திருமயிலை தலத்தில் சிவநேசர் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்ட அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரை பற்றியும் அவரது சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தனது மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து வைத்த நினைத்தார். ஆனால், கடவுளின் எண்ணம் வேறாக இருந்தது.
ஒரு நாள் பூம்பாவை தோட்டத்தில் தனது தோழிகளுடன் பூக்கள் பறித்துக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவளைத் தீண்டியது. பூம்பாவை மரணம் அடைந்த பின்னரும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, பூம்பாவையின் உடலை எரித்து அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் அதை பத்திரமாக வைத்து பாதுகாத்து வந்தார்.
ஒரு சமயம் திருஞானசம்பந்தர் திருவொற்றியூர் வந்திருப்பதை அறிந்த சிவநேசர், அவரைச் சந்தித்து வணங்கினார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தை கொண்டு வந்து சம்பந்தர் முன்பு வைத்து பூம்பாவை பற்றிய விவரங்களை அவரிடம் சொல்லி அழுதார்.
திருஞானசம்பந்தர் அவரைத் தேற்றி அவருக்கு ஆறுதல் கூறினார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து ஒரு பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு, அன்று பூத்த மலராய் வெளியே வந்த பூம்பாவை சம்பந்தர் பெருமானை வணங்கினாள்.
அதனையடுத்து, சிவநேசர் தனது மகள் பூம்பாவையை ஏற்றுக்கொள்ளும்படி திருஞானசம்பந்தரிடம் வேண்டினார். ‘விஷம் தீண்டி இருந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததன் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள்’ என்றார் என்று கூறிய சம்பந்தர், சிவநேசரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விடுகிறார்.
அதைத் தொடர்ந்து பூம்பாவை தனது வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள். கபாலீஸ்வரர் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சன்னிதி ஒன்று இருக்கிறது. அதன் அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி பங்குனி பெருவிழாவின் எட்டாம் நாளான அன்று நடைபெறும். திருஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உத்ஸவ மூர்த்திகள் அன்று கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருளுவது வழக்கம்.