புனேவில் உள்ள பார்வதி மலையின் கோவில்கள், பேஷ்வாக்களின் தூணாகவும், மராத்திய கட்டடக்கலையின் உதாரணமாகவும் நிற்கும் கோவில்களாகும்.
பேஷ்வ ராஜ்யத்தின் மத நெறிமுறைகளின் அடிப்படையில் கட்டமைத்த இந்தக் கோவில் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அவர்களின் ராஜ்யத்தின் தோற்றம் முதல் சிதைவு வரை அந்தக் கோவில் அவர்களின் பெரிய அடையாளமாக இருந்ததால், இன்றும் அந்தக் கோவிலின் பெயரைச் சொன்னால், பேஷ்வாக்களின் கோவில் என்றுதான் அந்த மக்கள் கூறுகின்றனர்.
ஏனெனில், இந்த மலையில் மொத்தம் ஐந்துக் கோவில்கள் உள்ளன. தேவ்தேவேஷ்வரர் கோவில் (சிவன் பார்வதிக்கு அற்பணிக்கப்பட்டது), கார்த்திகேய கோவில், விஷ்ணு கோவில், வித்தல் கோவில், ராமர் கோவில் என ஐந்துக் கோவில்கள் உள்ளன. இத்துடன் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் சூரிய கோவில் மற்றும் பவானி மந்திர் கோவில் உள்ளன.
ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு பேஷ்வ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.
அந்தவகையில், மன்னர் நானாசாஹிப் பேஷ்வா தேவ்தேவஷ்வரர் கோவிலைக் கட்ட, அவருடைய தனிப்பட்ட உதவியாளர்களான Bajirao Baburao Dike மற்றும் Ravaji Keshav ஆகியோரை கட்டுமானப் பணிக்கான மேற்பார்வையாளர்களாக நியமித்தார். 1760 முதல் 61ம் ஆண்டுவரை இந்தக் கோவிலின் ஐந்து சிகரங்களுக்கும் சுமார் 10.20 கிலோ தங்கம் பொறுத்தப்பட்டது. கோடை மற்றும் மழைக்காலங்களுக்கு நடுவில், இந்தக் கோவிலின் சிவலிங்கத்தில் சூரிய ஒளி அழகாக படரும். அதைப் பார்க்க மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வருவர்.
அதேபோல் விஷ்ணு கோவில் 1758ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த விஷ்ணு சிலையிலும் அந்த காலத்தில் ஒருமுறை சூரிய ஒளி படருமாம்.
அதன்பின்னர் நானாசாஹிப், பானிபட் போரில் மராத்தியர்கள் தோல்வியில் மனமுடைந்துப்போனார். அந்த சோகத்திலேயே அவர் 1761ம் ஆண்டு இறந்துவிட்டார்.
நானாசாஹிப்பின் தம்பியான ராக்போபா டாடா பேஷ்வா, கார்த்திகேய கோவிலைக் கட்டினார். ஆனால், அதுவும் சில போர்களால் கட்டிய உடனே சேதமாக்கப்பட்டது. இதனால், 1869ம் ஆண்டு மீண்டும் மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது.
கோவில் எப்படி சேதமடைந்தாலும், போர்களின் போது மூலவ சிலைகளை பத்திரமாக வைக்க பல திட்டங்கள் செய்தனர். அதற்காகவே சிங்காட் கோட்டை கட்டப்பட்டது. அந்தவகையில் இந்த சிலைகள், 1751ம் ஆண்டு முதல் 1752ம் வரை அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
அதன்பிறகு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. ஆனால், நிஜாம் படை புனே முழுவதையும் கண்மூடித்தனமாக தாக்கினர். அந்த தாக்குதலில் பார்வதி சிலை உட்பட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் கொள்ளையடிக்கமுடியாத கட்டடங்களை சேதப்படுத்திவிட்டு சென்றனர். ஆனாலும், பேஷ்வாக்கள் தங்கள் உயிரைக் கொடுத்து சில ஆண்டுகளில் சிலையை மீட்டு கருவறைக்குள் வைத்தனர். பின்னர் 20ம் நூற்றாண்டில் தான் மற்ற இரு கோவில்களும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி உள்ளூர் சண்டைகளில் படாதப்பாடு பட்ட அந்தக் மலை, ஆங்கிலேயர்களின் வருகையை அடுத்து மராத்தியர்களின் முழு வீழ்ச்சியையும் வேடிக்கைப் பார்த்து ஒன்றும் செய்யமுடியாமல் பொலிவிழந்து நின்றது.