பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விபூதி மண் கலயம் மிதந்து வரும் அதிசய சிவன் கோயில் தீர்த்தம்!

பச்சோட்டு ஆவுடையார் கோயில்
பச்சோட்டு ஆவுடையார் கோயில்
Published on

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலிருந்து ஈரோடு செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் மடவிளாகம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது மிகப் பழைமையான 'பச்சோட்டு ஆவுடையார்'  மற்றும் ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில். இது மிகப் பழைமையானது மட்டுமல்ல, மிகவும் பிரம்மாண்டமான கோயிலுமாகும். கையில் பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தலத்து இறைவன், ‘பச்சோட்டு ஆவுடையார்’ என்றும், அம்பாள் ஸ்ரீ பச்சை நாயகி என்னும் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்தப் பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருக்கோயில் இதுதான். கொடிமரம் வணங்கி, வாத்திய மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து வந்தால் 'ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர்' என்னும்  சுயம்பு மூர்த்தியை தரிசனம் செய்யலாம். 'ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர்', 'ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர்’ என்று இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள பெரிய சிவஸ்தலமாகும் இது.

இந்தக் கோயிலின் பின்புறம் சிவபெருமான் தனது நகத்தால் கீறி உண்டாக்கிய அற்புதமான சுனை ஒன்று உள்ளது. இந்தத் தலத்தின் தீர்த்தம், 'நிகபுஷ்கரணி' என்று பெயர் பெற்றது. இது கங்கையைப் போல பெருமையை உடையது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள சுனையில் விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புதம் நிகழ்கிறதாம். இது சுடாத மண் கலயம், அதாவது பச்சை மண் கலயம் ஆனதால், இந்த சிவன் பச்சை ஓடு உடையார் (பச்சோட்டுடையார்) என்று அழைக்கப்படுகிறார். இந்த மண் கலய விபூதி பிரசாதத்தை சிறிதளவு உட்கொண்டாலும், பூசிக்கொண்டாலும் தீராத வியாதிகள் தீரும் என்பது ஐதீகம்.

இங்கே அம்பாள் பார்வதியாக தவம் செய்ததால் இந்த இடம் பார்வதிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. தல புராணத்தின்படி சிவபெருமான் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்தபோது அவர் கையில் அந்தத் தலை ஒட்டிக் கொண்டது. அதை நீக்க முடியாமல் சிவபெருமான் மிகவும் சிரமப்பட்டார். மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி அம்பாள் பார்வதி தெருவில் உணவைத் தெளித்தாள். பிரம்மாவின் தலை சிவனின் கையை விட்டு இறங்கி அந்த உணவை உண்ண ஆரபித்தது. பிரம்ம கபாலம் அந்த உணவை சாப்பிட்டு முடிக்குமுன் சிவன் கோயில் குளத்தில் குளித்ததால் தலை திரும்பவும் அவர் கையில் ஒட்டவில்லை.

இதையும் படியுங்கள்:
50 வயதுக்கு மேல் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்! 
பச்சோட்டு ஆவுடையார் கோயில்

இறைவன் பிச்சாடனராக கையில் பச்சை ஓட்டை ஏந்தி பிட்சை கேட்டபோது பார்வதி தேவி அன்னபூரணியாக அந்தக் கலயத்தில் பிட்சை இட்டாள். அதனாலேயே சிவபெருமான் பச்சோட்டுடையார் என்று அழைக்கப்படுவதாகவும் புராணம் கூறுகிறது. திருக்கோயில் முன்பு இரட்டை விநாயகர் சிலை, வேம்பு, அரச மரங்களின் கீழ் அழகுடன் அமைந்திருக்கிறது. திருக்கோயில் உள்ளே கொடிமரமும் அழகான நந்தீஸ்வரர் சன்னிதியும் அமைந்துள்ளன.

வழக்கமாக சிவன் கோயில்களில் நடைபெறும் பூஜைகளைத் தவிர அமாவாசை, பௌர்ணமி தினங்கள், மகா சிவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வஸ்திரம் சாத்தியும், அபிஷேகம் செய்தும் பச்சோட்டுடையாரை வழிபடுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com