பாம்பு யாகம் தந்த சாபம்: கொடிய நோயில் இருந்து ஜனமேஜயனை காத்த குருவாயூரப்பன்!

Sri Guruvayurappan Temple
Sri Guruvayurappan Temple
Published on

கவான் மகாவிஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் முடிந்ததும் மீண்டும் வைகுந்தம் ஏகினார். மகாபாரதப் போருக்குப் பின்னர் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீக்ஷித்து மன்னன், தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தான். அதனால் அவனது மகன் ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் ஒன்றைச் செய்தான். அந்த யாகத்தில் கொடிய விஷமுடைய அனைத்து நாகங்களும் தாமே வந்து புகுந்து உயிரை விட்டன.

இதைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர், ‘‘மன்னா, இந்தக் கொடிய யாகத்தை உடனே நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே” என்று கூறினார். முனிவரின் வார்த்தையை ஏற்ற மன்னன், உடனே அந்த யாகத்தை நிறுத்தினான். ஆனாலும், கணக்கிலடங்காத பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயனை கொடிய தொழு நோய் பீடித்தது.

இதையும் படியுங்கள்:
சக்தி வழிபாட்டின் உச்சம்: தீமையை வென்று நன்மையைப் போற்றும் நவராத்திரி பண்டிகை!
Sri Guruvayurappan Temple

சில காலம் சென்றதும் ஜனமேஜயனை சந்தித்தார் பரசுராமர். மன்னன் ஜனமேஜயன் தனது தொழு நோய் நீங்க பரசுராமரிடம் உபாயம் ஒன்றைக் கூறும்படி கேட்டான். அதைக் கேட்ட பரசுராமர், “குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த பகவான் மகாவிஷ்ணுவின் திருத்தலமாக கேரள திவ்ய தேசமான குருவாயூர் திகழ்கிறது. அங்கு அருள்பாலிக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு அன்னை பார்வதி தேவியோடு சிவபெருமானே அபிஷேகம் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இத்தலத்தின் அருகிலேயே சிவ திருத்தலமாக மம்மியூர் விளங்குகிறது. இங்குள்ள ருத்ர தீர்த்தத்தில் நீராடி, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணரையும் மம்மியூர் மகாதேவனான சிவபெருமானையும் தவமியற்றி வழிபட்டால் உனது கொடிய நோய் தீரும்” என்று கூறி அருளினார்.

அதன்படியே குருவாயூர் திருத்தலம் வந்த ஜனமேஜயன், அனுதினமும் ருத்ர தீர்த்தத்தில் நீராடி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் மம்மியூர் மகாதேவரையும் பக்தியோடு வழிபட்டு தவமியற்றினான். இப்படியே சில காலம் கடந்தது. ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணன் குருவாயூரப்பனாக ஜனமேஜயன் முன் தோன்றி, ‘ஜனமேஜயா, உனது தவம் பலித்தது. இனி, உனது நோய் குணமாகிவிடும்’ என்று கூறியருளினார்.

இதையும் படியுங்கள்:
மகாவிஷ்ணுவின் வாகனமான கருட பகவான்: பிரம்மிக்க வைக்கும் புராண வரலாறு!
Sri Guruvayurappan Temple

இறைவனின் சித்தப்படியே ஜனமேஜயன் தொழு நோய் அவனை விட்டு நீங்கியது. அதனால் மகிழ்ந்த மன்னன் ஜனமேஜயன், மீண்டும் தாம் நாடு திரும்புவதற்கு முன்னர் குருவாயூர் திருத்தலத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒரு சிறப்பான கோயிலைக் கட்டி முடித்தான்.

அது மட்டுமின்றி, ‘உடல் நலம் குன்றியவர்கள் இந்த ருத்ர புஷ்கரணியில் நீராடி பக்தியோடு ஸ்ரீ குருவாயூரப்பனையும் மம்மியூர் மகாதேவரையும் வழிபட்டு வந்தால் விரைவில் அவர்களது நோய் முற்றிலும் நீங்கி சுகம் பெறலாம்’ என்றும் மக்களிடம் கூறினான். அதன்படியே ஸ்ரீ குருவாயூரப்பன் இன்றளவும் பக்தர்களின் ரோகங்களைத் தீர்த்து அருள்பாலித்து வருவது கண்கூடு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com