

அகத்தியர் யாகம் செய்த இடம் பஞ்சேஷ்டி தலம். பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தியர் கோவில் சென்னை கொல்கத்தா சாலையில் தச்சூர் அருகே உள்ளது. இத்தலம் பிரும்மா வினால் மாமுனிவர்களான வசிஷ்டர், கௌதமர், கண்வர் ஆகியோர்க்கு தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக காண்பிக்கப்பட்டது. இங்கு அவர்கள் தவமியற்றினர். கத்திய முனிவரும் இங்கு தங்கியிருந்து கடைபிடிக்க வேண்டிய 5 இஷ்டிகளை கடைப்பிடித்தார். அவைகள் தேவயக்ஞம், பித்ரு யக்ஞம் , பூதயக்ஞம், மானுஷ கட்டம், பிரம்ம யக்ஞம் என ஐந்து வகைப்படும்.
இவையாவும் இங்கு தடையில்லாமல் நடைப்பெற்றதால் பஞசேஷ்டி (பஞ்ச+இஷ்டி) என வழங்கப்பட்டது. அது மருவி பஞ்சேட்டி என்று அழைக்கின்றனர். கோடைக் காலத்தில் இத்தலம் சுற்றி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் இவ்வூர் மேற்பரப்பிலேயே சுவையான நீர் கிடைக்கிறது. இதனால் இத்தலம் பஞ்சம் தீர்க்கும் பஞ்சேஷ்டி என வழங்கப்படுகிறது.
யட்ச ராஜனின் சாபவிமோசனம்
திருக்கைலாயத்தில் ஒருமுறை சிவபெருமான் சிவதத்துவத்தை போதித்துக் கொண்டிருந்தார். பார்வதியும் அருகில் இருந்தாள். அங்கிருந்த சுகேது என்ற யட்ச ராஜன் சிவனிடம் பார்வதியை அருகில் வைத்துக்கொண்டு சிவதத்துவத்தை கூறுவது சரியா என்று கேட்டார். சிவன் புன்னகைத்தார். ஆனால் முருகப் பெருமானுக்கு கோபம் வந்து சிவனும் சக்தியும் ஒன்று, நீ எப்படி இந்த கேள்வி கேட்கலாம் என சுகேதுவை அசுரனாக பிறக்கும்படி சபித்தார்.
சுகேது அசுரனாகப் பிறந்து ஒரு அசுரப் பெண்மணியை மணந்து மூன்று பிள்ளைகளைப் பெற அந்த பிள்ளைகள் பார்வதியை துதித்து பலவரங்களைப் பெற்று தேவர்களை துன்புறுத்தினர். தேவர்கள் சிவனிடம் வேண்ட அவர் அகத்தியரிடம் அந்த மூன்று பிள்ளைகளுக்கு பாடம் புகட்டும்படி கூறினார். சுகேது அசுரர்களிம் போரிட்டு தோற்று கடல் அடியில் ஒளிந்து கொணாடான். அவன் மகன்கள் தந்தையை கடலில் தேடினர். கடல் உயிரினங்கள் அழிந்து கடல் பிரளயம்போல் ஆனது. அகத்தியர் அவர்களைக் கட்டுப்படுத்த சுகேது மற்றும் அவன் மகன்களை கடல் நீரோடு விழுங்கினார். இதனால் பூமி வறண்டது.a
தேவர்கள் மீண்டும் கடலை உண்டாக்க அகத்தியரிடம் வேண்டினர். அவரும் இருந்த இடத்தில் கடல்நீரை உமிழ்ந்தார். அந்த நீரே அகத்தியர் தீர்த்தம் ஆனது. சுகேதுவும் மகன்களும் தங்களை மன்னிக்க வேண்டினர். அகத்திரயரும் இந்த தீர்த்தத்தில் அவர்களை நீராடச் செய்து ஐந்துவித வேள்விகளை செய்வித்து சாபவிமோசனம் வழங்கினார். வைகாசி பௌர்ணமியன்று அகத்தியர் ஒவ்வொரு வருடமும் இங்கு எழுந்தருளுவார் என்று நம்பப்படுகிறது.
இங்கு மூலவர் அகத்தியர். இங்கு இருக்கும் லிங்கம் சுயம்பு மூர்த்தியாகும். அம்பாள் ஆனந்தவல்லி முக்கண் உடையவள். திருமேனி பச்சைநிற மரகதக்கல்லால் ஆனது. அகத்தியரின் வேண்டுதலால் அவரது யாகங்களுக்கு இடையூறு செய்ய வந்த சக்திகளை அழிக்க தன் இடது காலை முன்வைத்தும்,மூன்று கண்களால் அசுர தீயசக்திகளை அளித்ததால் அம்பாளின் திருக்கோலம் சூரசம்ஹார திருக்கோலம் ஆகும்.
இந்த அம்பாளை குளிர்விக்க அம்பாளுக்கு. முன். மிகப்பெரிய துர்க்கா யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது இந்த மந்திரத்தின் அதிதேவதையின் சிற்ப வடிவம் ராஜகோபுர நுழைவாயிலில் மேல் முகப்பில் உள்ளது. அகத்திய தீர்த்தத்தில் நீராடி கோவிலை அங்கப் பிரதட்சணம் அடிப்பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றினால் நோய்கள் தீரும். அம்பிகையின் பார்வையில் நவக்கிரகங்கள் ,அஷ்டதிக்பாலகர்கள் அமைந்துள்ளதால் நவக்கிரக வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
இங்கு ராஜகோபுரம் தெற்கில் உள்ளது. அதனால் இதை பரிகாரத்தலம் என்று கூறுகின்றனர். அகத்தியர் கடைபிடித்த ஐந்து இஷ்டிகளில் ஒன்று மானுஷ இஷ்டி. இது சக மனிதர்களுக்கு உணவு உடை அளிப்பதாகும். இங்கு உணவு அளித்தால் பிறவிப்பயன் கிடைக்கும். திருமணத்தடை நீங்க துர்க்கா யந்திரம் அமைந்துள்ள சன்னதியில் செவ்வாய் வெள்ளிகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய எல்லாவித திருமண தடைகளும் நீங்கும். சத்ரு தோஷம் முன்னேற்ற தடைதோஷம் நீங்கி பிறவாத பேரினையும் அளிக்கும் இத்தலம் குறித்து அகத்தியர் நாடி ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ளது.