பரம்பொருளை உலகமறியச் செய்த பெரியாழ்வார் அவதாரத் திருநாள்!

பொற்கிழியோடு யானை மீது பவனி வரும் பெரியாழ்வார்
பொற்கிழியோடு யானை மீது பவனி வரும் பெரியாழ்வார்
Published on

ழ்வார்களிலே பெரியாழ்வார் என்றே போற்றப்பட்டு பெரிய பெருமாளான அரங்கனுக்கே மாமனார் ஆகிய பெருமை விஷ்ணுசித்தன் என்றும் பட்டர்பிரான் என்றும் கொண்டாட்டப்படும் பெரியாழ்வாரையே சாரும். திருமாலின் மீது தாயை போன்ற ஒரு பரிவைக் காட்டி, எங்கே பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ என்று அஞ்சி நடுங்கி, திருமால், பெரிய திருவடியான கருடன் மீது வந்து தனக்கு காட்சி கொடுத்ததை பார்த்ததுமே, அவரது திருமேனி அழகைப் பார்த்து எல்லோரும் கண் வைத்து விடுவார்களே என்று பெரியாழ்வார் பாடிய பாசுரம்தான் ‘திருப்பல்லாண்டு.’

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் - மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு’

என்று காப்பு இடும்படியாக அல்லவா பெருமாளுக்கே மங்களாசாசனம் செய்திருக்கிறார்?

தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு கண்ணனை தொட்டிலில் இட்டு, தாலாட்டி, நீராட்டி, அவனைப் பூச்சுட அழைத்து என அனைத்தையுமே தனது ‘பெரியாழ்வார் திருமொழி’யின் வழி செய்தவர் இவரே.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரும் பாக்கியம் செய்து இரண்டு ஆழ்வார்களை இவ்வுலகிற்கு தந்திருக்கிறது. பெரியாழ்வார் ஒருவர், மற்றொருவர் அவர் கண்டெடுத்து வளர்த்த அவரது மகள் ஆண்டாள். கண்ணனின் மீது மாறாத அன்பு கொண்டவர்கள் இருவருமே. ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள வடபத்ரசாயியின் மனம் உகக்கும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் பெரியாழ்வாரின் மனதில் இளம் பருவம் தொட்டே இருந்து வந்தது. பகவானுக்கு எந்தக் கைங்கர்யம் செய்தால் மிகவும் பிடிக்கும் என்று கிருஷ்ண அவதார சரிதத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவர் மனதில், கண்ணன் கம்ஸனால் அழைக்கப்பட்டு மதுரா நகரம் சென்றபோது, தானே மாலாகாரரின் இல்லத்திற்கு சென்று பூமாலையைக் கேட்டுப் பெற்றதாக விஷ்ணு புராணத்தில் உள்ளதே. நம் உள்ளத்தை அறிந்து பெருமாளே இந்த விஷயத்தை நமக்கு காட்டித் தந்திருக்கிறாரே.

‘பூமாலையை சூடிக்கொள்வது கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்போலும். இனி, நாமும்  நந்தவனம் அமைத்து தினமும் பூமலை கட்டி சமர்ப்பிப்போம்’ என்று உறுதி பூண்டு பெரியாழ்வார் அமைத்ததுதான் ஸ்ரீவில்லிபுத்தூரை அழகு செய்த நந்தவனம். அந்த நந்தவனத்திலிருந்துதான் தினமும் பூக்களை பறித்து அதை மாலையாகக் கட்டி தமது பாமலைகளோடு சாத்தி வந்தார் பெரியாழ்வார். அவர் கட்டிய அதே பூமாலைதான் அவரது மகளான ஆண்டாளையும் அலங்கரித்து பின் அரங்கனையும் அலங்கரித்து, இவரை அரங்கனுக்கே மாமனாராகவும் ஆக்கியது.

மதுரையில் ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் வல்லபதேவன் என்பவன் ஒரு இரவு நகர சோதனை செய்து வந்தான். அப்போது ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தவரை எழுப்பி, “நீ யார்?“ என்று கேட்டான். “நான் ஒரு அந்தணன். காசி யாத்திரை போய் வந்தேன்” என்றார் அவர். ”அப்படியா? ஏதாவது ஒரு நாலு நல்ல வார்த்தை கூறும்” என்று அரசன் கேட்க, அதற்கு அந்த அந்தணரும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் சொன்னார். அந்த ஸ்லோகத்தின் பொருள், ‘மழைக் காலத்துக்கு தேவையானதை மற்ற எட்டு மாதங்களில் முயற்சி செய்து, சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இரவுக்குத் தேவையானதை பகலில் முயற்சி செய்து சேமிக்க வேண்டும். வயது முதிர்ந்த பருவத்திற்கு இளமையிலேயே முயற்சி செய்து வைக்க வேண்டும். பரலோகத்திற்காக இந்த ஜன்மத்திலேயே முயற்சி செய்ய வேண்டும்’ என்பதே.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீரங்கம் கோயிலின் மர்மங்களும்; ரகசியங்களும்!
பொற்கிழியோடு யானை மீது பவனி வரும் பெரியாழ்வார்

‘பரம்பொருளை பற்றினால்தான் பரலோகம் செல்ல முடியும். அந்தப் பரம்பொருள் யார் என்று எப்படி அறிவது?’ என்று அரசன் குழப்பமடைய, ‘சபா மண்டபத்தில் ஒரு விவாதம் நடத்துவோம். வித்வான்கள் அனைவரும் அதில் கலந்துகொள்வர். மண்டபத்தில் ஒரு பொற்கிழியை தொங்கத் விடுவோம். எந்த வித்வானுக்கு அந்த பொற்கிழி தாழ்ந்து கொடுக்கிறதோ அவர் கூறும் விளக்கமே உண்மையானது என்று முடிவு செய்வோம்’ என்று அரசவையில் தீர்மானம் ஆனது.

அன்றிரவு, பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், ‘விஷ்ணு சித்தரே, நீர் பாண்டிய அரசவைக்குச் சென்று நாமே பரம்பொருள் என்று நிலைநாட்டி வாரும்’ என்று கூறி மறைய, அப்படியே அடுத்த நாள் அந்த அரசவையில், பெரியாழ்வாரின் உள்ளிருந்த பெருமாளே பேச, உலகிற்கு பரம்பொருள் திருமாலே என்ற உண்மையை எடுத்துரைத்த அந்த பெரியாழ்வார் அவதரித்த இந்த நன்னாளிலே பெரியாழ்வாரின் பாதம் பணிவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com