பெருமாளின் சயனத் திருக்கோலங்கள் தெரியுமா?

சயனக் கோல பெருமாள்
சயனக் கோல பெருமாள்

கவான் மகாவிஷ்ணு ஆதிசேஷன் எனும் பாம்பின் மீது சயனம் கொண்டிருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால், பெருமாளின்இந்த சயனத்திலும் பல்வேறு நிலைகளில்  வீற்றிருந்த அருள்புரிவதை பார்த்திருப்போம். திருமாலின் சயனத் திருக்கோலங்கள் பற்றி இந்தப் பதிவில் அறிவோம்.

1. ஜல சயனம், 2. தல சயனம், 3. புஜங்க சயனம் (சேஷ சயனம்), 4. உத்தியோக (உத்தான) சயனம், 5. வீர சயனம், 6. போக சயனம், 7. தர்ப்ப சயனம், 8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை), 9. மாணிக்க சயனம் ஆகிய ஒன்பது சயனக் கோலங்களில் காட்சி தருகிறார். இனி இத்திருக்கோல சயனம் குறித்து அறிவோம்.

1. திருமாலின் சயனக் கோலங்களில் மக்கள் தங்கள் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ‘ஜல சயனம்’ 107வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.

2. ‘தல சயனம்’ கடல்மல்லை எனும் 63வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் தலத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருவது அற்புத கோலம்.

3. ‘புஜங்க சயனம்’ அல்லது சேஷ சயனம் முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்துக் காட்சி தருகிறார்.

4 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான ‘உத்தியோக சயனம்’ (உத்தான சயனம்) 12வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போன்ற உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு என்பது சிறப்பு.

5. ‘வீர சயனம்’ 59வது திவ்ய தேசமான திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம்தான் திருஎவ்வளூர். இங்கு திருமால் (வீரராகவப் பெருமாள்) வீர சயனத்தில் காட்சி தருகிறார்.

6. போக சயனம் 40வது திவ்ய தேசமான திருசித்திரக்கூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.

இதையும் படியுங்கள்:
காலத்தால் முந்தைய மூத்த கணபதி அருளும் திருத்தலம் எது தெரியுமா?
சயனக் கோல பெருமாள்

7. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக் கோலமான தர்ப்ப சயனம் 105வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

8. பத்ர சயனம் 99வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள்) வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில், ‘ஆலமரத்து இலை’ என்று பொருள்.

9. மாணிக்க சயனம் 61வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிப்பது சிறப்பு.

இனி பெருமாளை வணங்கும் போது இந்த சயனக்கோலம் பற்றி அறிந்து வழிபடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com