பாண்டுரங்கனிடம் துக்காராம் கேட்கும் பிச்சை!

ஸ்ரீ பாண்டுரங்கன் - ருக்குமாயி தேவி
ஸ்ரீ பாண்டுரங்கன் - ருக்குமாயி தேவி

காராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் ஒரு புகழ்பெற்ற யாத்திரை, பண்டரிபுரம் வாரியாகும். ‘வாரி’ என்றால் யாத்திரை என்று பொருள். ‘கரி’ என்றால்  அதைச் செய்பவர்கள் என்று பொருள். அதனால், ‘வார்க்கரி’ என்று கூறப்படும் பக்தர்களின் கோலாகலமான  இந்த யாத்திரையின் தொடக்கம் ஜூன் மாதம் இருபத்தெட்டாம் தேதியே தொடங்கிவிட்டது. எதற்காக இந்த யாத்திரை எங்கு நோக்கிச் செல்கிறார்கள் என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பண்டரிபுரத்தில், ஆஷாட சுக்லபட்ச ஏகாதசி தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த ஏகாதசியை, ‘சயன ஏகாதசி’ என்று கூறுவர். இந்த நாளில்தான் மகாவிஷ்ணுவானவர்,  யோக நித்திரைக்குச் சென்று மறுபடியும் உத்தான ஏகாதசி அன்று கண் விழிப்பதாகக் கூறப்படுகிறது.

பண்டரிபுரத்தில், ஸ்ரீ ருக்குமாயி சமேத ஸ்ரீ விட்டலனே அம்மக்களுக்கு கண்கண்ட தெய்வம். பண்டரிபுரமே ஸ்ரீ வைகுண்டம். கடுமையான விரதத்தை மேற்கொண்டு, ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசி அன்று பாண்டுரங்கனை தரிசித்தால் மனிதப் பிறவி கடைத்தேறிவிடும் என்பது பாண்டுரங்க பக்தர்களின் அதீதமான நம்பிக்கையாகும்.

பந்தர்பூர் யாத்ரா
பந்தர்பூர் யாத்ரா

இந்த யாத்திரையை ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடு இல்லாமல்,  ஏழு வயது முதலே தங்களால் எந்த வயது வரை மேற்கொள்ள முடியுமோ அந்த வயது வரை இந்த யாத்திரையை மேற்கொள்கிறார்கள். ஒரு குருவின் மூலம் அவர் அனுமதியோடு அவர் கையால் துளசி மாலையை அணிந்து கொண்டவர்கள் மட்டுமே யாத்திரைக்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மகாவிஷ்ணுவின் அம்சமான பண்டரிநாதன், தனது பக்தர்களுக்காக, பண்டரிபுரத்தில் அநேக லீலைகளைப் புரிந்துள்ளார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். பகவானின் சிறந்த பக்தர்களான துக்காராம் மகராஜ்,  ஞானேஸ்வர் மகராஜ் இருவரும் தங்களின் பக்தர்களுடன் பாண்டுரங்கனை தரிசிக்க, பல கிலோ மீட்டர் தொலைவு பாதயாத்திரையாகவே நடந்து வந்திருக்கிறார்கள். அப்படி புண்ணியத் தலமான பண்டரிபுரத்தை அடைந்து பகவானை தரிசித்த நாள்தான் ஒரு ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசி நாளாகும். இதன் அடிப்படையில்தான் வார்க்கரி யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையை தொடங்கியவர் சந்த் துக்காராம் மகாராஜின் புதல்வரான நாராயண மகாராஜ் ஆவார்.

ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசி நிகழும் நாளுக்கு இருபத்தியொரு நாட்கள் முன்னதாக இந்த யாத்திரை தொடங்கி விடும். பண்டரிபுர மகான்களின்,  வெள்ளி பூண் போடப்பட்ட  பாதுகைகளையும்,  மூர்த்தங்களையும் தாங்கிய பல்லக்குகளுடன் காவிக் கொடியை ஏந்திய படி பஜனைப் பாடல்களைப் பாடி பாத யாத்திரையைத் தொடங்குகிறார்கள். சில பக்தர்கள் இந்தப் பாதுகைகளை தங்கள் சிரசில் தாங்கியபடியும் யாத்திரையை மேற்கொள்கிறார்கள். யாத்திரை என்றால் சுமார் இருநூற்றைம்பது கிலோ மீட்டர் தொலைவு நடக்க வேண்டி இருக்கும்.

