

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் முழையூரில் இருக்கும் கோவில் தான் அருள்மிகு பரசுநாத சுவாமி திருக்கோவிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அந்த காலத்தில் 'முழவு' என்ற வாத்தியத்தில் வேத ஒலியை துல்லியமாக வாசிப்பார்கள். சிவலோகத்தில் பூதகணங்கள் இந்த முழவு வாத்தியத்தை வாசிப்பதாக நம்பப்படுகிறது. இது ஒருவகையான மேள வாத்தியமாகும்.
அக்ஷயதிருதியை அன்று சிவலோகத்தில் பூதகணங்கள் இந்த முழவு வாத்தியத்தை தான் வாசிப்பார்கள். அச்சமயம் பூதகணங்கள் பத்தாயிரம் அடி குதித்து குதித்து இந்த வாத்தியத்தை வாசிப்பதாக நம்பப்படுகிறது. அதைப்போலவே இந்த பரசுநாத சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் அக்ஷயதிருதியை அன்று இந்த முழவு வாத்தியத்தை வாசிக்கிறார்கள். அதனால் தான் இந்த ஊருக்கு முழையூர் என்ற பெயர் வந்தது.
தன் தந்தையின் கட்டளையை ஏற்று தன் தாயை கொன்றதால் பரசுராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதை நீக்குவதற்காக முழையூர் வந்து சிவனை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்தார். இதனால் அவர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. இதனால் தான் இங்கு உள்ள சிவபெருமானுக்கு பரசுநாத சுவாமி என்ற பெயர் வந்தது.
இக்கோவிலில் உள்ள லிங்கம் பீஜாட்க்ஷர லிங்க வகையை சார்ந்தது. அதாவது நீண்ட கொம்பு நெடுந்திடை லிங்கம் என்பது பொருள். இங்கு சிவபெருமான் வட்ட வடிவில் எட்டு பட்டைகளுடன் லிங்கவடிவில் காட்சி தருகிறார். இக்கோவிலின் கருவறை சுற்றுச்சுவரில் லிங்கோத்பவருக்கு பதில் அர்த்தநாரீஸ்வரர் காட்சித் தருகிறார். லிங்கோத்பவர் என்றால் சிவபெருமான், ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் என்பதைக் குறிக்கும் வடிவம் இது.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்தனை செய்யலாம். அக்ஷய திரிதியை அன்று மல்லிப்பூக்களை தங்கள் கைகளாலேயே தொடுத்து இறைவனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அக்ஷய திரிதியை, மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி போன்ற திருவிழாக்கள் இங்கு வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று பிரார்த்தனை செய்து சிவபெருமானின் அருளைப் பெறுங்கள்.