ஆதிமனிதர்களின் வாழ்விடமாக விளங்கிய பதிமலை முருகன் கோயில்!

Pathimalai Murugan Temple, which was the abode of primitive humans
Pathimalai Murugan Temple, which was the abode of primitive humans

கோவை மாவட்டம், குமிட்டிபதி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பதிமலை அருள்மிகு பாலதண்டாதபாணி திருக்கோயில். சுமார் 350 படிகள் கொண்ட இந்த சிறிய குன்றின் மீது முருகப்பெருமான் பாலமுருகனாக அருள்பாலிக்கிறார். இந்தக் குன்றின் மீது ஏறும் முன் சிறிய அலங்கார நுழைவு வாயில் ஒன்று அனைவரையும் வரவேற்கிறது.

இக்கோயிலுக்குச் செல்ல இரண்டு படி வழிகள் உள்ளன. ஒன்று அந்தக் காலத்தில் இக்கோயிலுக்குச் சொல்ல படிகள் போன்று மலையிலேயே செலுக்கப்பட்ட கரடு முரடான பாதை. மற்றொன்று தற்போது பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட சுலபமாக ஏறிச்செல்லக் கூடிய படிப் பாதையாகும்.

Temple entrance
Temple entrance

சிறிய குன்றின் மீது அமைந்த இக்கோயிலும் மிகவும் சிறியதாகவே அமைந்துள்ளது. மலைக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரே ஒரு சன்னிதியின் வாயிலில் விநாயகப்பெருமான் வீற்றிருக்க, கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் வலது கையில் வேல் ஏந்தி, ஒய்யாரமாக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே பலி பீடமும் மயில் வாகனமும் காட்சி தருகின்றன.

இக்கோயிலுக்கு இடப்பாகம் அன்னை சக்தி தேவி தனது மகனுக்கு துணையாக தனிச் சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே சிம்ம வாகனமும், நடப்பட்ட சூலங்களும், கொடி மரமும் காட்சி தருகிறது. இக்குன்றின் மேற்பகுதியில் வற்றாத கிணறு ஒன்று அமையப்பெற்றுள்ளது. இந்தக் கிணற்று நீரே சுவாமிக்கு அபிஷேகம் போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

perennial well
perennial well

இந்தக் குன்றின் மேலே பால முருகன் கோயில் அமைந்திருக்க, அதற்குக் கீழே ஒரு 100 மீட்டர் கீழே வந்தால், ஆதி மனிதர்கள் வாழ்ந்த பழங்கால குகைகளைக் காணலாம். மிகவும் ஆச்சரியம் தரத்தக்க வகையில் அமைந்துள்ள இந்தக் குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்காக ஆதாரங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இக்குகை பாறைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள்.

Cave painting
Cave painting

இந்த ஓவியங்கள் வெண்மை நிறத்தில் காட்சி தருகின்றன. இந்த ஓவியத்தில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன. சுமார் 4 அடி அகலமும், 2 அடி உயரத்திலும் உள்ள இந்த பாறை ஓவியம், அப்பகுதியில் யானைகள் வாழ்விடமாக இருந்ததற்கு அடையாளமாகக் கூறப்படுகிறது.

Cave painting
Cave painting

வெள்ளை நிற மையால் வரையப்பட்டுள்ள இந்த குகை ஓவியங்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டது என கணிக்கப்படுகிறது. யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் யானை சந்தை நடைபெற்ற இடமாக இது இருக்கலாம் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். வழுக்குபாறை, குமிட்டிபதி, முருகன்பதி, புதுப்பதி, சின்னாம்பதி, நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர், ‘பாண்டியன் பள்ளி’ என இந்தப் பகுதியை அழைக்கின்றனர். குமிட்டிபதிக்கு அருகே வேழந்தாவளம் எனும் இடம் உள்ளது. வேழம் என்றால் யானை, தாவளம் என்றால் விற்பனை சந்தை என்ற பொருள் கொள்வதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஜிகாமாவை பற்றி தெரியுமா?
Pathimalai Murugan Temple, which was the abode of primitive humans

வேழந்தாவளம் அருகே மாவுத்தம்பதி என்ற கிராமம் இருக்கிறது. யானை பாகனை மாவுத் என அழைப்பது வழக்கம். யானை பாகன்கள் வசிக்கும் இடமாக இருந்த இப்பகுதி மாவுத்தம்பதி என பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாலக்காடு கணவாய் வழியாக ஏராளமான யானைகளை பிடித்து வந்து ஆனைமலையில் வைத்து வளர்த்துள்ளனர். இங்கே குமுட்டிபதி, மாவுத்தம்பதியில் யானை படை உருவாக்கப்பட்டுள்ளது. யானைகளை அடக்கிய வீரர்கள் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்துள்ளனர்.

முன்னோர்களின் பழம்பெரும் பொக்கிஷமான குமிட்டிபதி பாறை ஓவியங்களை புனரமைத்து பாதுகாத்தால் ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பெரும் பயனளிக்கும் என்பது இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com