பெருமாளே, ‘என் அம்மாவே’ என்றழைத்த நடாதூரம்மாள்!

Vedhantha Desikar and Nadaathurammal
வேதாந்த தேசிகரும் நடாதூரம்மாளும்https://www.facebook.com

காஞ்சிபுரத்தில் அவதரித்த நடாதூர் அம்மாளின் இயற்பெயர் வரதராஜன். இவர் நடாதூராழ்வானின் பேரனாவார். இவருடைய ஆச்சார்யர் எங்களாழ்வான். இவருக்கு ச்ருதப்ரகாசிகாபட்டர், கிடாம்பி அப்பிள்ளார் என பல சிஷ்யர்கள் இருந்தார்கள்.

வரதராஜன் தனது பாட்டனாரான நடாதூராழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், அவருக்கு வயதாகி விடவே, அவர் வரதராஜனிடம் எங்களாழ்வானை ஆச்சார்யராக ஏற்று அவரிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ளும்படி பணித்தார். இதை ஏற்று ஒரு நாள் எங்களாழ்வான் இல்லத்தை அடைந்து கதவைத் தட்டினார். ‘வந்திருப்பது யார்’ என்று கேட்டார். அதற்கு அம்மாள் ‘நான் வரதன் வந்திருக்கிறேன்’ என்று சொன்னார். இதைக் கேட்ட எங்களாழ்வான் உடனே, “நான் செத்தவுடன் திரும்பி வா” என்று கூறி அனுப்பினார்.

அம்மாள் தனது இல்லம் திரும்பி நடாதூராழ்வானிடம் இது குறித்து கூறினார். அதற்கு நடாதூராழ்வான், “அவர் சொன்னது சரிதான். நம்மை பிறரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது நான் என்று கூறக் கூடாது. நான் என்பது அகந்தையின் வெளிப்பாடு. அடியேன் என்று பணிவுடன் கூறுவதே சரி” என்றார். அவ்வாறே மறுநாள் எங்களாழ்வானின் இல்லம் சென்ற வரதன், அவர் வீட்டுக் கதவினைத் தட்ட, “வந்திருப்பது யார்?” என்று எங்களாழ்வான் வினவினார். அதற்கு வரதன், “அடியேன் வரதன் வந்துள்ளேன்” என்று பதிலுரைக்க, எங்களாழ்வான் மகிழ்ச்சியோடு வரதனை வரவேற்று தனது சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு வைணவ சம்பிரதாங்களைக் கற்பித்தார்.

வரதராஜன் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கோயில் பெருமாள் சன்னிதியில் கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது மடைப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் இரவு பூஜையின்போது பெருமாளுக்கு நிவேதனம் செய்ய சூடான பாலைக் கொண்டு வந்து கொடுத்தார். அர்ச்சகரும் அந்த சூடான பாலை பெருமாளுக்கு நிவேதனம் செய்ய ஆயத்தம் செய்தார். இதைக்கண்டு பதறிய வரதராஜன் அர்ச்சகரிடம், “சூடான பாலை பெருமாளுக்கு நிவேதனம் செய்கிறீரே. சூடான பாலைப் பருகினால் வரதராஜப் பெருமாளின் திருவாய்க்கு தீங்கு நேரும் என்பது உமக்குத் தெரியாதா?” என்று கோபித்தவாறு அர்ச்சகரிடமிருந்து பாலை வாங்கி பதமாக ஆற்றி மிதமான சூட்டை அடைந்ததும் அதை பெருமாளுக்கு ஒரு தாயின் பாசத்தோடு நிவேதனம் செய்தார்.

வரதராஜனின் பாசம் ஒரு தாயின் பாசத்திற்கு ஈடானது என்பதை அறிந்து நெகிழ்ந்த வரதராஜப்பெருமாள், “என் அம்மாவே” என்று அழைத்தார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். அன்று முதல் வரதராஜன், ‘நடாதூர் அம்மாள்’ என்று அழைக்கப்பட்டார்.

நடாதூர் அம்மாள் தினமும் காஞ்சி பேரருளாளன் வரதராஜர் கோயிலில் உபன்யாசம் செய்வது வழக்கம். ஒரு நாள் ஐந்தே வயதான ஒரு குழந்தையை அக்குழந்தையின் அம்மானான கடாம்பி அப்புள்ளார் உபன்யாசத்திற்கு அழைத்து வந்திருந்தார்.

நடாதூர் அம்மாள் அக்குழந்தையின் முக தேஜசைக் கண்டு மயங்கினார். சற்று இடைவெளியில் தனது உபன்யாசத்தைத் தொடர நினைத்தபோது எங்கே நிறுத்தினோம் என்று யோசிக்கத் தொடங்கி சற்றுத் தடுமாறினார். இதை கவனித்த அக்குழந்தை நடாதூர் அம்மாள் விட்ட இடத்தை அடி எடுத்துக் கொடுத்து நினைவூட்டியது. இதைக் கண்டு வியந்து மகிழ்ந்த நடாதூர் அம்மாள் குழந்தையை அள்ளி எடுத்து மகிழ்ந்து அப்புள்ளாரிடம், “இவனுக்கு உபநயனம் செய்து பஞ்ச சம்ஸ்காரங்களையும் செய்வியுங்கள்” என்று கூறினார். அந்தக் குழந்தையே ஸ்வாமி தேசிகன். நடாதூர் அம்மாள் நினைத்து போலவே பிற்காலத்தில் ஸ்வாமி தேசிகன் பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்து வைணவம் வளர்த்தார்.

இதையும் படியுங்கள்:
தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?
Vedhantha Desikar and Nadaathurammal

நடாதூர் அம்மாள் தத்வஸாரம், ஸ்ரீபாஷ்ய உபன்யாசம், ப்ரமேயமாலை, எதிராஜ விஜயாபநம்பரத்வாதி பஞ்சகம், பரமார்த்தச்லோக த்வயம், கஜேந்திர மோக்ஷ ஸ்லோகத்வயம், ப்ரபன்ன பாரிஜாதம், சரமோபாய ஸங்கிரஹம் என பல நூல்களை இயற்றியுள்ளார்.

குரு பரம்பரையில் ஸ்ரீராமானுஜர், எங்களாழ்வான், நடாதூர் அம்மாள் என்ற வரிசையைக் காணலாம். நடாதூர் அம்மாளுக்கு ஆசாரியனாக இருந்த காரணத்தினால் எங்களாழ்வானை, ‘அம்மாள் ஆசாரியன்’ என்றும் அழைப்பது வழக்கம். நடாதூர் அம்மாள் காஞ்சிபுரத்தில் இருந்து திருநாடு சென்றடைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com