அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமா சோமவாரம் என்கிறது சாஸ்திரம். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருவது நல்ல அதிர்வலைகளை உண்டாக்கும். இதையே ‘அஸ்வத் பிரதட்சணம்’ என்கிறார்கள். திங்கட்கிழமையன்று அரச மரத்தை வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும். சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும் சந்திரனுக்கு உகந்த திங்கள்கிழமை இணைந்த நாள். இந்த நாளில் அதிகாலையில் அரசமரத்தை வழிபட்டு அதை ஸ்ரீமன் நாராயணனாகபாவித்து 108 முறை வலம் வர வேண்டும்.
அமா என்றால் அமாவாசை. சோமம் என்றால் சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையை குறிக்கும். திங்கள் கிழமை அமாவாசை வருவது ‘அமாசோமம்’ என்று அழைக்கப்படுகிறது. அமாசோமம் வழிபாடு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழலாம். திங்கட்கிழமையன்று அமாவாசை வருவது சிறப்பு. இந்த நாளில் மறக்காமல் அருகில் உள்ள அரசமரத்தை வலம் வந்து வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும்.
அரசமரம் ஆன்மிகத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அரச மரத்தை பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமாக சிறப்பித்துச் செல்வார்கள். மரங்களின் அரசனான அரசுக்கு, ‘பிப்பலம்’ என்னும் பெயரும் உண்டு. அரசமரத்திற்கு சக்தி அதிகம். முப்பெரும் தெய்வங்களும் அரசமரத்தில் ஐக்கியமாகியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு முப்பெரும் தெய்வங்களும் இணைந்த வடிவமான விநாயகரை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அரசமரம் கரியமில வாயுவை இழுத்துக் கொண்டு பிராண வாயுவை அளிக்கும். அரச மரத்தடியில் அமர்ந்தாலோ வலம் வந்தாலோ உடல் வளம் பெறும். ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.
‘மரங்களில் நான் அரசமரம்’ என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே கீதையில் அருளுகிறார் என்றால் அரச மரத்தின் பெருமையை விவரிக்கத் தேவையில்லை. மரங்களின் அரசன் என்பதாலேயே அரசமரம் என்று அழைக்கப்படுகிறது.
அரச மரத்திற்கு ‘அஸ்வத்த மரம்’ என்றும் பெயருண்டு. ஹோமங்களில் பயன்படுத்தப்படும் சமித்து என்னும் சொல் அரசங்குச்சிகளை குறிக்கும். அரசங்குச்சிகளை கொண்டு ஹோமம் செய்யும்போது வெளிவரும் புகை மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை உடையது. காற்றில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளை அழிக்கும் சக்தியும் அந்தப் புகைக்கு உண்டு. இந்த அரசமரம் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வலக்கண்ணிலிருந்து தோன்றியதாக பத்ம புராணம் கூறுகிறது. அரசமரத்தின் வேரில் பிரம்மாவும் நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும் மேல் பகுதியில் சிவனும் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அரச மரத்தின் நிழல் பட்ட நீர்நிலைகளின் நீராடுவது பிரயாகை திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமம். திருவாவடுதுறை, திருநல்லம் போன்ற சிவத்தலங்களிலும் திருக்கச்சி, திருப்புட்குழி, திருப்புல்லாணி ஆகிய வைணவ திருத்தலங்களிலும் தல விருட்சமாக அரச மரமே விளங்குகிறது. அரச மரத்தின் அடியில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, பெண்கள் மஞ்சள், குங்குமத்தை மரத்தின் அடியில் தூவி வழிபடுவார்கள்.
அரச மரத்தை ஒவ்வொரு நாளும் வலம் வருவதால் ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்.
அரச மரத்தை ஞாயிற்றுக்கிழமையில் வலம் வந்தால் தீராத நோய் தீரும்.
திங்கட்கிழமையன்று வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்.
அமாவாசை திதியும் திங்கள்கிழமையும் சேர்ந்து வருகின்ற நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருவது இன்னும் சிறப்பாகும்.
செவ்வாய்க்கிழமையில் வலம் வந்தால் செவ்வாய் தோஷங்கள் விலகும்.
புதன்கிழமையில் அரசமரத்தை வலம் வந்தால் வியாபாரம் பெருகும்.
வியாழக்கிழமையில் வலம் வந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
வெள்ளிக்கிழமையில் அரச மரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறலாம்.
சனிக்கிழமையில் வலம் வந்து வணங்கினால் சர்வ கஷ்டங்களும் விலகி மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.
எத்தனை முறை அரச மரத்தை வலம் வருகிறோமோ அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன.
மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும் அடையலாம். நினைத்ததை அடையலாம்.
ஐந்து முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கப்பெறலாம்.
அமாவாசை திதியும் திங்கட்கிழமை இணைந்து வரும் நாளைய அமா சோமவர தினத்தில் அரச மரத்தை வணங்கி வளம் பெறுவோம்.