பந்தர்பூர் யாத்ரா
பந்தர்பூர் யாத்ரா

தேஹூவில் இருந்து சந்த் துக்காராம்,  ஆலந்தியில் இருந்து சந்த் ஞானேஸ்வர்,  முக்தி நகரில் இருந்து சந்த் முக்தா பாய், நார்சியிலிருந்து சந்த் நாமதேவர்,  பைத்தானிலிருந்து சந்த் ஏக்நாத்,  திரியம்பகேஸ்வரில் இருந்து சந்த் நிவ்ருத்தி நாத்,  சஸ்வாடியில் இருந்து சந்த் சோபான்தேவ்,  ஷேக்கானிலிருந்து, சந்த் கஜானனன் மகாராஜ் ஆகியோரின் பாதுகைகளும், மூர்த்தங்களும் சுமந்து வரப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆலந்தி என்னும் இடத்தில், ஸ்ரீ ஞானஸ்வரரின்  ஜீவசமாதி உள்ளது. யாத்திரைக்காக அங்கே வரும் பக்தர்கள், அவரின் பாதுகையை சிரசின் மேல் வைத்துக் கொண்டு அவரது ஆணைக்காகக் காத்திருப்பார்கள். கோபுரக் கலசங்கள் லேசாக அசைந்து கொடுத்தவுடன் தங்களுக்கு யாத்திரைக்குக் கிளம்பும்படியான ஆணை வந்துவிட்டது என்கிற சந்தோஷத்தில், ‘பாண்டுரங்கா விட்டலா… பண்டரிநாதா விட்டலா’ என்று கூறிக்கொண்டு யாத்திரையைத் தொடங்கும் இந்த அற்புதமான அதிசயம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
அருளை வாரி வழங்கும் ஆஷாட நவராத்திரி ஆரம்பம்!
ஸ்ரீ பாண்டுரங்கன் - ருக்குமாயி தேவி

இருபத்தியொரு நாட்கள் யாத்திரையில் பக்தர்கள் ஆங்காங்கே இந்தக் குழுவில் சேர்ந்து தங்கள் பயணத்தை மேற்கொள்வார்கள்.  ஆகாரமும் தங்கும் வசதியும் விட்டலனுக்கு செய்யும் கைங்கரியமாகவே நினைத்து பலரும் முன்வந்து இலவசமாக தங்களால் இயன்றவரை அன்னம் அளிப்பதும், தங்கும் இடம் கொடுப்பதையும் செய்கிறார்கள். இந்த வருடம் ஜூலை பதினேழாம் தேதி சுக்லபட்ச ஏகாதசி அமைய இருக்கிறது. பண்டரிபுரம் என்னும் புண்ணிய பூமியை அடைந்தவுடன் சந்திரபாகா நதியில் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு திருக்கோயிலை அடைந்து பாண்டுரங்கனை வழிபடும் பக்தர்களுக்கு, இருக்கும் ஒரே நம்பிக்கை என்ன தெரியுமா? பல லட்சம் பக்தர்களுக்கு நடுவில் அந்த விட்டலனும் ஏதோ ஒரு ரூபத்தில் தங்களுடன் பயணிக்கிறான் என்பதுதான்.

சந்த் துக்காராம் மகராஜ்,  ‘அடியேன் கேட்கும் பிச்சை உன் பண்டரிபுரம் யாத்திரை ஒன்றுதான்’ என்று தன்னுடைய அபங்கத்தில் கூறியிருக்கிறார்.

நம் எல்லோருக்கும் பண்டரிபுர வாரியை மேற்கொள்ள அந்த பண்டரிநாதன் அனுக்கிரகம் செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com