
நவராத்திரி என்றாலே கோலாகலம், கொண்டாட்டம்தான். இது தமிழ்நாட்டில் ஒரு பிரதான பண்டிகையாகும். இது ஒன்பது இரவுகளையும், பத்து பகல்களையும் கொண்ட பெண்மையைப் போற்றும் பண்டிகையாகும். இதில் வணங்கப்படும் தெய்வங்கள் துர்கை, லட்சுமி, சரஸ்வதி எனப்படும் முப்பெரும் தேவியர் ஆவர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று சக்திகளை வணங்கி அவர்களின் அருளைப் பெறுவதே இந்த பண்டிகையின் நோக்கம். நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம்.
உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தாத்பரியம். தென்னிந்தியாவில் புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்குப் பிறகு வரும் நவராத்திரிதான் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது வீட்டில் பொம்மைகளை அடுக்கி கொலு வைத்து, பூஜை செய்து, அக்கம்பக்கத்து பெண்களை அழைத்து உபசரித்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.
இன்று நவராத்திரி பண்டிகை கோலாகலமாகத் துவங்குகிறது. நவராத்திரி என்பது தீமையை அழித்து, நன்மை வென்றதை கொண்டாடும் பண்டிகையாகும். இது தமிழ் நாட்டில் இமாலய அளவுக்கு உற்சாகத்துடன் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரை வரும் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரியில் துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதிக்கு வழிபாடு செய்யப்படுகிறது. ஒன்பதாம் நாளான நவமி திதியன்று கல்விக்கடவுளான சரஸ்வதிக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஆயுத பூஜை என்று சொல்வார்கள்.
நவராத்திரியின் தாத்பர்யமாக புராணங்களில் சொல்லப்படுவது என்னவென்றால், எமனின் இரண்டு கடவாய் பற்களும் கோரமாக நீட்டிக் கொண்டிருக்கும். அதுதான் வசந்த ருது, சரத் ருது என்று கூறப்படுவது. அதனால்தான் அந்தக் காலங்களில் எமனை நடுங்கச் செய்யும் தேவியை ஆராதிக்கும் நவராத்திரி விழா முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கையை ஆராதிப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் மனதிற்கு தைரியமும் கிடைக்கிறது. இரண்டாவது மூன்று நாட்கள் மகாலட்சுமியை ஆராதிப்பதால் குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அன்யோன்னியம் அதிகரித்து சுபிட்சம் அபரிமிதமாகக் கிடைக்கிறது. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை ஆராதிக்கும்போது கல்விச் செல்வம் வளருகிறது, கலைகள் வளர்கின்றன, ஞானம் சித்திக்கிறது.
தேவியின் விழியை முதல் நாள் திறக்கும்போது (மையிட்டு) பக்கத்தில் சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை வைத்துக் கொண்டுதான் திறக்க வேண்டும். மிக நீண்ட நாட்கள் கழித்துக் கண் விழிக்கும்போது தேவி அகோர பசியிலிருப்பாள். தினமுமே ஐந்து வேளை பால், பாயஸம், மஹா நைவேத்தியம் (சாதம், பருப்பு, நெய் போன்றவை) சுண்டல், பானகம் எல்லாம் நைவேத்தியமாக சமர்ப்பிக்க வேண்டும்.
நவராத்திரி விழாவில் தினமும் பூஜைகள் முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், ரவிக்கைத் துணி போன்ற மங்கலப் பொருட்களை வழங்குவது பழக்கம். ஒன்பது கன்யா பெண்களை பூஜிக்க விஜயதசமி மிக உகந்த நாள். கொலு முடிந்து பொம்மைகளைப் படுக்க வைக்கும்போது இரவு 11.55க்குள் படுக்க வைக்க வேண்டும்.