இயற்கை கொஞ்சும் வட்டவடா பள்ளத்தாக்கு! போக அனுமதி வேணுமே!

Vattavada Valley
Vattavada Valley

மலைகளின் இளவரசி கொடைக்கானல். ஆனால் அங்கிருந்து கேரளா செல்ல ஒரு வழி இருக்கிறது என்றால் பலருக்கும் தெரியாது. இயற்கை கொஞ்சும் அத்தனை அழகையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது இந்த பாதை. ஆனால் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கேரளா வழியாகத்தான் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் கொடைக்கானல் டூ மூணாறு பாதையை போட்டீர்கள் என்றால், தேனி, போடி வழியாக காட்டும். நடந்து செல்லும் வழி என்று போட்டீர்களானால், பூம்பாறை, மன்னவனூரை அடுத்த கடவேரி வழியாக வட்டவடாவை அடைந்து அங்கிருந்து டாப் ஸ்டேசன், மாட்டுப்பட்டி அணையை அடைந்து மூணாறு போக முடியும். எளிதான இந்த பாதை 1990களில் மூடப்பட்டு விட்டது.

தற்போதைய நிலையில், கொடைக்கானல் அருகே கிளாவரையில் இருந்து கேரள மாநில எல்லையில் உள்ள கடவேரி வரை ஜீப்பில் போய்விட முடியும். ஆனால் அதன்பிறகு கொட்டக்கம்பூர் வரை உள்ள 8 கிலோ மீட்டர் தூரம் பாதை இல்லை. பாதை பல இடங்களில் சேதம் அடைந்து பயணிக்கவே முடியாத நிலையில் இருக்கிறது. அதை தாண்டி வந்தால் வட்டவடா என்ற கிராமம் இருக்கிறது. அதாவது கடவேரியில் இருந்து 11.5 கிமீ தூரம் வரை தள்ளி உள்ள வட்டவடாவிற்கு சரியான பாதை இல்லை. அதேநேரம் கேரளாவின் மூணாறு வழியாக வட்டவடாவிற்கு போக முடியும். வட்டவடாவும், அந்த வழியாக கடவேரி சென்று கொடைக்கானல் செல்லும் திரில்லிங்கான பாதையும் கேரள மக்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.

பலரும் வந்து செல்லும் பகுதி என்றாலும், வட்டவடாவிற்கோ அல்லது கொட்டக்கம்பூருக்கோ வனத்துறை அனுமதி இல்லாமல் வாகனத்தில் போக முடியாது. அதேபோல் கொட்டக்கம்பூரில் இருந்து வனத்துறை அனுமதி இல்லாமல் நடந்து கூட கடவேரி போக முடியாது. தமிழ்நாட்டின் கிளாவரையில் இருந்து கேரள மாநிலம் கிளாவரைக்கும் வனத்துறை அனுமதி இல்லாமல் போக முடியாது.

இதையும் படியுங்கள்:
25 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காடுகள்! இங்கு ட்ரெக்கிங் செல்ல ஒரு நபருக்கு 40,000 ரூபாய் கட்டணம்! எங்கே?
Vattavada Valley

இதில் முக்கியமான வியூ பாய்ண்டான வட்டவடாவிற்கு வனத்துறை அனுமதியுடன் போக முடியும். வட்டவடா என்பது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியாகும். வட்டவடாவில் தங்க வேண்டும் என்றால் அங்கு ரூம் எடுத்திருக்க வேண்டும். அப்போது தான் அனுமதிப்பார்கள்.மூணாறில் இருந்து டாப் ஸ்டேசன் வருபவர்கள் அங்கிருந்து இரண்டு செக் போஸ்டை கடந்து வர வேண்டியதிருக்கும். போய்விட்டு உடனே வருவது என்றால் அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் ரூம் எடுத்திருந்தால் மட்டுமே தங்கி சுற்றி பார்க்க அனுமதிப்பார்கள். தட்டு தட்டுக்களாக அல்லது படிக்கட்டு படிக்கட்டாக உள்ள நிலங்களில் மக்கள் விவசாயம் செய்கிறார்கள்.

மிக அமைதியாக அற்புதமான கிராமம் தான் வட்டவடா. வட்டவடாவில் அருவி உள்ளது. அதேபோல் நிறைய பழத்தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள ஸ்ட்ராபெர்ரி பழ தோட்டம் மிகவும் பிரபலம் ஆகும். தங்கும் விடுதிகள் பல மலைகளின் சரிவில் அற்புதமாக அமைந்துள்ளன. இங்குள்ள அனைத்து இடங்களுமே இயற்கை கொஞ்சும் இடங்கள் ஆகும். இந்த இடத்திற்கு கேரள மக்கள் அதிகம் பேர் வந்து செல்கிறார்கள். கொடைக்கானல் வழியாக போக முடியாது என்பதால் பலரும் மூணாறு வழியாக வருகிறார்கள். ஒருமுறையாவது போக வேண்டிய இடம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com