

காசி, காஞ்சி, மதுரா, துவாரகை, உஜ்ஜைன், ஹரித்வார், அயோத்யா என்பவை மட்டுமே இந்தியாவில் ஏழு புண்ணிய நகரங்கள் என்கிறது கருட புராணம். ‘நகரேஷு காஞ்சி’ என்கிறார் மகாகவி காளிதாசர். தென்னிந் தியாவில் இருக்கும் ஒரே புண்ணிய நகரமான காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி, சிவகாஞ்சி, ஜைன காஞ்சி என மூன்று பகுதியாக முன்பு விளங்கி வந்தது. தற்போது சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் என்று இரண்டாக விளங்கி வருகிறது. தென்னிந்தியாவின் நாளந்தா என்றும் இந்நகரம் விளங்கிவந்தது. அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், காஞ்சிபுரத்தில் படித்தவர் தான்.
காஞ்சிபுரத்தில் 108 வைணவ கோவில்களும், 1008 சிவ கோவில்களும் இருந்தாக வரலாறு கூறுகிறது. இதனால் தான் காஞ்சி ஆயிரம் கோயில்களின் நகரம்" என அழைக்கப்படுகிறது . இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆன்மீக தலங்களில் காஞ்சிபுரமும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பண்டைய நகரம் பல நூற்றாண்டுகளாக கற்றல், மதம் மற்றும் கலை மையமாக இருந்து வருகிறது.
பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய இந்த நகரம், பல்லவ, சோழ மற்றும் விஜயநகர வம்சங்களின் கட்டிடக்கலை சிறப்பை வெளிப்படுத்தும் பல அற்புதமான கோயில்களைக் கொண்டுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு ஆச்சரியமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் முக்கிய ஆலயமாகவும் முதன்மை ஆலயமாகவும் விளங்கிவருவது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில். தென்னிந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்று.இங்கு இருக்கும் ஒரு புனித மா மரம், 3,500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானது என்று நம்பப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களுள் இது மண்ணுக்குரிய (ப்ருத்வி) தலமாக விளங்குகிறது. இதனால் நிலம், வீடு, தோட்டம் சம்பந்தமான வேண்டுதல்களுக்கு இந்தத் தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.
காஞ்சிக்கு பெருமை சேர்க்கும் காமாட்சி அம்மன் கோவில் கருவறை முக்கோண வடிவில் உள்ளது. இதற்கு மூன்றரை சுற்று பிரகாரம்தான்.இது வேறு எங்கும் இல்லாதது.ஸ்ரீ சக்கரத்தின் அம்சமாக இங்கு தவக்கோலத்தில் காமாட்சியம்மன் திகழ்கிறாள். ஆதிசங்கரர் இங்கு வந்து அர்த்தமேரு என்ற ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்ததால் சிலைக்கு பதில் இந்த சக்கரத்திற்கே முக்கிய பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்கு பூஜை செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் என்பது நம்பிக்கை.
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் தலங்கள் திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலும் திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. காஞ்சிபுரத்தில் ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது சிறப்பு. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள கோவில் அருள்மிகு ஆரணவல்லித் தாயார் சமேத உலகளந்த பெருமாள் திருக்கோவில். இக்கோவிலில் திருஊரகம், திருகாரகம், திருநீரகம் மற்றும் திருகார்வானம் என்ற நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது . திருக்குறளுக்கு முதல் முறையாக உரை எழுதிய பரிமேலழகர் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் சமையல்காரராக இருந்தவர்.
காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஏகாதசியிலும், அதாவது ஒவ்வொரு சந்திர மாதத்தின் 11 ஆம் தேதியிலும், விஷ்ணுவுடன் தொடர்புடைய ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. மூன்று தளங்கள் கொண்ட இங்கு நடு தளத்தில் கிடந்த கோலத்தில் விஷ்ணு ரங்கநாதப் பெருமாள் வீற்றிருக்கிறார்.. இந்த தளம் ஏகாதசியன்று மட்டுமே திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பயணி யுவான் சுவாங்கின் கல்வெட்டு காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ளது.
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வரதராஜ பெருமாள் கோயில், அதன் பிரமாண்டமான திருவிழாக்கள் மற்றும் நேர்த்தியான சிற்பங்களுக்காக கொண்டாடப்படுகிறது .இந்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு இட்லி பிரசாதமாக வழங்கப்படுகிறது.இது வேறெந்த ஆலயத்திலும் காண முடியாதது.காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் ஜெனரலான ராபர்ட் கிளைவ் கருட சேவை விழாவிற்கு இங்கு வருகை தந்து, ஒரு மதிப்புமிக்க நெக்லஸை (இப்போது கிளைவ் மஹர்கண்டி என்று அழைக்கப்படுகிறது) பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆட்சீசுவரர், உமையாட்சீசுவரர் என ஒரே கோயிலில் இரண்டு கருவறைகள் உள்ளன. உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் திருச்சுற்றில் அமைந்துள்ளது. இங்கு கொடி மரமும், பீடமும் ராஜகோபுரத்திலிருந்து விலகி இருக்கிறது.கொடி மரம் ஆட்சீஸ்வரர் சன்னதி நேரேயும், ராஜகோபுரம் உமைஆட்சீஸ்வரர் சன்னதி நேரேயும் உள்ளது.இங்கு இரண்டு மூலவர்களும் முக்கியம் என்பதால் இப்படி உள்ளது என்கிறார்கள்.
கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழில் எழுதிய கந்தபுராணம்.காஞ்சி குமரக் கோட்டத்தில் முதல் முறையாக அரங்கேறியது.காஞ்சிபுரத்தில் உள்ள 11 கோவில்களை உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத பெருமை இது.காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து சாலை மற்றும் ரயில் மூலம் செல்லலாம். இங்கு சுற்றுலா செல்ல அக்டோபர் முதல் மார்ச் சிறந்த நேரமாக இருக்கும். அப்போது வானிலை இனிமையாகவும், கோயில் திருவிழாக்கள் சிறப்பாகவும் இருக்கும்.