பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

Paruvathamalai Sivaperuman-Parvathi
Paruvathamalai Sivaperuman-Parvathihttps://www.kalasapakkam.com
Published on

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிவஸ்தலமான பர்வதமலை மிகவும் தொன்மையானது. கயிலாயத்திற்கு சமமானது என்ற பெயர் பெற்றது. இங்கு அருள்மிகு மல்லிகார்ஜுனரும் அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். சிவபெருமான் கயிலாயத்திலிருந்து அண்ணாமலைக்கு வந்தபோது அவர் தம் முதல் காலடியை பர்வதமலையில் வைத்தாராம். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்ததாகக் கூறுவர்.

மலையின் அடிவாரத்தில் மிகவும் பழைமையான பச்சையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் வெளிப்புறத்தில் சப்த முனிகள் கம்பீரமாக எழுந்தருளி வீற்றிருக்கிறார்கள். இக்கோயிலில் பச்சையம்மன் என்ற திருபெயரில் அன்னை பார்வதி தேவி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். தவிர, வீரபத்திரர், துர்கையம்மன், ரேணுகா தேவி, சப்த கன்னியர் போன்றோரையும் தரிசிக்கலாம்.

விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தால் மலையின் உச்சியில் உள்ள கோயில் நன்கு தெரியும். மலையில் உள்ள சுனையிலிருந்து பெருகி வரும் நீர் வீழ்ச்சியின் அழகையும் காணலாம். இந்த மலைப்பாதையில் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டுள்ளன. அவற்றைப் பிடித்துக் கொண்டுதான் மேலே செல்ல வேண்டும். மிகவும் சிரமப்பட்டு ஆபத்தான பாதையில் நடந்து வந்த களைப்பெல்லாம் நீங்கிட மலை மேல் அம்மையப்பனாய் கோயில் கொண்டுள்ளனர் சிவபெருமானும் பார்வதி தேவியும்.

லிங்க ரூபமாய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள மல்லிகார்ஜுனரை, ‘காரியாண்டி கடவுள்’ என்றும் அழைப்பர். இவரை பக்தர்களே அபிஷேகித்து மலர்கள் சூட்டி பூஜை செய்யலாம். பக்தர்களுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இங்கு கிடையாது. பூக்களைச் சாத்தி மகிழும் பக்தர்கள் சிவலிங்கத்தை தொட்டு வணங்கலாம். அதனால் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்கு பூ குவியலுக்குள் இறைவன் உறைந்து உள்ளார்.

மல்லிகார்ஜுனருக்கு இடப்புறம் அன்னை பிரம்மராம்பிகை தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளாள். வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியரும் அருள்புரிகிறார்கள். இந்த மலை, ‘ஏழைகளின் கயிலாயம்’ என்று பெயர் பெற்றது.

இதையும் படியுங்கள்:
மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!
Paruvathamalai Sivaperuman-Parvathi

மேகக் கூட்டங்கள் அவ்வப்போது கோயிலின் மீது நின்று மெதுவாக நகரும் காட்சி மிகவும் ரம்மியமாக இருக்கும். இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் இங்கு உள்ளன. அந்தக் குகைகளில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரம் கொண்டது. பர்வதமலையின் கிரிவலப் பாதையின் தொலைவு 26 கிலோ மீட்டர். இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனை தேவேந்திரன் பௌர்ணமி நாட்களில் வந்து வழிபடுவதாக நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சிறப்பு பூஜை இக்கோயிலில் நடைபெறுகிறது.

பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை என்றும் மலைகளின் அரசன் என்றும் பொருள். சுமார் 4500 அடி உயரம் கொண்ட இந்த பர்வதமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென் மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மலைப் பகுதியில் பல மூலிகைகள் உள்ளன. சித்தர்களுக்கு இது புகழ் பெற்ற மலையாகும். பர்வதமலையில் 18 சித்தர்கள் சிவபெருமானுடைய அருளை பெற கடுந்தவம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com