மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

Mango fruit
மாம்பழம்https://choimeithaiw.shop

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால், தற்போது மாம்பழங்களைக் கண்டாலே சிலர் அலறும் நிலையும் தற்போது வந்துள்ளது. சுவையாக இருக்கிறது என்பதற்காக மாம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, அதனால் பல உடல் ரீதியான பிரச்னைகளை அனுபவிப்பவர்கள் பலர் உண்டு. மாம்பழம் சாப்பிடுவதில் அப்படி என்னதான் பிரச்னை என்பதை அறிவோமா?

தற்போது கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் ரசாயன பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவோம். இதேபோல் பூச்சிகளின் சேதத்தைத் தடுக்க மாம்பழங்கள் மீது பெரும்பாலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலுள்ள ரசாயனங்கள் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, முடிந்தவரை நஞ்சற்ற ஆர்கானிக் மாம்பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்பது நல்லது.

குறிப்பாக, மாம்பழத்தின் தோலை உட்கொள்வதைத் தவிர்க்கவும். இந்த ரசாயனங்கள் தோலின் மீது அதிகமாக படியும் வாய்ப்புண்டு. இது உடலுக்குள் செல்லும்போது குடல் மற்றும் சரும ஆரோக்கியம் உட்பட, நமது முழு உடலையும் பாதிக்கும் அபாயமுள்ளது.

சிலருக்கு மாம்பழங்களினால் ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்படலாம். குறிப்பாக, ஏற்கெனவே சில உணவு ஒவ்வாமை பிரச்னை  இருந்தால்  நிச்சயம் கவனம் வேண்டும். மாம்பழம் உண்டபின் ஒவ்வாமை அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இதில் அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவையும் அடங்கும். மேலும், இந்த ஒவ்வாமைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே அனுபவிக்கும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியிலும் இது உருவாகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, உங்களுக்கு ஒவ்வாமை உள்ள உணவுப் பொருட்களின் பட்டியலில் மாம்பழம் இருந்தால் மாம்பழங்களை சாப்பிட்ட பிறகு லேசான அறிகுறிகளை நீங்கள் சந்திக்கும்போது மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
அவல் நிவேதனம் நடைபெறும் அனுமன் கோயில் எங்குள்ளது தெரியுமா?
Mango fruit

மாம்பழத்தில் நார்ச்சத்துடன் சர்க்கரையும் அதிகம் இருப்பதால் சிலருக்கு ஜீரணிக்க சிரமமாக இருக்கும். நார்ச்சத்து நமக்கு மிக முக்கியமான சத்து என்றாலும் அதிகமான நார்ச்சத்தால் எந்த நன்மையும் இல்லை. அதிலும் ஏற்கெனவே வயிறு தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள் நிச்சயமாக மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

மாம்பழங்களை வாங்கியதும் சாப்பிடுவதற்கு முன்பு கவனமாக கழுவ வேண்டும். ஏனென்றால், மாம்பழங்களில் உருஷியோல் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சரும அழற்சியை ஏற்படுத்தும். சரும அழற்சியானது சருமத்தில் எரிச்சல், வீக்கம், சிவத்தல் மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும். மேலும், மூக்கு ஒழுகுதல், வயிற்று வலி போன்றவற்றால் பாதிக்கப்படலாம். எனவே, இந்தப் பருவத்தில் மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு பழங்களை உப்பு நீரிலிட்டு கவனமாக சுத்தம் செய்வது அவசியம்.

முக்கியமாக, ஒரு நாளைக்கு 2 மாம்பழங்கள் எடுத்துக்கொள்வது போதுமானது. ஏனெனில், இதில்  நாம் உட்கொள்ளும் பல பழங்களை விட அதிக கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. எனவே, பழத்தின் சுவையில்  மயங்கி அதிகம் உண்பது உடலுக்கு அதிகக் கேடு தரும் என்பதை மறவாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com