Osho
ஓஷோ

ஓஷோ பார்வையில் ஆசிர்வதிக்கப்பட்ட முட்டாள்கள்!

நீங்கள் ஆனந்தமாய் இருக்கும்போது பொறாமை இருக்காது, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது ஆணவம் இருக்காது. ஆகவே, ஆனந்தமாய் இருங்கள், மகிழச்சியாக இருங்கள். அன்பு, கருணை என்பதில் புனிதமானது, புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்போதும் மானதுதான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்.

நீ விரும்பாதது எதுவானாலும் அதை எதிர்கொள். நீ தவிர்க்க விரும்புவது எதுவானாலும் அதை ஒருபோதும் தவிர்க்காதே. எதற்கெல்லாம் பயப்படுகின்றாயோ அதையெல்லாம் எதிர்கொள். இவைதான் அவற்றை தீர்த்துவிட ஒரே வழி. இல்லையெனில், அவையெல்லாம் உன்னை பேய் நிழல் போல் தொடர்ந்து வரும். சிந்தித்துக்கொண்டே இருக்காதே. எண்ணங்களை விட்டுவிட்டு உனக்குள் நுழை. எண்ணங்களற்ற தியானத்திலேயே வாழ்வின் சக்தியோட்டம் கண்டறியப்படுகிறது. நீயே பரிசோதனை செய்யாமல் எந்த அனுபவமும் கிடைக்காது.

நீங்கள் என்ன செய்கிறீர்களோ, செய்யாமல் இருக்கிறீர்களோ அது ஒரு பொருட்டே அல்ல. அன்பாயிருங்கள், விழிப்புணர்வோடு இருங்கள். செய்வதை மகிழ்ச்சியோடு செய்யுங்கள். நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும் இந்த நேரத்தில் இதுவே உலகத்தில் தலையாய வேலை என்கிறபடி அதைச் செய்யுங்கள். ஒரு வேலையை வெறுத்து செய்கிறவன் அடிமை. வேலையை விரும்பிச் செய்பவன் அரசன்.

எனக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன என்று சொல்லும் நிலைக்கு நீங்கள் எப்போதும் வருவதில்லை. ஒவ்வொரு கணமும் புதிய ஆசை உங்களைப் பற்றிக் கொள்கிறது. உங்கள் அறிவுக் கருவூலத்தைத் திருட ஒருவன் வந்து விடுகிறான். அந்த திருடன் வேறு யாருமல்ல, உங்களிடம் எழும் புதிய ஆசைதான் அந்தக் கள்வன்.

எத்தனை அமைதியாக இருக்கிறீர்களோ அத்தனை சிறந்தது. ஏனென்றால், மக்கள் சொற்களை தவறாகப் புரிந்து கொள்வதில் வல்லுநர்கள். உன்னைச் சுற்றி இருப்பவற்றில் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள் முகமாகத் திருப்பிக் கொள்.

இதையும் படியுங்கள்:
டெங்கு காய்ச்சல்: சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 
Osho

முட்டாள்களில் எத்தனை வகை இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு வகையினருக்கு, உண்மையில் ஒன்றுமே தெரியாது. ஆனால், தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது கூட அவர்களுக்கு தெரியாது! இது சாதாரண வகை. இரண்டாவது வகை இவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதேசமயம், தெரிந்தது போல காட்டிக்கொள்ளந் தெரியும்! இப்படிப்பட்டவர்கள் கொஞ்சம் படித்த முட்டாள்கள். மூன்றாவது வகை, தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இவர்களே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரும் முதலில் ஒரு சாதாரண முட்டாளாகவே பிறக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும், ஒரு சாதாரண முட்டாள்தான். ஆனால், அவர்களுடைய முட்டாள்தனத்தைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அதை அறியக்கூடிய அளவுக்கு அவர்களது அறிவு இன்னும் முதிர்ச்சி அடையவில்லை.

‘புத்து’ என்ற வார்த்தைக்கு ‘முட்டாள்’ என்று அர்த்தம். அது ‘புத்தர்’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. புத்தர் தனது அரச போகங்களைத் துறந்து, நாட்டை விட்டு சென்ற பிறகு, பலரும் அவரைப் பின்பற்ற நினைத்தார்கள். அப்பொழுது அந்த நாடே குழப்பத்திலும், கொந்தளிப்பிலும் இருந்தது. அவரைப் பின்பற்ற நினைப்பவர்களிடம் மற்றவர்கள், ‘புத்து போல இருக்காதே! (அதாவது, முட்டாள்தனமான இருக்காதே!) அவரைப் பின்பற்றதே’ என்று எச்சரித்தனர். ஆனால், அப்படி தைரியமாகப் பின்பற்றியவர்களை ஜனங்கள், ‘புத்து’ என்றே அழைத்தார்கள். ஏனெனில், மூளை உள்ளவன் எவனாவது இவ்வளவு பெரிய சுகபோக அரச பட்டத்தைத் துறந்து, காட்டுக்குச் செல்வானா என்றே மக்கள் சிந்தித்தார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, அவர்களது சிந்தனை சரியானதுதான். ஆகவேதான், சித்தார்த்தா, புத்தர் ஆனார். உலகம் இரண்டு வகை முட்டாள்களால்தான் நிரப்பப்பட்டு இருக்கிறது! இந்த மூன்றாவது வகை முட்டாள்கள், மிக அரிதாகவே தோன்றுவார்கள். இந்தப் பெரிய தாவலுக்கு மிகுந்த மன தைரியம், வைராக்கியம் தேவை. ஆகவே, இரண்டாவது நிலையிலிருந்து, மூன்றாவது கட்டத்துக்கு ஒரே தாவலாகத் தாவுங்கள். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட முட்டாள்களுக்கு, என் ஆசிர்வாதம்.

logo
Kalki Online
kalkionline.com