வைணவ திவ்ய தேசங்கள் 108ல், ஒவ்வொரு திவ்ய தேசமும் தனக்கென ஒரு தனிச்சிறப்பு கொண்டுள்ளது. அந்த வகையில் தேரழுந்தூரும் தம் பெயர் காரணத்தாலேயே தனி சிறப்பு பெற்றிருக்கிறது. ஆம்.விண்ணில் பறந்த தேரின் நிழலை , மண்ணில் தம் திருவடியால் இத்தலத்தில் அழுத்தி இவ்வூருக்கு தேரழுந்தூர் என்ற சிறப்பு பெயர் பெற்று தந்தவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாதான். தேரழுந்தூரில் நடைபெறும் வைகாசி பிரம்மோத்ஸவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வைகாசி பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வே தேரழுந்தூரில் நடக்கும் தேரோட்ட திருவிழாதான்.
தேர் அழுந்தியதால், தேரழுந்தூர் என்று பெயர் பெற்ற இந்த திவ்ய தேசத்தில் மே 29ம் தேதி (இன்று) தேரோட்டம் நடக்கவிருக்கிறது. கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த ஊர் இதுவே. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தமது கன்றுகளுடனும், மாடுகளுடனும் விளையாடிய ஊர் இதுவே என்பது இந்த திவ்ய தேசத்துக்கு கூடுதல் சிறப்பு.
மூலவர், தேவாதி ராஜன். கோசகன் என்பதே இவரது சமஸ்கிருத பெயர். கோ என்றால் பசு. பசுக்களுக்கு நண்பனாய் இங்கே பெருமாள் நின்று கொண்டிருப்பதால், கோசகன் ஆனார். உத்ஸவர் ஆமருவியப்பன்(ஆ என்றால் பசு, மருவி என்றால் விட்டு விலகாமல் இருப்பவன்) என்ற அழகான தமிழ் பெயரோடு, கன்றுகளோடும் பசுவோடும் மட்டுமின்றி, மூலஸ்தானத்தில், தமக்கு கருட விமானம் தந்த கருடாழ்வாரோடும், பிரஹ்லாதனோடும் , காவிரி தாயாரோடும், தாம் மோட்சம் அளித்த மார்க்கண்டேய மஹரிஷியோடும் காட்சி தருகிறார் தேவாதி ராஜ பெருமாள் இந்த கிருஷ்ணாரன்ய க்ஷேத்ரத்திலே.
திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாள் மீது தம் 45 பிரபந்த பாசுரங்களின் வழி மங்களாசாசனம் செய்திருக்கிறார். திருமங்கையாழ்வார் தேரழுந்தூர் வந்து இப்பெருமாளை தரிசனம் செய்தபோது, பெருமாள் தேவாதி ராஜனாக, கம்பீரமாகக் காட்சி கொடுத்ததை பார்த்து விட்டு, ‘ஓ இவர் யாரோ ஒரு அரசர் போலிருக்கிறது’ என்று எண்ணிக்கொண்டு திருமங்கையாழ்வார் கோயிலை விட்டு வெளியேறி விட, அவர் அவ்வூரில் உள்ள புஷ்கரிணிக்கு சென்ற போது, அவரது கால்கள் மேலும் நடைபோட முடியாமல் தடுமாறி நின்றதாம். நம் கால்கள் ஏன் தடுமாறுகிறது என்று எண்ணிக்கொண்டே திருமங்கையாழ்வார் பெருமாளின் சன்னிதியை நோக்கி திரும்பிப் பார்த்துபோது, அங்கே ஆமருவியப்பனாய், கண்ணனாய் கன்றுகளோடும், பசுவோடும் காட்சி தந்தாராம் பெருமாள்.
அப்படிப் பெருமாளை பார்த்த உடன் திருமங்கையாழ்வாரின் திருவாக்கிலிருந்து வந்தவைதான் தேரழுந்தூரை பற்றிய பாசுரங்களாக நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பிடித்த பாசுரங்கள். தேரழுந்தூரின் இயற்கை வளங்களையும் இப்பெருமானின் எளிய இனிய திருக்கோலத்தையும், வடிவழகையும் அழகாய் அனுபவித்து நமக்கு அந்த அனுபவத்தை அளிக்கிறார் திருமங்கையாழ்வார் தம் பாசுரங்களின் வழி.
‘நெல்லில் குவளை கண் காட்ட
நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி
அழுந்தூர் நின்றானை
வல்லிப்பொதும்பில் குயில் கூவும்
மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை
சொல்லப்பாவம் நில்லாவே’
என்று தேரழுந்தூரின் அழகையும் அவ்வூரில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஆமருவியப்பனின் அழகையும் அழகாய் நம் முன் நிறுத்தி இருக்கிறார் திருமங்கையாழ்வார். பரகால நாயகியாய் தம்மை பாவித்துக் கொண்டு ஆமருவியப்பனிடம் வண்டுகளை தூதனுப்பிய ஆழ்வார்களின் பாசுரங்களை என்னவென்று சொல்வது?
உபரிசிரவசு என்ற பெயர் கொண்டு ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான் ஒரு அரசன். உபரி என்றால் ஆகாயம் என்றே பொருள். அந்த அரசன் கடும் தவம் புரிந்து பிருஹ்மாவிடமிருந்து வித்தியாசமான ஒரு வரத்தைப் பெற்றுக்கொண்டான். அது என்னவென்றால், தனது தேரானது வானத்தில் போகும்போது அந்த தேருக்கோ அல்லது அந்த தேரின் நிழலுக்கோ எந்தத் தடையும் இல்லாமல் போக வேண்டும் என்பதே அந்த வரம்.
தான் வாங்கிய வரத்தின்படி உபரிசிரவசு தம் தேரை செலுத்திக்கொண்டு வானத்தில் போகும்போது, கீழே இருந்த கண்ணனின் பசுக்களும் கன்றுகளும் தன் தேரின் நிழலை தடை செய்வதை போல உணர்ந்தான் அந்த அரசன். அந்த தேரின் நிழலில் பசுக்களும், கன்றுகளும், இடையர்களும் மாட்டிக்கொண்டு இறந்து விட, இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண பரமாத்மா அந்தத் தேரின் நிழலை பிடித்து இழுக்க, அந்தத் தேர் அப்படியே அழுந்தி விட்ட இடமே இந்த தேரழுந்தூர் . தேர் அழுந்திய தேரழுந்தூரின் அழகான தேரோட்டத்தை, மே 29ம் தேதி இன்று மனக்கண்ணால் கண்டு களித்து கண்ணனின் அருளைப் பெறுவோமா?