ஆயிரம் நாவை பெற்றும் அரங்கனின் பேரழகைப் போற்றிப் பாட மறுத்த பராசரர்!

Parasara refused to sing the beauty of Arangan
Sri Ranganathar with Parasara Bhattar
Published on

திருவரங்கத்தில் பராசர பட்டர் என்ற ஒரு மகான் இருந்தார். அவர் ராமானுஜரின் பிரதான சீடரான கூரத்தாழ்வானின் புத்திரனாவார். மகா சாஸ்திர ஞானி. பராசர பட்டர் தனது சீடர்களுக்கு காலக்ஷேபம் சாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் பராசர பட்டர், ஸ்ரீரங்கம் அரங்கனின் முன்னே நின்று பகவானின் திவ்ய ரூபத்தை ரசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது, அரங்கன், "என்ன சும்மா நின்று கொண்டிருக்கிறாய்? என்னையும் என்னுடைய அழகையும் நீ பாடி விடுவாயோ?" என்று கேட்டார்.

அதற்கு பராசரர், "கேள்வி கேட்பது இருக்கட்டும். முதலில், உம்முடைய ஆதிசேஷனைப் போல எனக்கும் ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பிறகு பார்க்கலாம்" என்றார்.

இதையும் படியுங்கள்:
மகா கால பைரவாஷ்டமி: காலபைரவரை எப்போது, எப்படி வழிபட வேண்டும்? பலன்கள் என்ன?
Parasara refused to sing the beauty of Arangan

"அட, ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் என்னைப் பாடுவாயோ?" என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட, பராசர பட்டருக்கு ஆயிரம் நாக்குகளை அருளினார்.

அவர்கள் இருவருக்குமிடையே, பகவான் - பக்தன் என்கிற உறவை மீறி, தந்தை - மகன் என்கிற பந்தப் பிணைப்பே மேலோங்கி இருந்தது (அரங்கநாதரை தந்தையாகவே ஆராதித்து வந்தார் பராசர பட்டர். அரங்கனும் தனது புத்திரனாகவே பராசர பட்டரை பாவித்தார் என்று இன்றளவும் போற்றப்படுகிறது). ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி அரங்கனை நமஸ்கரித்தார் பராசரர்.

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. பராசரர் பாடும் எண்ணத்தில் இல்லாதது போல் காணப்பட்டார். அரங்கனுக்கு பொறுமை போயிற்று. "என்ன பராசரா, உனது வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை? ம்... பாட ஆரம்பி." என்றார்.

"மன்னிக்கவும் ரங்கா! உன்னை என்னால் பாட முடியாது!" என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார் பராசரர்.

ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு! பின்னே... பாடு என்று உத்தரவு போட்டாகி விட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகி விட்டது. அப்படியும் பாட முடியாது என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?

இதையும் படியுங்கள்:
பல முறை திருடப்பட்டும் தானாகக் கோயிலை தேடி வந்த அதிசய அம்பிகை திருச்சிலை!
Parasara refused to sing the beauty of Arangan

"என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கேட்டதைக் கொடுத்தேன். பிறகென்ன... பாட வேண்டியதுதானே? முடியாது என்கிறாயே!" என்றார் சுவாமி.

பராசர பட்டர் மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக் கொண்டார். "அரங்கா... உனது ஒளி பொருந்திய அழகை என்னால் பாட முடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம் நாக்குகள் தேவையோ?" என்று சொல்லிப் புகழ்ந்தார் பராசரர்.

பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்ப்பட்டவரின் திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என்பதை இதன் மூலம் உணரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com