

* புதுச்சேரி அருகே நல்லாத்தூர் நாராயணன் கோயிலில் அருளும் ஆண்டாளுக்கு திருமண விழா போகியன்று நடத்துகிறார்கள். அன்று ஆண்டாளுக்கு சூட்டிய பூமாலையை திருமணமாகாத ஆண்கள், கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகத் தருவார்கள். இதனால் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
* இமாச்சலத்தில் உள்ள காக்ராவஜ்ரேஸ்வரி ஆலயத்தில் வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு சங்கராந்தி அன்று மருந்து வழிபாடு செய்வார்கள். அம்மன் அரக்கனுடன் போரிட்டு அவனை அழித்தபோது ஏற்பட்ட காயத்தை மருந்திட்டு ஆற்றிக் கொண்டதன் நினைவாக இதை சங்கராந்தியில் கொண்டாடுகின்றனர். 500 கிலோ நெய்யை தண்ணீரில் பலமுறை கழுவுவார்கள். அப்போது அது வெண்ணெய் போல் ஆகிவிடும். அதை அம்மனுக்குக் காப்பிட்டு அதன் மீது பலவிதமான பழங்களைப் பதித்து அலங்காரம் செய்வார்கள். இது ஒரு வாரம் அப்படியே இருக்கும். பின்பு அதை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவார்கள். இது பல வியாதிகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது.
* பொதுவாக, வைணவத் திருத்தலங்களில் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். அன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள ஆதிரங்கம் என்று போற்றப்படும் ரங்கநாதர் கோயிலில் மகர சங்கராந்தி (தை பொங்கல்) அன்றுதான் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதுபோல் வேறு எங்கும் நடைபெறுவதில்லை.
* மகரஜோதி திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் நடைபெறும். சுவாமி ஐயப்பன் மகர சங்கராந்தி அன்று பொன்னம்பலமேட்டில் ஜோதி ஸ்வரூபமாக பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இந்த நேரத்தில் கருவறையில் ஐயப்பன் தனது தந்தை ராஜசேகரன் வழங்கிய தங்க நகைகளை அணிந்து ராஜ கோலத்தில் தந்தைக்குக் காட்சியளிப்பார்.
* திண்டுக்கல் மாவட்டம், சின்னாளம்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சனேயருக்கு தைப்பொங்கல் அன்று 5008 கரும்புகளால் அலங்காரம் செய்வர்.
* கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் அருகே அமைந்துள்ளது தர்ம சாஸ்தா மஞ்சுநாதேஸ்வரர் கோயில். இத்திருக்கோயில் மகரசங்கராந்தி அன்று மட்டும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். மற்ற நாட்களில் மூடப்பட்டிருக்கும். 140 படிகள் கொண்ட இத்தலத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை.
* கும்பகோணம் சாரங்கபாணி ஆலய தாயார் படிதாண்டா பத்தினியாக விளங்குகிறார். காணும் பொங்கலன்று மட்டும் தாயார் கோயில் உட்பிராகாரத்தில் வலம் வந்து கணுப்பிடி வைப்பார். பெண்கள் இதில் கலந்து கொண்டு பக்தியோடு தரிசனம் செய்வர்.