Oh! Ithukkuthaan  Koyil Thiruvizha Nadathuraangalaa?
Oh! Ithukkuthaan Koyil Thiruvizha Nadathuraangalaa?https://www.youtube.com

ஓ! இதுக்குத்தான் கோயில் திருவிழா நடத்துறாங்களா?

Published on

"ஆதிரை, எங்க ஊர் பத்ரகாளியம்மனுக்கு இன்னிக்குத் தேர்த் திருவிழா. எவ்ளோ நல்லா இருக்கும் தெரியுமா" என்றாள் வான்மதி.

"எனக்கெப்படி தெரியும்? முனீசுவரன்தான் எங்களின் குலதெய்வம். பங்காளிங்க எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைப்பாங்க. அவ்வளவுதான். நீ என்ன… இன்னிக்குத் திடீர்னு அம்மன் புகழ் பாடுறே."

"மேச்சேரி அம்மனை வேண்டித்தான் நான் பொறந்தேன்னு அம்மா சொல்வாங்க. மாசிமகம் அன்றைக்கு அம்மன் தேர்ல் பவனி வருவாங்க. ஊர் கூடி தேர் இழுக்கும். இன்னிக்குத்தான் தேர்த் திருவிழா. அம்மன் கோயிலுக்கு அம்மா போகப் போறேன்னு சொன்னாங்க. அதனால் எனக்கும் அம்மன் நினைவு வந்திடுச்சி."

"எதுக்குடி இவ்ளோ செலவு செஞ்சு திருவிழா நடத்தணும்? அதுக்குச் செலவழிக்கும் தொகையிலே ஊர்லேயே சின்ன தொழிற்சாலை தொடங்கலாம், பள்ளிக்கூடம் கட்டலாம். ஊரைச் சுற்றி வாழறவங்களுக்கு வேலையாவது கிடைக்கும். பலரும் வயிறாரச் சாப்பிடுவாங்க. எங்க அப்பா ஒரு கூலித் தொழிலாளி. அவர் உழைச்சுக் கொண்டு வரப் பணம் வீட்டுக்கே சரியாயிடும். முனீசுவரனுக்குப் பொங்கல் வைக்கக்கூட அப்பா கடன்தான் வாங்குவாரு. இதெல்லாம் தேவையா?"

"திருவிழாவை எதுக்கு நடத்தறாங்கன்னு தெரியுமா உனக்கு? மக்கள் தங்கள் உற்றார், உறவுகளோடு இணைந்து தங்கள் கவலைகளை மறந்து, மகிழ்வாய் இருக்கத்தான். உறவுகளோடு பேசாம, எப்பவும் வேலையிலே மூழ்கி இருப்பதால் மனசே பாரமாக இருக்கும். திருவிழாவை சாக்கு வைச்சு சொந்த ஊருக்கு வந்து உறவுகள்கிட்டே பேசறதுனாலே மனபாரம் குறைஞ்சு மகிழ்ச்சியா இருப்பாங்க. பணத்தால் வரும் ஏற்றத் தாழ்வில்லாமல் ஒற்றுமையாக ஒன்றாய்க் கூடி விழா ஏற்பாடெல்லாம் செஞ்சு மன அமைதி அடைவாங்க. அதற்காகத்தான் இந்தத் திருவிழா ஏற்பாடு எல்லாம்.

நாலு பேருக்காவது வயிறு நிரம்ப சாப்பாடு போடணும்னு நினைக்கிறவங்களின் ஆசையும் இந்த விழா மூலம் ஈடேறும்.

தன்னம்பிக்கையோடு இனி வரப்போகும் நாட்களை வரவேற்கவும் இது உதவுது. இறைவனிடம் தங்கள் குறைகளைச் சொல்லி விரதம் இருக்கும்போது மனம் இலேசாகி, புது சிந்தனைகள் தோன்றும்.

அந்த சிந்தனைகள் வழிகாட்ட, தாங்கள் நினைச்சத அடையறாங்க. எல்லாம் தங்களால்தான் நடக்குது என்ற ஆணவம் வராதிருக்க, 'எல்லாம் இறைவன் அருள்' என்று எல்லாத்தையும் இறைவன்தான் செய்யறான்னு சொல்லி மகிழ்வாங்க."

"நான் திருவிழாவை இப்படி யோசிச்சுப் பார்த்ததில்லைடி. திருவிழாவெல்லாம் வீண்தான்னு நினைச்சேன். அது தவறுன்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன். நீ சொல்றதுதான் சரிடி."

அதற்குள் செல்பேசி அழைப்பு. எடுத்தாள் வான்மதி. வீடியோ காலில் வந்த அம்மா, மேச்சேரியம்மனின் தேரோட்டத்தை நேரலையில் காட்ட அதைத் தனது தோழி ஆதிரைக்கும் காட்டி மகிழ்ந்தாள் வான்மதி.

இதையும் படியுங்கள்:
வாஸ்து மீன் வளர்ப்பால் வருமான வரவு உண்டாகுமா?
Oh! Ithukkuthaan  Koyil Thiruvizha Nadathuraangalaa?

சற்று நேரத்தில் அலுவலகத்திலிருந்து வந்தது ஒரு அழைப்பு. அழைப்பை ஏற்றதும் மகிழ்ச்சியில், ‘ஓ...’ என்று கத்தினர் இருவரும்.

ஒரே அலுவலகத்தில் பணியாற்றி ஒரே அறையில் தங்கியிருக்கும் அன்புத் தோழிகள்தான் ஆதிரையும் வான்மதியும். இன்று ஓய்வு நாளாக இருப்பதால் அந்த நல்ல செய்தியை அழைப்பின் வழியே கேட்டனர், தோழிகள் இருவரும். ஆம். இருவருக்கும் பணி உயர்வென்ற செய்திதான் அது.

சென்னை சிறுசேரியில் வெளிநாட்டுக் குழுமத்தில் பணியாற்றும் ஆதிரையும், வான்மதியும் ஒரே குரலில், 'எல்லாம் அம்மன் அருள்' என்றனர்.

logo
Kalki Online
kalkionline.com