

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஒரு திருக்கோயிலாகும். இக்கோயிலின் மஹாகும்பாபிஷேகம் நேற்று (08.12.2025) காலை 5.45 மணி அளவில் நடைபெற்றுள்ளது. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் லிங்கம் மணலால் ஆனது. ஒரு சமயம் கயிலாயத்தில் ஈசனின் கண்களை விளையாட்டாக பார்வதி தேவி மூடினாள். இதனால் ஈரேழு லோகங்களும் இருளில் மூழ்கின. ஈசன் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருளை அகற்றினார்.
பார்வதி தேவி விளையாட்டாக இச்செயலைச் செய்தாலும் இதனால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின. இதற்கு பிராயச்சித்தமாக ஈசன் பார்வதி தேவியிடம் பூலோகத்திற்குச் சென்று தன்னை நினைத்து தவமியற்றுமாறு ஆணையிட்டார்.பார்வதி தேவியும் பூலோகத்திற்குச் சென்று காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் கீழ் மணலால் ஒரு லிங்கத்தை உருவாக்கி தவமியற்றத் தொடங்கினாள்.
பார்வதி தேவியின் தவ வலிமையை இவ்வுலகிற்கு உணர்த்த விரும்பிய ஈசன், ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். கம்பா நதியில் வெள்ளத்தை உருவாக்கி பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். மணலால் உருவான லிங்கமல்லவா? வெள்ளத்தில் மணல் லிங்கம் கரைந்து அடித்துச் செல்லாதவாறு பார்வதி தேவி அந்த மணல் லிங்கத்தை ஆரத்தழுவிக் கொண்டார்.
அம்பாள் பார்வதி தேவி அணைத்த சிவன் என்ற காரணத்தினால் ஈசனுக்கு 'தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள தீர்த்தமே கம்பா நதியாகும். முற்காலத்தில் ஒரு நதியாக ஓடிய கம்பா நதி தற்போது சிறிய தீர்த்தமாகக் காட்சியளிக்கிறது.
ஏகாம்பரநாதர் கருவறைக்குப் பின்புறத்தில் அமைந்துள்ள ஒரு பிராகாரத்தில் மிகவும் பழைமையான மாமரம் ஒன்று உள்ளது. இம்மாமரம் 3500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமையான மரம் என்று கருதப்படுகிறது. இந்த மாமரத்தின் கீழ் ஈசன் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமாஸ்கந்த வடிவத்தில் காட்சி தருகிறார். இங்கு அம்பாள் நாணத்தோடு தனது தலையை சற்றே சாய்த்து ஈசனை நோக்கி திரும்பியவண்ணம் அமைந்து காட்சி தந்து அருளுகிறார்.
அம்பாள் ஈசனை நோக்கி தவமியற்றியபோது இம்மாமரத்தின் கீழ் காட்சி தந்து அவரை மணம் முடித்ததாக ஐதீகம். மிகவும் புனிதமாகக் கருதப்படும் இந்த மாமரமானது நான்கு வேதங்களை பிரதிபலிக்கும் விதமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என நான்கு வகையான சுவை கொண்ட கனிகளைத் தருவது வியப்பு.
நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் அதிசயமாக சைவ தலமான இத்தலத்தில் ஒரு திவ்ய தேசம் அமைந்துள்ளது. மூலவர் ஏகாம்பரநாதர் எனும் தழுவக்குழைந்தநாதரை வழிபட்டு சுற்றி வரும்போது ஒரு பிராகாரத்தில் நிலாத்திங்கள் துண்டப்பெருமாள் சன்னிதி அமைந்துள்ளது.
சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டார். சுந்தரர் தல யாத்திரை மேற்கொண்டிருந்தபோது ஞாயிறு என்ற தலத்தில் வாழ்ந்து வந்த சங்கிலி நாச்சியார் என்ற பெயரோடு சிவத்திருப்பணி செய்து கொண்டிருந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.
சங்கிலி நாச்சியாரோ, இறைவனை சாட்சியாக வைத்து தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பினார். இறைவனின் திருவுளப்படி கோயிலில் இருந்த மகிழம்பூ மரத்தினை சாட்சியாக வைத்து சுந்தரர் சங்கிலி நாச்சியாரை மணம் முடித்தார். அப்போது எக்காரணத்தைக் கொண்டும் அவரைப் பிரிய மாட்டேன் என்று மகிழ மரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்து சத்தியத்தை மீறி திருவாரூருக்குச் சென்றதால் தனது கண் பார்வையினை இழந்தார்.
பார்வையிழந்த நிலையில் தல யாத்திரையினை மேற்கொண்டபோது அவருக்கு திருவெண்பாக்கம் என்ற தலத்தில் ஊன்றுகோலைக் கொடுத்த ஈசன் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருத்தலத்தில் இடது கண் பார்வையை மட்டும் வழங்கி அருள்புரிந்தார். சுந்தரர் காஞ்சிரபுரத்தில் பாடிய பதிகம் முழுவதையும் பாராயணம் செய்தால் கண் பார்வை தொடர்பான குறைபாடுகள் அனைத்தும் நீங்கப் பெறலாம்.