப்படுகிறார்.
அவருக்கு இந்தப் பட்டப்பெயர் எப்படிக் கிடைத்தது தெரியுமா? பதினாலு வருஷ வனவாசமாக காட்டுக்கு வந்த ஸ்ரீராமன் சீதையை பறிகொடுத்து விட்டு அலைபாயும் மனத்தோடு பரிதவித்துக் கொண்டிருக்கிறார். அவரும் லட்சுமணனுமாக அலைந்து திரிந்து கிஷ்கிந்தைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே சுக்ரீவன் சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக வாக்களிக்க, வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனை வானர சாம்ராஜ்யத்திற்கு அரசனாக ஆக்கினார்.
வானரர்கள் எல்லோரும் கூடி ஆலோசித்து ஸ்ரீ ஹனுமானே பராக்கிரமசாலி என்று தீர்மானித்து அவரை சீதையைத் தேட அனுப்புகிறார்கள். கடலைத் தாண்டி, கடலுக்குள் இருக்கும் பகைவர்களை ஜெயித்து லங்காபுரிக்குச் சென்று அந்த நாடு முழுவதும் தேடி கடைசியில் அசோக வனத்தில் சீதையைக் கண்டு, ஸ்ரீராமன் தன்னிடம் தந்த கணையாழியை சீதா பிராட்டியிடம் கொடுத்தார். அசோக வனத்தில் சீதையை கண்டதோடு மட்டுமல்லாமல், அந்த செய்தியை அவர் திருவாக்காலேயே ஸ்ரீராமனுக்குச் சொன்னார்.
எப்படிச் சொன்னார் தெரியுமா? சீதையை என்று ஆரம்பித்தால்கூட சீதைக்கு என்ன ஆனதோ என்று ஸ்ரீராமன் பயந்துபோவார் என எண்ணி, ‘கண்டேன் சீதையை’ என்றார். எப்பேர்ப்பட்ட நேர்மறை வார்த்தைகள்! எதிராளியின் பயம், மனக்கவலை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து நொடிப்பொழுதில் உற்சாகமும், தைரியமும் கொடுக்கும் வார்த்தைகள்!
இந்த வார்த்தைகளைச் சொல்லி ஸ்ரீராமரின் மனதை அமைதிப்படுத்தியதால் அல்லவோ இவர், 'சொல்லின் செல்வர்' என்று புகழப்படுகிறார். அருணாசலக் கவிராயர் இந்த சம்பவத்தை ‘கண்டேன், கண்டேன், கண்டேன் சீதையை! கண்டேன் ராகவா!’ என்னும் பாகேஸ்ரீ ராகப் பாடலில் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் முக்கியமான விசேஷங்களில் ஒன்று 'ஸ்ரீஹனுமத் ஜயந்தி.' மார்கழி மாதத்தில் அமாவாசையும் மூல நட்சத்திரமும்கூடிய தினத்தில் அவதாரம் செய்தவர் ஸ்ரீஆஞ்சனேயர். ஸ்ரீ ராமபிரானின் அணுக்கத் தொண்டர். இவரை ஸ்ரீஹனுமான், ஆஞ்சனேயர், ராமதூதன், மாருதி, அஞ்சனை மைந்தன் என்று பல திருநாமங்களில் வழிபட்டாலும், 'ஸ்ரீ ராமபக்த ஹனுமான்' என்று துதித்து வழிபட்டால் அகமகிழ்ந்து போவாராம். எல்லா பெருமாள் கோயில்களிலும் ஆஞ்சனேயருக்கு ஒரு தனி சன்னிதி உண்டு. இதைத்தவிர ஸ்ரீ ஆஞ்சனேயருக்கென்றே தனிக் கோயில்களும் உண்டு. சுசீந்திரம், நாமக்கல் போன்ற ஊர்களில் ஸ்ரீ ஆஞ்சனேயர் மிக பிரம்மாண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார்.
எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். ராம நாமம் எப்போதும் எங்கேயோ ஒலித்துக் கொண்டேயிருப்பதால் அவர் அந்த இடங்களில் நித்ய வாசம் செய்வதால் அவர் 'சிரஞ்சீவி' என்று அழைக்கப்படுகிறார்.
ஆஞ்சனேயருக்கு, வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வணங்குவார்கள். அத்துடன் வெண்ணெய் காப்பு, செந்தூரக் காப்பு போட்டு அலங்கரிப்பார்கள். இன்று ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி தினம். நாமும் ஸ்ரீ ஆஞ்சனேயரை இன்று வழிபாடு செய்து வணங்கி வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெறுவோம்.