தைராய்டு என்பது வண்ணத்துப் பூச்சி வடிவம் கொண்ட ஒரு சுரப்பி. இது தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிற்கும், இதயத் துடிப்பு, மெட்டபாலிசம், உடலின் வெப்ப நிலை ஆகியவற்றின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகிறது. ஆட்டோ-இம்யூன் (Autoimmune) தாக்குதலால் தைராய்டு பிரச்னை உருவாகிறது. இது அதிகளவில் பெண்களைத் தாக்கும். தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு கூடவோ அல்லது குறையவோ இருக்கும்போது தைராய்டின் செயல்பாடுகள் கூடவோ அல்லது குறையவோ செய்கின்றன. இதுவே முறையே ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் எனப்படுகிறது.
மெட்டபாலிச ரேட் அதிகரிப்பது, திடீர் எடை குறைவு அதிகளவு வியர்வை, படபடப்பு, கை நடுக்கம் போன்றவை ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள். மெட்டபாலிச ரேட் குறைதல், எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், மாதவிடாய் கால அளவில் வேறுபாடு, இதயத் துடிப்பின் அளவில் குறைபாடு போன்றவை ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள்.
கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன்களின் உதவி அவசியமாகிறது. தாயின் தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்களே குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக உருவாகவும் உதவுகிறது. பன்னிரண்டு வாரங்கள் முடியும் வரை குழந்தை தனது தாயின் ஹார்மோன்களின் உதவியிலேயே வளர்கிறது.
அந்நிலை உருவாகும்போது தாயின் தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன் அளவு கூடுகிறது. இதனால் பல பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு பிரச்னை போன்ற உடல் நலக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. தைராய்டு பிரச்னை கருத்தரிக்கும் முன்பும், குழந்தை பிறந்த பின்பும் கூட உண்டாவதற்கு வாய்ப்புள்ளது.
தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிற்கு அயோடின் சத்து அத்தியாவசியம். இச்சத்தை உட்கொள்வதில் குறையேற்படும்போது தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிலும் குறை ஏற்பட்டு குழந்தையின் வளர்ச்சியிலும் அறிவாற்றலிலும் குறையேற்படுகிறது.
கருவுற்ற பெண்களின் தைராய்டு பிரச்னை சரியான திசையில் கையாளப்படாவிடில் குறைப் பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, கருச்சிதைவு போன்ற பயங்கர விளைவுகளை சந்திக்க நேரும். எனவே, கருவுற்ற பெண்கள் தங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு தைராய்டு ஹார்மோன் சுரப்பின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
மேலும், உட்கொள்ளும் உணவில் அயோடின் சத்து அதிகம் உள்ள முட்டை, யோகர்ட், பால் போன்றவற்றுடன் பிற ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சேர்த்து உண்ணுதல், யோகா, மெடிடேஷன் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு ஸ்ட்ரெஸ் ஃபிரீ மனநிலையில் இருப்பது, உடற்பயிற்சி செய்தல், உடல் எடையை சரியான அளவில் வைத்துப் பராமரித்தல் போன்ற சிறப்பான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றினால் தாயும் சேயும் முழு ஆரோக்கியம் பெறலாம்.